பக்கம் - 266 -
இது இப்படியிருக்க, அபூ நாம்லா தனது தோழர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். அதாவது, “கஅப் நமக்கு அருகில் வந்தால் அவனது தலை முடியை பிடித்து நான் நுகருவேன். அவனது தலையை நன்கு நான் பிடித்துக் கொண்டதை நீங்கள் பார்த்தவுடன் அவன் மீது பாய்ந்து அவனை வெட்டுங்கள்.” இது அவர்களின் திட்டமாக இருந்தது.
கஅப் கீழே இறங்கி அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அபூ நாம்லா “கஅபே! ‘ஷிஅபுல் அஜுஸ்’ வரைச் சென்று, மீதி இரவு அங்கு பேசிக்கொண்டு இருப்போமே” என்றார். “நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யலாம்” என்று அவனும் கூறினான். அனைவரும் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்றனர். வழியில் அபூ நாம்லா, “இன்றைய நறுமணத்தைப் போல் நான் எங்கும் நுகர்ந்ததே இல்லை” என்றார். கஅப் இந்த புகழ்ச்சியில் மயங்கியவனாக “என்னிடத்தில் அரபுப் பெண்களில் மிக நறுமணமுள்ள பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளுக்காகத்தான் இந்த நறுமணம்” என்றான். அபூ நாம்லா, “நான் உனது தலையை நுகர்ந்துகொள்ள அனுமதி தருகிறாயா?” என்றார். அவன் “அதிலென்ன! நுகரலாமே!” என்றவுடன் தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து தானும் நுகர்ந்து கொண்டு தனது தோழர்களையும் நுகர வைத்தார்.
பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “நான் மீண்டும் நுகரலாமா?” என்றார். அவன் “சரி!” என்றவுடன் முன்பு போலவே இப்போதும் செய்தார்.
பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “மீண்டும் நுகரட்டுமா?” என்றார். அதற்கு அவன் சரி! என்றவுடன், தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து இறுக்க பிடித்துக் கொண்டு “இதோ... அல்லாஹ்வின் எதிரி மீது பாயுங்கள்” என்றார். அங்கிருந்த நபித்தோழர்கள் அவன் மீது வாட்களை வீசினர். ஆனால் அவன் சாகவில்லை. இதைப் பார்த்த முஹம்மது இப்னு மஸ்லமா தனது கூர்மையான கத்தியை எடுத்து அவனது தொப்புளுக்குக் கீழ் சொருகி, அவனது மர்மஸ்தானம் வரை கிழித்தார். அல்லாஹ்வின் எதிரி பெரும் சப்தமிட்டவனாக செத்து மடிந்தான். அவர்கள் அவனது தலையைக் கொய்து எடுத்துக் கொண்டனர். அவன் கத்திய கதறலில் அங்குள்ள கோட்டைகள் அனைத்திலும் விளக்குகள் எரிக்கப்பட்டன.
இக்குழுவினர் திரும்பினர். தோழர்களில் ஒருவன் வாளால் ஹாரிஸ் இப்னு அவ்ஸ் உடைய காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டிருந்ததால் அவர் சற்று பின்தங்கி விட்டார். இக்குழுவினர் ‘ஹர்ரத்துல் உரைஸ்’ என்ற இடம் வந்த போது தங்களுடன் ஹாரிஸ் வராததைப் பார்த்தவுடன் அங்கு சிறிது நேரம் எதிர்பார்த்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைத் தேடி, ஹாஸும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ‘பகீஉல் கர்கத்’ வந்தடைந்து அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட நபி (ஸல்), தோழர்கள் அவனைக் கொலை செய்து விட்டார்கள் என்பதை அறிந்து அவர்களும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார்கள். பின்பு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் “இம்முகங்கள் வெற்றியடைந்தன” என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களது முகமும் வெற்றியடைந்தது” என்று கூறி, அந்த ஷைத்தானின் தலையை நபி (ஸல்) அவர்களுக்கு முன் போட்டார்கள். அல்லாஹ்வின் எதிரி கஅபின் கதை முடிக்கப்பட்டதை நினைத்து நபி (ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள். ஹாரிஸின் கால் காயத்தைப் பற்றி அறியவே அதில் தங்களது உமிழ் நீரைத் தடவினார்கள். அவர் முழுமையாக சுகமடைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு வலி என்பதே இல்லை. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)