பக்கம் - 363 -
2) அவதூறு சம்பவம்:
இப்போரில்தான் இட்டுக்கட்டப்பட்ட அச்சம்பவம் நடைபெற்றது. அதன் சுருக்கமாவது:
நபி (ஸல்), பயணத்தில் மனைவிமார்களில் யாரை உடன் அழைத்துச் செல்வது என சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறே இப்பயணத்தில் ஆயிஷா (ரழி) அவர்களின் பெயர் வரவே, அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்கள். போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது படைகளுடன் ஓர் இடத்தில் தங்கினார்கள். அங்கு ஆயிஷா (ரழி) தங்களது சுய தேவைக்காக வெளியே சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பயணத்தில் வரும் போது தனது சகோதரி ஒருவரிடமிருந்து கழுத்து மாலை ஒன்றை இரவல் வாங்கி வந்திருந்தார். அவர்கள் சென்ற இடத்தில் அந்த மாலை விழுந்து விட்டது. அது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் கூடாரத்திற்கு வந்த பிறகு அது தவறியது தெரிய வரவே, அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் சென்றதை யாரும் பார்க்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க நபியவர்கள் தங்கள் தோழர்களுக்குப் பயணத்தைத் தொடர கட்டளையிட்டார்கள்.
ஆயிஷா (ரழி) அமர்ந்து வந்த தொட்டியை ஒட்டகத்தின் மீது ஏற்றுவதற்காக வந்தவர்கள் ஆயிஷா (ரழி) அதில் இருக்கிறார் என்றெண்ணி அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். ஏற்றி வைத்தவர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்களாக இருந்ததால் தொட்டி எடை குறைந்திருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், ஆயிஷா (ரழி) வாலிபப் பெண்ணாக இருந்ததால் உடல் பருமன் இல்லாமல் மெலிந்தவராக இருந்தார். ஒருவர் அல்லது இருவர் கஜாவா பெட்டியைத் தூக்கியிருந்தால் ஆயிஷா (ரழி) அதில் இல்லாததை உணர்ந்திருக்க முடியும்.
இதற்குப் பின் அனைவருமே அங்கிருந்து பயணித்து விட்டனர்.
மாலையைத் தேடிச் சென்ற ஆயிஷா (ரழி) அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடம் திரும்பிய போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் தேடி வருவார்கள் என்று எண்ணி ஆயிஷா (ரழி) அங்கேயே தங்கி விட்டார்கள். அல்லாஹ் தனது காரியத்தில் மிகைத்தவன். அர்ஷுக்கு மேலிருந்து கொண்டு தான் நாடியபடி அனைத்தையும் நிர்வகிக்கின்றான். ஆயிஷா (ரழி) கண்ணயர்ந்து தூங்கி விட்டார்கள். அப்போது அங்கு வந்த ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ரழி) “இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிவூன். அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே!” என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) விழித்தெழுந்தார்கள். ஸஃப்வான் (ரழி) படையின் பிற்பகுதியில் தங்கியிருந்தார் அவர் அதிகம் தூங்குபவராக இருந்தார். ஆயிஷா (ரழி) அவர்களை “ஜாப்ம் (பர்தா) உடைய சட்டம் வருவதற்கு முன் பார்த்திருந்ததால் இப்போது பார்த்தவுடன் அறிந்து கொண்டார். தனது ஒட்டகத்தை இழுத்து வந்து அவர்களுக்கருகில் உட்கார வைத்தவுடன் அதன்மீது ஆயிஷா (ரழி) ஏறிக் கொண்டார்கள். அன்னை ஆயிஷாவிடம் வேறு எவ்வித பேச்சும் ஸஃப்வான் (ரழி) பேசவில்லை. ஆயிஷா (ரழி) ‘இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்’ என்பதைத் தவிர ஸஃப்வானிடமிருந்து வேறு எந்த சொல்லையும் கேட்கவில்லை.
ஸஃப்வான் (ரழி) அவர்கள் ஒட்டகத்தை இழுத்தவராக நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து சேர்ந்தார். அப்போது முஸ்லிம்களின் படை மதிய நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாணியில் தங்களின் பண்பிற்கேற்ப பேசினார்கள். அப்போதுதான் அல்லாஹ்வின் எதிரியான தீயவன் இப்னு உபை தனது குரோதத்தையும், நயவஞ்சகத்தையும் வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து, அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.