பக்கம் - 52 -

பிறப்பு

அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ‘அனூ ஷேர்வான்’ என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

(நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்துக்கு முன்னோடியாக ஆமினாவின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையிலேயே பிறந்தார்கள்; கிஸ்ரா உடைய மாளிகையில் பதிநான்கு மாடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன பல்லாண்டு காலமாக மஜூஸிகள் வணங்கி வந்த பிரம்மாண்டமான நெருப்புக் குண்டம் அணைந்துவிட்டது ‘ஸாவா’ என்ற நீர் தடாகத்தைச் சுற்றியுள்ள கிருஸ்துவ ஆலயங்கள் இடிந்து வீழ்ந்தன என்று கூறப்படும் இத்தகைய கூற்றுகளுக்கு உறுதியான சான்றுகள் ஏதும் இல்லை. அந்த சமுதாயத்தவரும் தங்களது வரலாற்று நிகழ்வுகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை.)

குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தனது பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக பிரார்த்தித்தார். மேலும் அக்குழந்தைக்கு “முஹம்மது” எனப் பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. அரபியர்களின் வழக்கப்படி ஏழாம் நாள் நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. (தல்கீஹ், இப்னு ஹிஷாம்)

ஆமினாவிற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய முதல் பெண் அபூலஹப் உடைய அடிமைப் பெண் ஸுவைபிய்யா ஆவார். (இத்ஹாஃபுல் வரா) அப்போது ஸுவைபிய்யாவுக்கு ‘மஸ்ரூஹ்’ எனும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு முன் ஹம்ஜா அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ ஸலமா இப்னு அப்துல் அஸதுக்கும் அவர் பாலூட்டியுள்ளார். (ஸஹீஹுல் புகாரி)

ஸஅது கிளையாரிடம்

அக்காலத்தில் நகர்ப்புற அரபியர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக் கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய் தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று நரம்புகள் வலிமை அடையவும், தூய அரபி மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல் முத்தலிப் தேடினார். இறுதியாக ஸஅத் இப்னு பக்ர் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹலீமா பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்’ என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார். அவரது கணவர் ஹாரிஸ் இப்னு அப்துல் உஜ்ஜா என்பவராவார். இவருக்கு ‘அபூ கபிஷா’ என்ற புனைப்பெயரும் உண்டு.