பக்கம் - 216 -
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை (நீங்கள்) நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ல் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில், (அதை விட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையை விட மிகக் கொடியது. (அல்குர்ஆன் 2:217)
அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும் கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும் முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும் தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்த போது அவர்களது பொருட்கள் அபகரிக்கப் பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும் உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப் பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே, இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே!
இவ்வசனம் இறக்கப்பட்டதற்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள். மேலும், கொலை செய்யப்பட்டோன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடும் வழங்கினர்கள். (ஜாதுல் மஆது)
மேற்கூறப்பட்ட (கஸ்வா, ஸய்யா) போர்கள் அனைத்தும் பத்ர் போருக்கு முன் நிகழ்ந்தவையாகும். இறுதியில் கூறப்பட்ட போரைத் தவிர வேறெதிலும் பொருட்கள் சூறையாடப்படவுமில்லை உயிர்கள் கொலை செய்யப்படவுமில்லை. ஆனால், குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்யீன் தலைமையின் கீழ் இணைவைப்பவர்கள் முஸ்லிம்களின் பொருட்களை கொள்ளையடித்த பின்பே முஸ்லிம்கள் பதில் நடவடிக்கை எடுத்தனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்கா முஷ்ரிக்குகள் பயந்து நடுங்கினர். மிகப்பெரிய ஆபத்து தங்களுக்கு முன் உருவாகி விட்டதை உணர்ந்தனர். முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்துவிட்டால் எத்தகைய ஆபத்து நிகழும் என்று பயந்தனரோ அந்த ஆபத்தில் இப்போது சிக்கிக் கொண்டனர். மதீனாவாசிகள் மிகுந்த விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருக்கிறார்கள் தங்களின் வணிகப் பயணங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கண்காணிக்கின்றனர் முஸ்லிம்கள் 300 மைல்கள் கூட படையெடுத்து வந்து தங்களைக் கொலை செய்யவோ, சிறைபிடிக்கவோ, தங்களின் செல்வங்களை அள்ளிக்கொண்டு நிம்மதியாக திரும்பவோ முழு ஆற்றல் பெற்றுவிட்டனர் என்பதை இப்போது இந்த இணைவைப்பவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர்.