பக்கம் - 491 -
இதுபோன்றே போர்களினால் முஸ்லிம்களுக்குத் தேவையான குடியிருப்பு, விவசாய நிலங்கள், தொழில்துறை போன்றவற்றை நபி (ஸல்) வளப்படுத்தினார்கள். வீடுவாசலின்றி அகதிகளாக வந்த மக்களின் துயர் துடைத்தார்கள். இஸ்லாமிய அரசுக்குத் தேவையான ஆயுதங்கள், படை பலங்கள், வாகனங்கள், செலவீனங்கள் அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். இவ்வனைத்து ஏற்பாடுகளையும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது வரம்புமீறல், அட்யூழியம் செய்தல் ஆகிய ஏதுமின்றியே செய்து வந்தார்கள். மேலும், இதுநாள் வரை அறியாமைக் காலத்தில் எந்த அடிப்படைக்காகவும், நோக்கங்களுக்காகவும் போர்த் தீ மூட்டப்பட்டு வந்ததோ அவை அனைத்தையும் அணைத்து முற்றிலும் மாற்றி அமைத்தார்கள்.
கொள்ளை, சூறையாடல், அநியாயம், அத்துமீறல், எளியோரை வாட்டுதல், கட்டடங்களை இடித்தல், பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல், சிறுவர்கள், குழந்தைகள் போன்றவர்களுடன் கடின சித்தத்துடன் நடந்து கொள்ளுதல், விவசாயப் பம்ர் நிலங்களைப் பாழ்படுத்துதல், அல்லாஹ்வின் பூமியில் குழப்பம், கலகம் விளைவித்தல் போன்ற கொடுஞ்செயல்கள் நிறைந்ததாகவே போர்கள் அக்காலத்தில் இருந்தன. ஆனால், நபி (ஸல்) உயர்ந்த இலட்சியங்களையும், சிறந்த நோக்கங்களையும், அழகிய முடிவுகளையும் கொண்டு வருவதற்குச் செய்யப்படும் ஒரு தியாகமாக விடுதலைக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் ஒரு சுதந்திரப் போராட்டமாகப் போரை மாற்றினார்கள். மனித சமுதாயத்திற்கு கண்ணியம் அளிப்பது அநியாயத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது நீதத்திற்குக் கட்டுப்படுவது ஆகியவற்றையே போரின் நோக்கமாக்கினார்கள். பலமானவர், பலமில்லாதவரை சுரண்டி வாழும் தீய அமைப்பிலிருந்து விலக்கி, பலமில்லாதவரை பலமுள்ளவராக்கி தனது நியாயத்தை அடைந்து கொள்ளும் நல்லமைப்பிற்கு மனித சமுதாயத்தைக் கொண்டு வருவதையே போரின் இலட்சியமாக்கினார்கள். இதைத்தான் ஒடுக்கப்பட்டவர்களை, பலவீனமானவர்களை விடுவிப்பதற்காக போர் புரியுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர் புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) “எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 4:75)
ஆகவே மோசடி, அநியாயம், அழிச்சாட்டியம், பாவங்கள், அத்துமீறல் ஆகிய அனைத்தில் இருந்தும் அல்லாஹ்வின் பூமியைச் சுத்தப்படுத்தி அதில் அமைதி, பாதுகாப்பு, அன்பு, மனித நேயம் ஆகியவற்றை பரப்புவதும் நிலைநாட்டுவதும்தான் ஜிஹாதின் நோக்கமாகும். மேலும், போருக்கென மிக உயர்ந்த சட்ட ஒழுங்குகளை வரையறுத்து, அவற்றைத் தனது தளபதிகளும் படைகளும் பின்பற்ற வேண்டுமென கட்டாயமாக்கினார்கள். எவ்விதத்திலும் இச்சட்டங்கள் மீறப்படுவதை நபி (ஸல்) அனுமதிக்கவில்லை.
சுலைமான் இப்னு புரைதா (ரழி) தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்: நபி (ஸல்) பெரிய அல்லது சிறிய படைக்குத் தளபதியை நியமித்தால் “நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் உங்களது படையினரிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்” என தளபதிக்கு விசேஷமாக வலியுறுத்தி உபதேசம் புரிந்துவிட்டு, அவருக்கும் படையினருக்கும் சேர்த்து கீழ்காணும் உபதேசம் செய்வார்கள்.