பக்கம் - 215 -
அக்கடிதத்தில் “நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாயிஃபிற்கு மத்தியிலுள்ள ‘நக்லா’ என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!” என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
“நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால், நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள் தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் “போருக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸும், உத்பா இப்னு கஸ்வானும் தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ‘நக்லா’ என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். “நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்” - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.
அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்” அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மேலும், “சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே!” என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தினர். முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப் பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை அல்லாஹ் குர்ஆனில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.