பக்கம் - 309 -
எதிரிகள் மதீனாவிற்குக் திரும்ப வரவேண்டுமென யோசிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பயந்தது உண்மையாகவே நடந்தது. எதிரிகள் மதீனாவிற்கு 36 மைல்கள் தொலைவிலுள்ள “ரவ்ஹா” என்ற இடத்தை அடைந்த போது தங்களுக்குள் ஒருவர் மற்றவரை பழித்துக் கொண்டனர். சிலர் சிலரைப் பார்த்து “நீங்கள் என்ன செய்தீர்கள்; ஒன்றுமே செய்யவில்லை; அவர்களில் சில வீரர்களைத்தான் கொன்றுள்ளீர்கள்; அவர்களின் தலைவர்கள் மீதமிருக்கிறார்கள்; அவர்கள் உங்களுடன் போர் செய்ய மக்களை அழைத்து வரலாம்; திரும்புங்கள்; நாம் அவர்களிடம் சென்று அவர்களது ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழித்து வருவோம்” என்றனர்.
இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாரின் வலிமையையும் ஆற்றலையும் சரியாக ஒப்பிட்டு பார்க்காதவர்கள்தான் அவ்வாறு ஆலோசனை சொல்லி இருப்பார்கள். ஆகவேதான், உண்மை நிலையை புரிந்த அவர்களின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவனான ஸஃப்வான் இப்னு உமைய்யா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த “எனது கூட்டத்தினரே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். உஹுத் போரில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கக்கூடும் என நான் பயப்படுகிறேன்; நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான் கிடைத்துள்ளது. நீங்கள் மீண்டும் மதீனா சென்றால் அவர்கள் வெற்றி பெற்று நீங்கள் தோற்றுவிடுவீர்களோ என் நான் அஞ்சுகிறேன்” என்றான். இவனது ஆலோசனையை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.
மதீனாவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது அபூ ஸுஃப்யானிடம் மஅபத் இப்னு மஅபத் வந்தார். அபூ ஸுஃப்யானுக்கு அவர் முஸ்லிமானது தெரியாது. அவர் “மஅபதே! ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். அதற்கு மஅபத் ஒரு பெரிய கற்பனையான போரை அபூ ஸுஃப்யானின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதாவது “அபூ ஸுஃப்யானே! முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனாவை விட்டு புறப்பட்டு விட்டார். நான் இதுவரை பார்திராத ஒரு ராணுவத்துடன் அவர் உன்னைத் தேடி வருகிறார். அவர்கள் உன் மீது நெருப்பாய் பற்றி எரிகிறார்கள். அன்றைய உஹுத் போரில் கலந்து கொள்ளாதவர்கௌல்லாம் அவருடன் சேர்ந்து இப்போது புறப்பட்டுள்ளனர். தாங்கள் நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வருகின்றனர். உங்களுக்கு எதிராக அவர்களிடம் இருக்கும் கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்.
இதைக் கேட்ட அபூ ஸுஃப்யான் “உனக்கு நாசம் உண்டாகட்டும். நீ என்ன சொல்கிறாய்?” என்று அதிர்ந்தார். அதற்க்கு அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ இங்கிருந்து அவர்களை நோக்கி பயணித்தால் வெகு விரைவில் அவர்களுடைய குதிரைகளைக் காண்பாய்” என்றார். (அல்லது இந்தக் காட்டுக்குப் பின்புறத்திலிருந்து முஸ்லிம்களுடைய படையின் முதல் படை வருவதை நீ பார்க்கப் போகிறாய் என்றார்). அதற்கு அபூ ஸுஃப்யான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை வேரோடு அழிக்க வேண்டுமென்று நாங்கள் எங்களின் முழு ஆற்றலையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்” என்றார். அதற்க “அவ்வாறு நீ செய்யாதே! நான் உனக்கு உனது நன்மையை நாடி இதைக் கூறுகிறேன். நீ திரும்புவதுதான் உனக்கு நல்லது” என்றார் மஅபத்.