பக்கம் - 217 -
மேலும், தங்களின் ஷாம் தேசத்தை நோக்கிய வியாபார வழித்தடம் மிகுந்த ஆபத்திற்குள்ளாகி இருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டனர். இருந்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகி ஜுஹைனா மற்றும் ழம்ரா கிளையினர் செய்ததைப் போன்று சமாதான வழியைக் கையாள் வதற்குப் பதிலாக மீண்டும் முன்பை விட அதிகமாக பகைமை கொள்ளலானார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை அவர்களது நாட்டுக்குள் வைத்தே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்ததை இப்போது நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூண்டனர். மடத்தனமான இந்த எண்ணம்தான் இவர்களை பத்ர் போருக்கு அழைத்து வந்தது.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் இந்த சம்பவத்திற்குப் பின்பு ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் புரிவதை கடமையாக்கினான். இவ்விஷயத்தில் பல தெளிவான வசனங்களை இறக்கினான்.
உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) அத்துமீற வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
ஆகவே (உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்துப் போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்துப் போர் புரியாது) விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராகச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு), அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்து மீறக்கூடாது. (அல்குர்ஆன் 2:190-193)
மேற்கூறப்பட்ட வசனங்களைத் தொடர்ந்து மேலும் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் போர் முறைகளைக் கற்றுக் கொடுத்து, போருக்கு ஆர்வமூட்டி அதன் சட்டங்களை விவரித்தான்.