பக்கம் - 310 -
மஅபத் தந்த தகவலால் எதிரிகளின் நம்பிக்கையும் வீரமும் தளர்ந்து, பயமும் திடுக்கமும் அவர்களை ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தங்களுக்கு ஏற்றமானது என்று கருதினர். இருப்பினும் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக இஸ்லாமிய படைக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரப் போரை அபூ ஸுஃப்யான் தூண்டிவிட்டார். அதாவது, மதீனா சென்று கொண்டிருந்த அப்துல் கைஸ் கிளையினர் இவர்களை வழியில் பார்த்த போது அவர்களிடம் “நான் கூறும் செய்தியை என் சார்பாக முஹம்மதுக்கு எட்ட வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும் போது “உக்காள்” கடைத் தெருவில் உங்களின் ஒட்டகம் சுமை தாங்குமளவிற்கு நான் காய்ந்த திராட்சையை தருவேன்” என்று அபூ ஸுஃப்யான் கூற அவர்கள் “சரி” என்றனர். “முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்க நாங்கள் முழு ஆற்றலையும் ஒன்று திரட்டி வருகிறோம் என்ற செய்தியை முஹம்மதுக்கு சொல்லிவிடுங்கள்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.
அந்த வியாபாரக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடமும் வந்து அபூ ஸுஃப்யான் தாங்களிடம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினர். அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இதைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். அல்குர்அன் 3:173-174
ஆனால், இவர்களுடைய பேச்சை நபியவர்களும் முஸ்லிம்களும் பொருட்படுத்தவில்லை. எதிரிகளை எதிர்பார்த்து (ஹிஜ்ரி 3) ஷவ்வால் பிறை 9, 10, 11 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் ஹம்ராவுல் அஸதில் தங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிறை 8ல் ஹம்ராவுல் அஸதிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை நாம் முன்பே கூறியிருக்கின்றோம். அப்போது அபூ இஜ்ஜா அல் ஜுமஹி என்பவனை நபியவர்கள் கைது செய்தார்கள். ஏற்கனவே பத்ர் போரில் கைது செய்யப்பட்டிருந்த இவனை நபியவர்கள் அவன் ஏழை, அவனுக்க பெண் பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர் என்ற காரணத்தால் அவன் மீது கருணை காட்டி அவனை உரிமையிட்டு தனக்கு எதிராக செயல்படக்கூடாது என்று அவனிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள். ஆனால், அவன் அந்த ஒப்பந்தத்தை மீறி உஹுத் போரிலும் கலந்து கொண்டதால் நபியவர்கள் அவனை கைது செய்தார்கள். அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! என்னை மன்னித்துவிடும். என்மீது உபகாரம் செய். எனது பெண் பிள்ளைகளுக்காக என்னை நீ விட்டுவிடு. நான் இப்போது செய்ததைப் போன்று இனி எப்போதும் செய்ய மாட்டேன் என்று உங்களுக்க வாக்குறுதி தருகிறேன்” என்றான். ஆனால், நபியவர்கள் “இதற்குப் பின் நீ மக்காவிற்கு சென்று முஹம்மதை இருமுறை நான் ஏமாற்றிவிட்டேன் என்று கூறும் நிலைமை (எனக்கு) ஏற்படக்கூடாது. ஏனெனில் இறைநம்பிக்கையாளன் ஒரு புற்றில் இருமுறை தீண்டப்பட மாட்டான். (அதாவது ஒரு தவறை மறுமுறை செய்யமாட்டார்) என்று கூறிவிட்டு ஜுபைர் அல்லது ஆஸிம் இப்னு ஸாபித்திடம் அவனது தலையை துண்டிக்கக் கூறினார்கள்.