பக்கம் - 355 -
ஏனெனில், முஸ்லிமான பெண்களை இறைநிராகரிப்பாளர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கக் கூடாது என்ற அல்லாஹ்வுடைய கட்டளை அப்போது வரைக்கும் இறங்கவில்லை. ஆனால், சிலர் “மறுபடியும் புதிய திருமணம் செய்துதான் நபியவர்கள் சேர்த்து வைத்தார்கள்” என்று கூறுகின்றனர். இது தவறாகும். அவ்வாறே ஆறு வருடங்கள் கழித்து இருவரையும் சேர்த்து வைத்தார்கள் என்று கூறுவதும் சரியாகாது. ஏனெனில், அதற்குரிய ஆதாரம் வலுவில்லாதது. (துஹ்ஃபத்துல் அஹ்வதி)
6) மீண்டும் ஜைத் அவர்களைப் பதினைந்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஆகிர் மாதத்தில் ஸஃலபாவினர் வசிக்கும் ‘தஃப்’ அல்லது ‘தக்’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள்தான் தங்களின் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று நினைத்து அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஜைத் அவர்கள் இருபது ஒட்டங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதீனா வந்தார்கள்.
7) பன்னிரெண்டு நபர்களுடன் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரஜப் மாதத்தில் அங்கு எதிரிகளின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து வருவதற்காக நபியவர்கள் ஜைதை அனுப்பி வைத்தார்கள். ஆனால், அங்கிருந்தோர் நபித்தோழர்களைத் தாக்கி ஒன்பது தோழர்களைக் கொன்று விட்டனர். மூவர் மட்டும் தப்பித்து மதீனா திரும்பினர். அதில் ஜைது இப்னு ஹாரிஸாவும் ஒருவர். (ரஹ்மதுல் லில் ஆலமீன், ஜாதுல் மஆது)
8) ‘ஸயத்துல் கபத்’ எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும் போது இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: “300 வாகன வீரர்களை அபூ உபைதாவின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால் காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு ‘ஜய்ஷுல் கபத்’ -இலை படை- என்று பெயர் வந்தது. எங்களில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை ஒரே நாளில் அறுப்பார். மற்றொரு நாள் மீண்டும் மூன்று ஒட்டகங்களை அறுப்பார். பின்பு தளபதி அபூ உபைதா (ரழி) அதனைத் தடை செய்துவிட்டார். அதற்குப் பின் கடலிலிருந்து ‘அம்பர்’ என்ற மிகப்பெரிய மீன் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல ஆரோக்கியமடைந்தன.
அபூ உபைதா (ரழி) அதனுடைய விலா எலும்பில் ஓர் எலும்பை எடுத்தார். பின்பு அதை நிறுத்தி, படையில் மிக உயரமாக உள்ள ஒருவரை மிக உயரமான ஒட்டகத்தில் உட்கார வைத்து அதற்குக் கீழ் செல்லும்படி கூறினார்கள். அந்த எலும்பு அவ்வளவு பெரியதாக இருந்தது. அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக் காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக் கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.