பக்கம் - 214 -
6) ‘ஸஃப்வான்“
ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ‘குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்’ என்பவன் சில முஷ்ரிக் வீரர்களுடன் மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றான். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்களின் எழுபது தோழர்களை அழைத்துக் கொண்டு அவனை விரட்டிப் பிடிப்பதற்காக விரைந்தார்கள். பத்ருக்கு அருகிலுள்ள ‘ஸஃப்வான்’ என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால் சண்டையின்றி திரும்பினார்கள். இந்தப் போருக்கு ‘முதல் பத்ர் போர்’ என்றும் பெயர் கூறப்படுகிறது.
இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் தனது பிரதிநிதியாக ஜைது இப்னு ஹாரிஸாவை நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.
7) ‘துல் உஷைரா“
ஹிஜ் 2, ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் ‘துல் உஷைரா’ என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது. இதே வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து திரும்ப வரும்போது அதை வழிமறிப்பதற்காகச் செல்லும் போதுதான் பிரபலமான இரண்டாவது பத்ர் போர் (பத்ர் அல் குப்ரா) நடைபெற்றது.
நபி (ஸல்) ஜுமாதா அல்ஊலா கடைசியில் இப்போருக்காக வெளியேறி ஜுமாதா அல்ஆகிரா தொடக்கத்தில் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.
முஸ்லிம்கள் மீது அத்துமீறக் கூடாது என முத்லிஜ், ழம்ரா மற்றும் அவர்களுடைய நட்பு கிளையினருடன் இப்பயணத்தில் நபி (ஸல்) ஒப்பந்தம் செய்தார்கள்.
இப்போருக்கு நபி (ஸல்) சென்ற போது மதீனாவில் அபூஸலமா இப்னு அப்துல் அஸத் அல்மக்ஜூமி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. இதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
8) ‘நக்லா“
ஹிஜ் 2, ரஜப் (கி.பி. 624 ஜனவ) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை ‘நக்லா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தனர்.
நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள்.