பக்கம் - 450 -
நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள் குறைஷிகளிடம் உரையாற்றுகிறார்கள்!
நபி (ஸல்) கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். நபியுடன் உஸாமா, பிலால் (ரழி) ஆகிய இருவரும் உள்ளே உடனிருந்தனர். கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி வந்து மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்று கொண்டார்கள்.
கஅபா அப்போது ஆறு தூண்கள் மீது அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறு அமைத்து (நின்று) கொண்டு தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் (லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்) இறைவனை புகழ்ந்து, மேன்மைப் படுத்தினார்கள். பின்னர் கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி (ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.
நபி (ஸல்) கஅபா வாசலுடைய நிலைப்படியை பிடித்துக் கொண்டு நின்றார்கள். கீழே பள்ளியில் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் குறைஷிகளை நோக்கி பின்வருமாறு உரை நிகழ்த்தினார்கள். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் தனது வாக்கை நிலைநாட்டினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சிறப்புகளையும் மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தவறாகக் கொலை செய்து விடுதல் என்பது ‘ஷிப்ஹுல் அம்தை“ப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலை செய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத கொலைக்கு ‘ஷிபஹுல் அம்து’ எனப்படும்.) இதற்குக் கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். (அதாவது, 100 பெண் ஒட்டகங்கள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகங்களாக இருக்க வேண்டும்.) குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். பின்பு அடுத்து வரும் திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின் றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவ னாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:13)