பக்கம் - 356 -


இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன. இக்குழப்பத்தின் இறுதியில் நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது. முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குரிய நிகழ்ச்சியைப் பற்றி கூறுவோம்.

இப்போர் ஹிஜ்ரி 5, ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஹிஜ்ரி 6ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்.

இப்போருக்கான காரணமாவது: முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத் தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி (ரழி) என்பவரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி செய்தியைக் கூறினார்.

செய்தி உண்மைதான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள். இதுவரை எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது. நபி (ஸல்) இப்போருக்குச் செல்லும் போது மதீனாவில் ஜைதுப்னு ஹாரிஸாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். சிலர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அபூதர் என்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் நுமைலா இப்னு அப்துல்லாஹ் என்றும் கூறுகின்றனர்.

ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் இஸ்லாமியப் படையின் செய்தியை அறிந்து வருவதற்காக ஓர் ஒற்றனை அனுப்பினான். முஸ்லிம்கள் அவனைக் கைது செய்து கொன்று விட்டனர். ஹாரிஸ் இப்னு ழிராருக்கும் அவனுடன் இருந்தவர்களுக்கும் “நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒற்றர்களைக் கொன்று விட்டார்கள். மேலும், தங்களை நோக்கி விரைந்து வருகிறார்கள்” என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குக் கடுமையான அச்சம் ஏற்பட்டது. இதனால் பல அரபுக் கிளையினர் அவர்களின் படையிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ‘முரைஸீ’ என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இங்குதான் எதிரிகள் தங்கியிருந்தனர். இது கடற்கரைக்கு அருகில் ‘குதைத்’ என்ற ஊர் ஓரத்தில் உள்ள கிணறாகும். அங்கு நபியவர்கள் தங்களது தோழர்களை வரிசையாக நிற்கவைத்து முஹாஜிர்களுக்குரிய கொடியை அபூபக்ர் (ரழி) அவர்களிடமும், அன்சாரிகளுக்குரிய கொடியை ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களிடமும் கொடுத்தார்கள். பின்பு இரு படையினரும் சிறிது நேரம் அம்பெறிந்து சண்டை செய்து கொண்டனர். அதற்குப் பின் நபியவர்கள் கட்டளையிடவே தோழர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக எதிரிகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களுக்கு வெற்றியும் இணைவைப்பவர்களுக்குத் தோல்வியும் கிடைத்தது. போருக்கு வந்திருந்த எதிரிகளின் பெண்களையும், பிள்ளைகளையும், ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். இப்போரில் எதிரிகளால் முஸ்லிம்களில் எவரும் கொலை செய்யப்படவில்லை. ஆனால், அன்சாரி ஒருவர் ஒரு முஸ்லிமை எதிரிப் படையில் உள்ளவர் என்று எண்ணி தவறாகக் கொலை செய்து விட்டார்.