பக்கம் - 323 -
நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின் தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார்.
புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது
பனூ லுஅய் கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.
இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த வசனத்தை இறக்கினான்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான். அல்குர்ஆன் 59:5
குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் அப்துல்லாஹ் இப்ன உபைய்யும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் உவமானத்துடன் கூறுகிறான்.
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான். அல்குர்ஆன் 59:16
முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். “ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்” என்று நபியவர்களிடம் தூதனுப்பினார்கள்.
அதற்க நபி(ஸல்) அவர்கள் “உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது” என்று கூறினார்கள்.
இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு 600 ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.