பக்கம் - 346 -
ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்த போது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் “உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் “ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்” என்றார்கள். அப்போது ஸஅது (ரழி) “எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் “ஆம்! செல்லுபடியாகும்” என்றனர். பிறகு ஸஅது (ரழி) “முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். அப்போது “இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் “ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:
“ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு” என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் “ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்கள்.
உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே! ஏனெனில், குரைளா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காக 1500 வாட்களையும், 2000 ஈட்டிகளையும், 300 கவச ஆடைகளையும், 500 இரும்புக் கேடயங்களையும், ஒரு தோலினாலான கேடயத்தையும் சேகரித்து வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லங்களை வெற்றி கொண்ட பின் கைப்பற்றினர்.
இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது. பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லப்படும்போது அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் “தலைவரே! எங்களை அழைத்துச் சென்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்!” என்றனர். அதற்கு கஅப் “என்ன! உங்களுக்கு எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார். அழைத்துச் செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது கூட புரியவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?” என்றார். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.