பக்கம் - 470 -
ஹவாஜின் கிளையினர் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் வந்து நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும், அன்சாரிகளும் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கு சொந்தமானதுதான்” என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் “நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறிவிட்டார். உயய்னா இப்னு ஹிஸ்ன் “நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து “நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்” என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறத்து விட்டனர். அதற்கு அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரழி) “என்னை இவ்வாறு பலவீனப்படுத்தி விட்டீர்களே!” என்று வருந்தினார்.
அதைத் தொடர்ந்து நபி (ஸல்) “இந்தக் கூட்டத்தினர் இஸ்லாமை ஏற்று நம்மிடம் வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துதான் கனீமா பங்கீடு செய்வதில் தாமதம் காட்டினேன். நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? கைதிகள் வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள் “எங்களின் குடும்பம்தான் வேண்டும்” என்று கூறிவிட்டனர். அதற்கு ஈடாக அவர்கள் எதையும் மதிக்கவில்லை. எனவே, “யாரிடம் கைதிகள் இருக்கிறார்களோ அவர்களை எந்தவிதப் பகரமும் எதிர்பார்க்காமல் விட்டுவிடவும் அல்லது விரும்பினால் அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய ஒரு பங்கிற்குப் பகரமாக ஆறு பங்குகள் கொடுக்கப்படும்” என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை உரிமை விட்டுவிடுகிறோம்” என்று கூறினர். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களில் முழுமையான திருப்தியுடன் இதைச் செய்பவர் யார்? அல்லது திருப்தியின்றி செய்பவர் யார்? என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் சென்று ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்!” என்று கூறினார்கள். இறுதியில் மக்கள் தங்களிடமிருந்த கைதிகள் அனைவரையும் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் மட்டும் தனக்குக் கிடைத்த வயதான மூதாட்டியைத் திரும்பத்தர அந்நேரத்தில் மறுத்து விட்டார்கள். பிறகு சிறிது நாட்கள் கழித்து திரும்பக் கொடுத்து விட்டார்கள். கைதிகளுக்கு நபி (ஸல்) கிப்தி ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)
உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்
இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) ஜிஃரானாவில் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றினார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைப் (ரழி) என்ற தோழரை ஆளுநராக நியமித்துவிட்டு மதீனா நோக்கிப் பயணமானார்கள். ஹிஜ்ரி 8, துல்கஅதா மாதம் முடிய ஆறு நாட்கள் இருக்கும் போது மதீனா வந்தடைந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, தாரீக் இப்னு கல்தூன்)