பக்கம் - 264 -
(நபியே!) வேதத்தில் சில பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்க வில்லையா? அவர்கள், சிலைகளையும் ஷைத்தான்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து “இவர்கள் தாம் இறைநம்பிக்கையாளர்களை விட மிக நேரான பாதையில் இருக்கின்றனர்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 4:51)
இதே நிலையில் மதீனா திரும்பினான் கஅப். அங்கு நபித்தோழர்களின் பெண்களை தனது கவியில் இகழ்ந்தும் பழித்தும் பாடி அவர்களுக்குப் பெரும் நோவினை செய்தான்.
இவ்வாறு இவனது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே, “கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை முடிப்பது யார்? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்” என்று நபி (ஸல்) கேட்டார்கள். இப்பொறுப்பை நிறைவேற்ற முஹம்மது இப்னு மஸ்லமா, அப்பாத் இப்னு பிஷ்ர், அபூ நாம்லா என்ற ஸில்கான் இப்னு ஸலாமா (இவர் கஅபின் பால்குடி சகோதரர் ஆவார்), ஹாரிஸ் இப்னு அவ்ஸ், அபூ அப்ஸ் இப்னு ஜப்ர் (ரழி) ஆகியோர் தயாரானார்கள். இந்தக் குழுவிற்குத் தலைவராக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) நியமிக்கப்பட்டார்.
நபிமொழி நூற்களில் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை நாம் இங்கு பார்ப்போம்:
நபி (ஸல்) “கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை யார் முடிப்பது? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்” என்றார்கள். முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு விருப்பமாக இருப்பின் நான் அவனைக் கொலை செய்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் “தங்களைப் பற்றி சில (மட்டமான) வார்த்தைகளை அவனிடம் கூற, நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்” என்றார். நபி (ஸல்) “சரி” என்று கூறினார்கள்.
இதற்குப் பின் முஹம்மது இப்னு மஸ்லமா கஅபிடம் வந்தார். இதோ... அவர்களின் உரையாடல்:
முஹம்மது இப்னு மஸ்லமா: “இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் தர்மத்தைக் கேட்டு சிரமத்தில் ஆழ்த்துகிறார்.”
கஅப்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் விஷயத்தில் நீங்கள் அதிவிரைவில் சடைவடைந்து விடுவீர்கள்.”
முஹம்மது இப்னு மஸ்லமா: “நாங்கள் இப்போது அவரைப் பின்பற்றியிருக்கிறோம். அவரது முடிவு என்னதான் ஆகிறது என்று பார்க்கும்வரை அவரை விட்டு விலகுவதை நாங்கள் விரும்பவில்லை. அது சரி! நீ எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மரக்கால் தானியங்களை கடனாகக் கொடுத்துதவு.”
கஅப்: “சரி! தருகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக என்னிடம் அடைமானம் ஏதும் வையுங்கள்.”
முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ எதைக் கேட்கிறாய்?”