பக்கம் - 238 -
அலீ (ரழி) கூறினார்கள்: பத்ர் போரில் என்னையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் பார்த்து நபி (ஸல்) “உங்கள் இருவரில் ஒருவருடன் ஜிப்ரீலும், மற்றொருவருடன் மீக்காயிலும் இருக்கிறார். பெரிய வானவரான இஸ்ராஃபீலும் போரில் கலந்திருக்கிறார்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பஜ்ஜார், முஸ்தத்ரகுல் ஹாகிம்)
நழுவுகிறான் இப்லீஸ்
சுராகா இப்னு மாலிகின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் இணைவைப்பவர்களை வானவர்கள் வெட்டுவதைப் பார்த்தவுடன் போர் களத்திலிருந்து நழுவினான். அவனை உண்மையிலேயே சுராகா என்று எண்ணியிருந்த ஹாரிஸ் இப்னு ஹிஷாம் அவனை தப்ப விடாமல் இருக்க பிடித்துக் கொண்டார். ஹாரிஸின் நெஞ்சில் அடித்து அவரைக் கீழே தள்ளி விட்டு இப்லீஸ் ஓடினான். மற்றவர்கள் “சுராகாவே! எங்கே ஓடுகிறீர்? எங்களை விட்டுப் பிரியாமல் கடைசி வரை எங்களுடன் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தீரே?” என்றனர். அதற்கு ஷைத்தான்,
“நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன் நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன் வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்” (அல்குர்ஆன்:48)
என்று கூறிக் கொண்டே, வெருண்டோடி கடலில் குதித்தான்.
பெரும் தோல்வி
எதிரிகளின் அணியில் சலசலப்பும், தோல்வியின் அடையாளங்களும் வெளிப்பட்டன. முஸ்லிம்களின் கடுமையானத் தாக்குதலுக்கு முன் இணைவைப்போரின் அணி சின்னா பின்னமாகியது போர் முடிவை நெருங்கியது. எதிரிகள் நாலா பக்கங்களிலும் விரைந்தோடித் தப்பிக்க முயன்றனர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து பணிந்தவரை கைது செய்து பணியாதவரை வெட்டி வீழ்த்தினர். இவ்வாறு இணைவைக்கும் எதிரிகள் போரில் பெரும் தோல்வியடைந்தனர்.
அபூஜஹ்லின் வீம்பு
வம்பன் அபூஜஹ்ல் தனது அணியில் சலசலப்பைப் பார்த்தவுடன் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் படையை உற்சாகப்படுத்த முயன்றான். பெருமையுடனும் திமிருடனும் அவன் தனது படையைப் பார்த்து “சுராகா உங்களை விட்டுப் பிரிந்து சென்றதால் நீங்கள் தோற்றுவிட வேண்டாம். ஏனெனில், அவன் முஹம்மதுக்கு இவ்வாறுதான் (படையை விட்டுப் பிரிந்து செல்வதாக) வாக்குக் கொடுத்திருந்தான். உத்பா, ஷைபா, வலீத் கொல்லப்பட்டதால் நீங்கள் பயந்துவிட வேண்டாம். அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள். லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! இந்த முஸ்லிம்களை கயிற்றில் பிணைத்துக் கட்டாதவரை நாம் திரும்ப மாட்டோம். நீங்கள் முஸ்லிம்களில் எவரையும் கொன்றுவிட வேண்டாம். மாறாக, அவர்களைப் பிடித்து கைதிகளாக்கிக் கொண்டு வாருங்கள். அவர்கள் செய்த தீய செயலை அவர்களுக்குப் புரிய வைப்போம்.”