மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவுகின்றனர்
முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்க கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். இவ்விஷயத்தை உறுதி செய்யும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். அம்ர் இப்னு ஸலமா (ரழி) கூறுகிறார்:
மக்கள் பயணிக்கும் பாதையை ஒட்டி உள்ள கிணற்றின் அருகில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். எங்களைக் கடந்து பயணிகள் செல்லும் போது அந்த மக்களின் செய்தி என்ன? இந்த மக்களின் செய்தி என்ன? அந்த மனிதன் யார்? (நபியென்று கூறும் அந்த ஆள் யார்?) என்று அவர்களிடம் விசாரிப்போம். அல்லாஹ் தன்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான் என தன்னைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பதாக மக்கள் பதில் கூறுவர். அவர்கள் கூறும் கூற்றை என் அடிமனதில் பதிய வைத்து விடுவேன். அது நன்றாகப் படிந்து விடும். அரபி மக்கள் தாங்கள் முஸ்லிமாவதற்கு மக்கா வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.
அவர்களின் கூற்று என்னவெனில், “இம்மனிதரையும் அவரது கூட்டத்தினரையும் அவரது போக்கில் விட்டு விடுங்கள். இவர் தமது கூட்டத்தாரை வெற்றி கண்டால் உண்மை நபியாவார். இவ்வாறு எண்ணம் கொண்டிருந்த அம்மக்கள், நபி (ஸல்) மக்காவை வெற்றி கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர். எனது தந்தை தனது சமுதாயத்திற்கு முன்னரே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். பின்பு எங்களிடம் வந்து, “இந்த நேரத்தில் இந்தத் தொழுகையை நிறைவேற்றுங்கள். இந்த நேரத்தில் இந்தத் தொழுகையைத் தொழுங்கள். நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் அதான் கூறட்டும். உங்களில் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)
மக்காவின் வெற்றி பல மாற்றங்களை நிகழ்த்தியது. இஸ்லாமுக்கு கண்ணியம் வழங்கி அரபியர்களை அதற்குப் பணிய வைத்தது என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக விளக்குகிறது. தபூக் போருக்குப் பின் இந்நிலை மேலும் முன்னேறியது. ஆகவேதான் ஹிஜ்ரி 9, 10 ஆகிய ஆண்டுகளில் மதீனாவை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக குழுக்கள் வரத் தொடங்கின. மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். மக்காவை மீட்கச் சென்றபோது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். ஆனால், மக்கா வெற்றிக்குப் பின் தபூக் போருக்கு சென்ற போது நபி (ஸல்) அவர்களுடன் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமான போது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஒரு இலட்சம் அல்லது ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை புடை சூழ சென்றனர்.