பக்கம் - 469 -
அப்படி நீங்கள் கூறினால் அது உண்மைதான். நாமும் அதை உண்மை என்றே ஏற்றுக் கொள்கிறோம். அன்சாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள்? மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே! மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா? முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே! அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக!” என்று கூறி தங்களது உரையை முடித்தார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த அன்சாரிகளெல்லாம் தாடி நனையுமளவிற்கு அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கைத் திருப்தி கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைப் பொருந்திக் கொண்டோம்” என்று கூறியவர்களாகக் கலைந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
ஹவாஜின் குழுவினன் வருகை
இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜுஹைர் இப்னு ஸுர்தின் தலைமையில் பதிநான்கு நபர்கள் கொண்ட ஹவாஜின் குழுவினர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அதில் நபி (ஸல்) அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார். நபியவர்களிடம் அவர்கள் பைஅத் செய்த பின் “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக இருப்பவர்களில் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுவது சமுதாயத்திற்கு கேவலமாகும்.” என்று கூறிய பின்,
“இறைத்தூதரே! தயாளத்தன்மையுடன் உதவி புரியுங்கள்
உங்களை நாம் ஆதரவு வைத்திருக்கின்றோம்
உதவியை எதிர்பார்க்கிறோம்
நீங்கள் பால் குடித்த தாய்மார்களுக்கு உதவுங்கள்
கலப்பற்ற முத்தான பாலால் உங்கள் வாய் நிரம்பியுள்ளது!”
என்ற கவிகளைப் பாடினர். இதைக் கேட்ட நபி (ஸல்) “என்னுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். பேச்சுகளில் எனக்கு மிகப் பிடித்தமானது உண்மையான பேச்சுதான். உங்களது பெண்களும், பிள்ளைகளும் உங்களுக்குப் பிரியமானவர்களா? அல்லது உங்களது செல்வங்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களது குடும்பங்களே எங்களுக்கு வேண்டும் எங்கள் குடும்பக் கௌரவத்திற்கு நிகராக எதையும் நாங்கள் மதிப்பதில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் என்னிடம் வந்து சபையில் எழுந்து நின்று, “நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வுடைய தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகிறோம்” என்று கூறுங்கள்.