பக்கம் - 362 -
உஸைது (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பினால் அவனை மதீனாவிலிருந்து வெளியேற்றலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இழிவானவன். நீங்கள்தான் கண்ணியமானவர்கள்” என்று கூறிவிட்டு “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனுடன் சற்று மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவனது கூட்டத்தினர் அவனைத் தங்களது தலைவராக்க நினைத்த போது அல்லாஹ் உங்களை எங்களிடம் கொண்டு வந்தான். எனவே, நீங்கள்தான் அவனது பதவியைப் பறித்துக் கொண்டீர்கள் என்று அவன் எண்ணுகிறான்” என்று ஆறுதல் கூறினார்கள்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு மாலைவரை பயணித்தார்கள். பயணத்தில் எங்கும் ஓய்வெடுக்காமல் அன்று இரவிலிருந்து மறுநாள் முற்பகல் வரை தொடர்ந்து பயணம் செய்தார்கள். அதற்குப் பின் மக்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தார்கள். கடுமையான களைப்பின் காரணமாக மக்கள் இறங்கியவுடன் அயர்ந்து தூங்கி விட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) செய்ததற்குக் காரணம், மக்கள் வேறு எந்த பேச்சிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஜைதுப்னு அர்கம் இச்செய்தியைக் கூறிவிட்டார் என்ற விவரம் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு தெரியவந்தது. உடனே அவன் நபியவர்களைச் சந்தித்து தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த சில அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! ஜைது சிறுவர். அவர் சரியாக விளங்கி இருக்கமாட்டார். இப்னு உபை கூறிய சொல்லை அச்சிறுவர் சரியாக நினைவில் வைக்கத் தெரியாது. எனவே, இப்னு உபை கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றனர்.
இது தொடர்பாக ஜைது இப்னு அர்கம் அவர்களே கூறுகிறார்கள்: “மக்கள் என்னை பொய்யர் என்று கூறியதால் எனக்கு இதுவரை ஏற்பட்டிராத பெரும் கவலை ஏற்பட்டு நான் எனது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அந்நிலையில் எனது கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆனில் அத்தியாயம் 63ல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
ஜைது இப்னு அர்கம் (ரழி) கூறுகிறார்கள்: “இந்த வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவுடன் அவர்கள் என்னை அழைத்து இவற்றைக் ஓதிக்காண்பித்து அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஒரு மகன் இருந்தார். அவரது பெயரும் அப்துல்லாஹ்தான். இவர் சிறப்புமிக்க நபித்தோழர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தனது தந்தையின் செயல்களைப் பற்றி தெரிந்தவுடன் அவனிடமிருந்து விலகிக் கொண்டார். முஸ்லிம்கள் மதீனாவுக்குத் திரும்பிய போது மதீனாவின் நுழைவாயிலில் தனது வாளை உருவியவராக இவர் நின்று கொண்டார். அவரது தந்தை இப்னு உபை அங்கு வந்த போது தனது தந்தை என்று கூட பார்க்காமல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) உன்னை அனுமதிக்காத வரை நீ இங்கிருந்து செல்ல முடியாது. நிச்சயமாக நபியவர்கள்தான் கண்ணியமிக்கவர், நீதான் இழிவானவன்” என்று கூறி அவனைத் தடுத்து விட்டார். நபி (ஸல்) அங்கு வந்து அவனுக்கு மதீனாவிற்குள் செல்ல அனுமதி அளிக்கவே அப்துல்லாஹ் (ரழி) அவனுக்கு வழிவிட்டார்கள். மேலும், அவர் இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட போதே “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்ய எனக்குக் கட்டளையிடுங்கள்! நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவனது தலையை உங்களிடம் கொண்டு வருகிறேன்.” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறியிருந்தார். (இப்னு ஹிஷாம்)