பக்கம் - 349 -
ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே” குலுங்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஅது இப்னு முஆதின் ஜனாஸாவை (பிரேதத்தைச்) சுமந்து சென்றபோது அது மிக இலேசாக இருந்தது. நயவஞ்சகர்கள் “என்ன இவரது ஜனாஸா இவ்வளவு இலேசாக உள்ளதே?” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக வானவர்கள் அதைச் சுமந்து செல்கிறார்கள்” என்றார்கள். (ஸுனனுத் திர்மிதி)
குரைளாவினரை முற்றுகையிட்டிருந்த போது கல்லாத் இப்னு ஸுவைத் (ரழி) என்ற நபித்தோழர் யூதப் பெண் ஒருத்தியால் கொல்லப்பட்டார். மேலும், உக்காஷாவின் சகோதரர் அபூ ஸினான் இப்னு மிஹ்ஸன் (ரழி) என்பவரும் முற்றுகையின் காலத்தில் இறந்தார்கள்.
அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார். அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும் தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்த போது அதிகாலை ஸஹர் நேரத்தில் அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான வசனம் இறங்கியது.
உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக “அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்” என்று கூறினார். இச்செய்தியைக் கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்த போது அவரை அவிழ்த்து விட்டார்கள்.
இந்தப் போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. முற்றுகை மொத்தம் இருபத்தைந்து இரவுகள் நீடித்தது.(ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அல்லாஹுத் தஆலா அகழ் போர் தொடர்பாகவும், குரைளா போர் தொடர்பாகவும் ‘அஹ்ஸாப்’ எனும் அத்தியாத்தில் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் இச்சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டு கூறியிருக்கிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் நிலைமைகளையும், முஸ்லிம்களை எதிர்க்க வந்த இராணுவங்கள் தோற்றுப்போனதையும், மோசடி செய்யும் யூதர்களின் நிலைமை என்னவானது என்பதையும் அதில் தெளிவாக அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான்.