பக்கம் - 392 -
வந்த இருவரில் ஒருவன் பெயர் கஹ்ர்மானா பானவய். இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.
இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவல் ஒருவன் நபியவர்களிடம் “அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்” என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.
இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசன் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வை தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)
மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் “நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?” என்று கூறினர். அதற்கு நபியவர்கள் “ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.” என்றும் “எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்” என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.
அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வையின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: “நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே” என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)