பக்கம் - 451 -
உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது
மேற்கூறிய திருவசனத்தை ஓதிக் காட்டிய பின்பு “குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்?” என நபி (ஸல்) கேட்க, “நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என பதில் கூறினர். நபி (ஸல்) “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.
கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்
உரைக்குப் பின்பு நபி (ஸல்) கீழிறங்கி வந்து பள்ளியில் அமர்ந்தார்கள். உஸ்மான் இப்னு தல்ஹாவிடமிருந்து கஅபாவின் சாவியை அலீ (ரழி) வாங்கியிருந்தார். அச்சாவியை எடுத்துக் கொண்டு அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பதுடன் கஅபாவைப் பராமரிக்கும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!” என்றார்கள். இவ்விஷயத்தைக் கூறியவர் அப்பாஸ் (ரழி) என்றும் ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி (ஸல்) “உஸ்மான் இப்னு தல்ஹா எங்கே?” என்று கேட்டு அவரை அழைத்து வரக் கூறி “உஸ்மானே! இதோ உனது சாவியைப் பெற்றுக் கொள். இன்றைய தினம் நன்மை மற்றும் நேர்மையின் தினமாகும்” என்று கூறினார்கள்.
‘தபகாத்’ என்ற நூலில் இப்னு ஸஅத் (ரழி) குறிப்பிடுகிறார்: நபி (ஸல்) உஸ்மானிடம் சாவியை வழங்கும்போது, “இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருந்து வரட்டும். அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் உங்களிடமிருந்து இதனைப் பறிக்க மாட்டான். உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்த கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்
தொழுகை நேரம் வந்ததும் பிலாலுக்கு (பாங்கு) அதான் ஒலிக்கும்படி நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். கஅபாவின் முற்றத்தில் அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப், அத்தாபு இப்னு உஸைது, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகிய பெருந்தலைவர்கள் வீற்றிருந்தனர். அதனைக் கேட்ட அத்தாபு “திண்ணமாக அல்லாஹ் எனது தந்தை உஸைதைக் கண்ணியப்படுத்தி காப்பாற்றி விட்டான். இதுபோன்ற சப்தத்தை அவர் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர் கடுங்கோபம் கொண்டிருப்பார்” எனக் கூறினார். அதற்கு ஹாரிஸ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த அதானில் சொல்லப்படும் விஷயம் உண்மை என்று நான் அறிந்திருந்தால் அதனைப் பின்பற்றி இருப்பேன்.” இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபூஸுஃப்யான் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது விஷயமாக நான் ஏதும் பேசமாட்டேன். அப்படி ஏதேனும் நான் பேசிவிட்டால் இந்தப் பொடிக் கற்கள் கூட என்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்.” இவர்களின் இவ்வுரையாடலுக்குப் பின் அவர்களிடம் சென்ற நபி (ஸல்) “நீங்கள் பேசியது எனக்கு நன்கு தெரியும்” என்று கூறிவிட்டு, அவர்கள் பேசியவற்றை அவர்களிடமே விவரமாகக் கூறினார்கள்.
இதனைக் கேட்ட ஹாஸும் அத்தாபும் (ரழி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுடன் இருந்த வேறு யாருக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது. அவ்வாறிருக்க யாராவது உங்களுக்கு இதனைப் பற்றி சொல்லியிருக்கலாம் என்று எங்ஙனம் நாங்கள் கூற இயலும்? எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என சாட்சிக் கூறுகிறோம்” என்றனர்.