பக்கம் - 345 -
அபூலுபாபா தெளிவாகக் கூறிய பின்பும் வேறு வழியின்றி நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர். யூதர்கள் பெருமளவு உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர். கிணறுகளும் பலமிக்க கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையானப் பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர். ஆக, இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் நிலைகுலைந்தனர். அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர். அலீ (ரழி) முஸ்லிம்களைப் பார்த்து “அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட படைகளே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹம்ஜாவுக்கு ஏற்பட்டதை நானும் அனுபவிப்பேன் அல்லது அவர்களது கோட்டையை வெற்றி கொள்வேன்” என்று சபதமிட்டார்கள்.
முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள் புரிந்துகொண்டனர். இனியும் காலதாமதம் செய்வது உசிதமல்ல என்பதை உணர்ந்தனர். ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தீவிரம் காட்டினர். தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து “அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர். நபியவர்கள் “இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்” என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போல் காலில் அம்பு தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி “ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி அழைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) “இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட் படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது” என்றார். ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி) இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.