அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை
ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்... (ஹிஜ் 5, துல்கஅதா)
இவனது புனைப் பெயர் ‘அபூராஃபி’ எனப்படும். யூத இனத்தைச் சேர்ந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன். இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான். (ஃபத்ஹுல் பாரி)
இவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்தான். குரைளா யூதர்களின் பிரச்சனையை முடித்த பின் அவனைக் கொலை செய்துவிட கஸ்ரஜ் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினர். இதற்கு முன் இவனைப் போன்ற கொடியவன் கஅபு இப்னு அஷ்ரஃபை அவ்ஸ் கிளையினர் கொன்றதால் அதுபோன்ற ஒரு சிறப்பைத் தாங்களும் அடைய வேண்டும் என கஸ்ரஜ் கிளையினர் விரும்பினர். எனவே, நபியவர்களிடம் அதற்கு அனுமதி கோருவதில் தீவிரம் காட்டினர்.
நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், அவனைத் தவிர அங்குள்ள சிறுவர்களை அல்லது பெண்களை கொல்லக் கூடாது என தடை விதித்தார்கள். நபியவர்களிடம் அனுமதி பெற்று ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக புறப்பட்டுச் சென்றது. இவர்கள் அனைவரும் கஸ்ரஜ் கிளையினரில் ஸலமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் தளபதியாக அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) இருந்தார். இக்குழு அபூராஃபியின் கோட்டை இருந்த கைபர் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இவர்கள் கோட்டையை அடையும் போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டது. மக்கள் தங்களின் கால்நடைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு அதீக் தனது தோழர்களிடம் “நீங்கள் இங்கு இருங்கள். நான் சென்று வாயில் காவலரிடம் நளினமாகப் பேசிப் பார்க்கிறேன். முடிந்தால் நான் கோட்டைக்குள் நுழைந்து விடுகிறேன் என்று கூறி புறப்பட்டார். கோட்டை கதவுக்கருகில் சென்ற போது தன்னை ஆடையால் மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது போல் அமர்ந்து கொண்டார். கோட்டைக்குள் செல்ல வேண்டிய மக்கள் சென்று விட்டனர். அப்போது வாயில் காவலரிடம் “அல்லாஹ்வின் அடியானே! உள்ளே செல்வதாக இருந்தால் இப்போதே சென்றுவிடு. நான் கதவை மூடப் போகிறேன்” என்றான்.
அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) கூறுகிறார்கள்: நான் கோட்டைக்குள் சென்று ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டேன். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர் என்று தெரிந்தவுடன் வாயில் காவலாளி கதவை மூடினான். பின்பு சாவிகளை ஓர் ஆணியில் தொங்க விட்டான். நான் அந்த சாவிகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அபூ ராஃபி, சில நண்பர்களுடன் அவனது அறையில் இராக்கதைகள் பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர்கள் சென்றபின் நான் அவனது அறையை நோக்கி மேலே ஏறினேன். ஒவ்வொரு கதவாக திறந்து உள்ளே சென்றவுடன் அக்கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டேன். அதாவது இங்கு உள்ளவர்களுக்கு நான் இருப்பது தெரிந்து, என்னை நோக்கி பிடிப்பதற்கு வந்தாலும் அவர்கள் என்னை பிடிப்பதற்குள் நான் அவனைக் கொன்று விடலாம் என்பதற்காக இவ்வாறு செய்தேன். இறுதியாக அவன் இருந்த இடம் வரை சென்று விட்டேன். ஒரு இருட்டறையில் தனது குடும்பத்தார்களுடன் இருந்தான். ஆயினும், அறையில் எப்பகுதியில் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.