பக்கம் - 237 -
இவ்வாறுதான் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியானைப் பார்த்து எப்போது சிரிக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “எந்தவித தற்காப்பு ஆடையும் அணியாமல் எதிரிகளுக்குள் தனது கையை அடியாரின் செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்” என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன், தான் அணிந்திருந்த கவச ஆடையைக் கழற்றி எறிந்து விட்டு எதிரிகளிடம் போர் புரிந்து வீரமரணம் எய்தினார்.
எதிர்த்துத் தாக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளைப் பிறப்பித்தவுடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் பாய்ந்தனர் அணிகளைப் பிளந்தனர் தலைகளைக் கொய்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள், எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகமும் குறைந்தது வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல! அன்று நபி (ஸல்) கவச ஆடை அணிந்து, யாரும் நெருங்க முடியாத அளவு எதிரிகளுக்கருகில் நெருங்கி நின்று,
அதிசீக்கிரத்தில் இந்த கூட்டம் சிதறடிக்கப்படும். மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)
என்று உறுதியுடன் மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்காட்சியைப் பார்த்த முஸ்லிம்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் பன்மடங்கு பெருகின. (ஸஹீஹுல் புகாரி)
ஆகவே, முஸ்லிம்கள் மிகத் துணிவுடன் சண்டையிட்டார்கள். வானவர்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
அபூஜஹ்லின் மகன் இக்மா கூறுகிறார்: அன்றைய தினத்தில் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழும் ஆனால், அவரை வெட்டியவர் யாரென்று தெரியாது. (இப்னு ஸஅது)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள்: ஒரு முஸ்லிம் எதிரியைத் தாக்க பின்தொடர்ந்து செல்லும் போது மேலிருந்து ஒரு சாட்டையின் ஒலியையும் ‘ஹைஸூமே! முன்னேறு’ என்று கூறும் ஒரு குதிரை வீரன் அதட்டலையும் கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம், எதிரியை பார்க்கும் போது அந்த எதிரி மூக்கு அறுக்கப்பட்டு, முகம் பிளக்கப்பட்டு மல்லாந்துக் கிடந்தான். அவனது உயிர் முற்றிலும் பிந்திருந்தது. அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினார். “ஆம்! நீர் உண்மைதான் கூறுகிறீர். அது மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய உதவியாகும்” என்று நபி (ஸல்) விளக்கமளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூதாவூது அல் மாஸினி (ரழி) கூறுகிறார்கள்: நான் ஒரு எதிரியை வெட்டுவதற்காக அவனை பின்தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது படுவதற்கு முன்னதாகவே அவனது தலை கீழே விழுந்தது. எனவே, வேறு யாரோ அவனை வெட்டினார்கள் என்று நான் அறிந்து கொண்டேன்.
அன்சாரிகளில் ஒருவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். அப்பாஸ் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது சிறந்த குதிரையின் மீது அமர்ந்து வந்த மிக அழகிய முகமுடைய ஒருவர்தான். ஆனால், இப்போது அவரை நான் இந்தக் கூட்டத்தில் பார்க்கவில்லையே?” என்று கூறினார். அதற்கு அன்சாரி “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவரைக் கைது செய்தேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் அமைதியாக இருங்கள்! அல்லாஹ்தான் சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்” என்று கூறினார்கள்.