பக்கம் - 51 -
அப்துல்லாஹ்வுக்கு ‘ஆமினா’ என்ற பெண்மணியை துணைவியாக அப்துல் முத்தலிப் தேர்ந்தெடுத்தார். ஆமினா, வஹப் இப்னு அப்துமனாஃப் இப்னு ஜுஹ்ரா இப்னு கிலாப் உடைய மகளாவார். அக்காலத்தில் அவர் வமிசத்தாலும் மதிப்பாலும் குறைஷியரில் உயர்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். அவரது தந்தை ஜுஹ்ரா கிளையாரின் தலைவராக இருந்தார். அப்துல்லாஹ் மக்காவில் தனது மனைவியுடன் வாழ்ந்தார். சில காலங்களுக்குப் பிறகு அவரை அப்துல் முத்தலிப் பேரீச்சம் பழம் வாங்கி வர மதீனாவுக்கு அனுப்பினார். எதிர்பாராவிதமாக அவர் அங்கேயே மரணமடைந்தார்.
சில வரலாற்றாசியர்கள் கூறுவது: அப்துல்லாஹ் வியாபார நோக்கில் ஷாம் சென்றார். குறைஷியரின் ஒரு வியாபாரக் குழுவினருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது நோய் வாய்ப்பட்டு மதீனாவில் தங்கினார். நோய் அதிகரித்து அங்கேயே மரணமடைந்தார். ‘நாபிகா’ என்பவன் இல்லத்தில் அவரை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது வயது இருபத்தைந்தாக இருந்தது. அவரின் மரணம் நபி (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது. இதுவே பெரும்பாலான வரலாற்றாசியர்களின் கருத்தாகும். மற்றும் சிலர் நபி (ஸல்) அவர்கள் பிறந்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பின் அப்துல்லாஹ் இறந்தார் என்று கூறுகிறார்கள். அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட ஆமினா கல்லும் கசிந்துருகும் ஓர் இரங்கற்பாவைப் பாடினார்.
“ஹாஷிமின் மகன் பத்ஹாவின் சுற்றுப்புறத்தில் இப்போது இல்லை.
அவர் புதைக்குழிக்குள் போர்வையிலே புகுந்துவிட்டார்.
மரணம் அவரை அழைக்க அதற்கவர் பதில் தந்தார்.
மரணம் ஹாஷிமின் மைந்தன் போன்றவரை கூட விட்டு வைக்கவில்லையே!
அவன் கட்டிலை நண்பர்கள் அந்தியில் சுமந்தனர்.
நெருக்கடியால் ஒருவர் பின் ஒருவராக மாற்றினர்.
மரணம் அவரை அழித்தது.
ஆனால் அவரது புகழை அழிக்கவில்லை.
அவர் மிகுந்த இரக்க சிந்தையுள்ள வாரிவழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்.” (தபகாத் இப்னு ஸஅது)
ஐந்து ஒட்டகைகள், சிறிய ஆட்டு மந்தை, மற்றும் உம்மு அய்மன் என்ற புனைப் பெயருடைய ‘பரகா’ என்ற நீக்ரோ அடிமைப் பெண் ஆகியவற்றையே தனது குடும்பத்தாருக்கு அப்துல்லாஹ் விட்டுச் சென்றார்.
நபி (ஸல்) அவர்களை வளர்ப்பதில் இந்த நீக்ரோ பெண்மணியும் பங்கு கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (ஸஹீஹ் முஸ்லிம்)