பக்கம் - 391 -
இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் ‘மாயா“, மற்றொருவர் ‘சீரீன்“. கோவேறு கழுதையின் பெயர் ‘துல்துல்’ ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)
மாயாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு ‘இப்றாஹீம்’ என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.
3) பாரசீக மன்னருக்குக் கடிதம்
நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா“விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப் பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.”
இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு ‘அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி’ என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் “எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?” என்று கூறினான்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது “அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்” என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் “ஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்” என்று குறிப்பிட்டான். இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் “இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தான்.