பக்கம் - 324 -
நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்கள வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக் கவசங்களும், 340 வாட்களும் இருந்தன.
இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்சாரிகளில் ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள்.
இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான். இந்த அத்தியாயத்தில் “யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?” போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்சாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது என்ற அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைப்பிடித்து, மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான்.
இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் குறித்து கூறியதை நாம் இதுவரை பார்த்தோம்.
அபூதாவது, அப்துர் ரஜாக் (ரஹ்) மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க வேறு பல காரணங்களைக் கூறுகின்றனர். அஃதாவது: பத்ர் போருக்குப் பின் குறைஷிகள் நழீர் இன யூதர்களுக்க கடிதம் எழுதினர். அதில் “நீங்கள் மதீனாவில் நல்ல பாதுகாப்புடன் வாழ்கிறீர்கள். உங்களிடம் கோட்டைகளும் அரண்களும் உள்ளன. எனவே, அங்கு இருக்கும் எங்களுடைய ஊர்வாசிகளிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் உங்களுக்க பல வகையில் தொல்லைகள் தருவோம். உங்களின் பெண்களை எங்களை விட்டும் நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியாது.” இவ்வாறு அக்கடிதத்தில் குறைஷிகள் குறிப்பிட்டனர்.
இக்கடிதத்தைப் பார்த்தவுடன் நழீர் கிளையினர் நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கைக்குத் துரோகம் செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி, “நீங்கள் உங்களுடைய 30 தோழர்களுடன் எங்களிடம் வாருங்கள். நாங்கள் எங்களுடைய 30 அறிஞர்களை அழைத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நாம் சந்திப்போம். நீங்கள் கூறுவதை எங்களது பாதிரிகள் கேட்பார்கள். அவர்கள் நீங்கள் கூறுவதை உண்மை என்று ஆமோதித்து உங்களை நம்பிக்கை கொண்டால் நாங்கள் அனைவரும் உங்களை நம்பிக்கை கொள்வோம்” என்று கூறினர்.