பக்கம் - 492 -
“அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள் அல்லாஹ்வை நிராகரிப்போருடன் போர் செய்யுங்கள் போரிடுங்கள்! களவாடாதீர்கள்! மோசடி செய்யாதீர்கள்! உறுப்புகளைச் சிதைக்காதீர்கள்! குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!”
மேலும், நீங்கள் எளிதாக்குங்கள் சிரமமாக்காதீர்கள் அமைதியை நிலைநாட்டுங்கள் வெறுப்படையச் செய்யாதீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம், முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுக்கச் செல்கையில், இரவு நேரமாக இருப்பின் காலை வரை பொறுத்திருப்பார்கள். உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்குவதை நபி (ஸல்) வன்மையாகத் தடுத்தார்கள். சரணடைந்தவர்களைக் கொல்லக் கூடாது பெண்களை கொல்வதோ அடிப்பதோ கூடாது கொள்ளையடிக்கக் கூடாது கொள்ளையடிக்கப்பட்ட பொருளை உண்பது, செத்த பிணத்தை உண்பதை விட கேவலமானது, விவசாய நிலம் மற்றும் மரங்களை அழிக்கக் கூடாது, ஆனால், எதிரியை அடக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி ஏதும் தென்படாவிட்டால் நிர்ப்பந்த சூழ்நிலையில் நிலம் மற்றும் மரங்களை அழிக்கலாம். இவ்வாறு போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
மேலும், மக்கா வெற்றியின் போது “காயம்பட்டோரை தாக்காதீர்கள்! புறமுதுகுக் காட்டி ஓடுபவரைத் துரத்தாதீர்கள்! கைதிகளைக் கொல்லாதீர்கள்” என ஆணை பிறப்பித்தார்கள்.
ஒப்பந்தம், உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் கொல்லப்படுவதை மிக வன்மையாகக் கண்டித்து “யார் ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டவரைக் கொன்று விட்டாரோ அவர் சுவன வாடையை நுகர மாட்டார். சுவன வாடையை நாற்பது ஆண்டுகள் தூரமாக இருந்தாலும் நுகரலாம்” என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.
இன்னும் பல உயர்வான அடிப்படைகளை உருவாக்கியதன் மூலம் அறியாமைக் கால அசுத்தத்தை விட்டு போர்களைச் சுத்தமாக்கி அவற்றைப் புனிதப் போராக, மனிதநேயமிக்க ஜிஹாதாக மாற்றினார்கள். (ஜாதுல் மஆது)