பக்கம் - 265 -
கஅப்: “உங்கள் பெண்களில் சிலரை என்னிடம் அடைமானம் வையுங்கள்.”
முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ அரபியர்களில் மிக அழகானவனாயிற்றே. உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை அடைமானம் வைக்க முடியும்?”
கஅப்: “சரி! உங்களது பிள்ளைகளை அடைமானம் வையுங்கள்.”
முஹம்மது இப்னு மஸ்லமா: “எப்படி எங்கள் பிள்ளைகளை அடைமானம் வைப்பது? பிற்காலத்தில் அவர்களை யாராவது ஏசும்போது, இதோ இவன் ஒரு மரக்கால் இரண்டு மரக்காலுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன் என்று இழிவாகப் பேசுவார்களே! எனவே, நாங்கள் உம்மிடம் எங்களது ஆயுதங்களை அடைமானமாக வைக்கிறோம்.”
கஅப்: “சரி”
முஹம்மது இப்னு மஸ்லமா: “நாளை வருகிறேன்.”
கஅப் அங்கிருந்து புறப்பட்ட பின், நபித்தோழர் அபூ நாம்லாவும் கஅபைச் சந்தித்தார். அவரும் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) செய்ததைப் போன்றே செய்தார். கஅபிடம் பல கவிகளைப் பற்றி பேசிவிட்டு “கஅபே! நான் ஒரு தேவைக்காக உன்னிடம் வந்திருக்கிறேன். அதை நீ பிறரிடம் கூறக்கூடாது” என்றார். கஅப், “அவ்வாறே நான் செய்கிறேன்” என்றான். அதற்கு அபூ நாம்லா, “கஅபே! இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் வந்தது எங்களுக்கு ஒரு சோதனையாக ஆகிவிட்டது. அரபியர்கள் எங்களைப் பகைத்துக் கொண்டனர் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர் எங்களின் வியாபார வழிகளை அடைத்துவிட்டனர் இதனால் எங்களது பிள்ளை குட்டிகள் வறுமையில் வாடுகின்றனர் நாங்களும் பெரிய சிரமத்திற்குள்ளாகி விட்டோம்” என்று கூறி, மற்ற விஷயங்களை முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) பேசியவாறே பேசினார். பேச்சுக் கிடையில் என்னுடன் எனக்கு வேண்டிய சில நண்பர்களும் இருக்கின்றனர். நான் அவர்களை நாளை உன்னிடம் அழைத்து வர நாடுறேன். அவர்களிடம் நீ வியாபாரம் செய்யலாம். அவர்களுக்கும் உன்னால் முடிந்த நன்மைகளையும் செய்” என்று பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
ஆக, முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூ நாம்ளாவும் கஅபுடன் எதை நோக்கமாக வைத்து பேசினார்களோ அதில் வெற்றி கண்டனர். இவ்வாறு நாளுக்கு நாள் சந்திக்க இவர்களின் பழக்கம் நல்ல பலமடைந்தது. எனவே, இந்த இருவரும் தங்களுடன் ஆயுதங்களை எடுத்து வருவதை கஅப் தடை செய்யவிலை.
ஹிஜ் 3, ரபீஉல் அவ்வல், பிறை 14 சந்திர இரவில் இந்த சிறிய குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அக்குழுவுடன் ‘பகீஉல் கர்கத்’ வரை வந்து “அல்லாஹ்வின் பெயர் கூறி செல்லுங்கள்! அல்லாஹ்வே! இவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!” என்று கூறி வழியனுப்பி வைத்தார்கள். பிறகு தங்களின் இல்லம் திரும்பி தொழுகையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதிலும் ஈடுபட்டார்கள்.
இவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபின் கோட்டைக்கு வந்தனர். அபூ நாம்லா (ரழி) அவனைக் கூவி அழைக்கவே அவன் அவர்களிடம் செல்ல எழுந்தான். அவனது மனைவி அவனிடம் “இந்நேரத்தில் நீ எங்கு செல்கிறாய்? இந்த சப்தத்தில் இரத்தம் சொட்டுவதை நான் கேட்கிறேன்” என்று கூறினாள். (அதாவது அவளின் உள் மனது நடக்கப்போகும் அபாயத்தை உணர்ந்துவிட்டது போலும்.)
அதற்கு கஅப், “வந்திருப்பவரோ எனது சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், எனது பால்குடி சகோதரர் அபூ நாம்லாவும்தான். வேறு யாருமில்லை. சங்கைமிக்கவர் ஈட்டி எறிய அழைக்கப்பட்டாலும் கூட அதையும் ஏற்று அங்கு செல்வார்” என்ற பழமொழியைக் கூறி, மனைவியைச் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்களை சந்திக்க இறங்கினான். அவன் நன்கு நறுமணம் பூசி இருந்தான். அவனது தலை நறுமணத்தால் கமழ்ந்து கொண்டு இருந்தது.