பக்கம் - 513 -
மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.
“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.
நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறியபோது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,
இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)
என்ற வசனம் இறங்கியது.
இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள். நபி (ஸல்) “உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன?” என வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம். இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது. முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்” என உமர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் உண்மைதான் கூறினீர்கள்” என்றார்கள். (இப்னு கஸீர், இப்னு ஜரீர், இப்னு அபீ ஷய்பா)
நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பிலால் (ரழி) பாங்கு கூறி, பிறகு இகாமத் கூறினார்கள். நபி (ஸல்) மக்களுக்கு முதலில் ளுஹ்ரை தொழ வைத்தார்கள். பின்பு பிலால் (ரழி) இகாமத் கூற, நபி (ஸல்) அஸ்ர் தொழுகையைத் தொழ வைத்தார்கள். இவ்விரண்டிற்கும் இடையில் நபி (ஸல்) எந்தத் தொழுகையையும் தொழவில்லை. பின்பு தங்களது வாகனத்தில் ஏறி, தான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு தங்களது ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை ஜபலுர் ரஹ்மாவை நோக்கிய பாறைகளின் பக்கமாக ஆக்கிக் கொண்டு, நடந்து செல்லும் மக்களை தனக்கு முன்பக்கமாக ஆக்கிக் கொண்டு கிப்லாவை முன்னோக்கியவர்களாக சூரியன் மறையும் வரை ஒட்டகத்தின் மேல் அதே இடத்தில் இருந்தார்கள்.
சூரிய வட்டம் மறைந்தவுடன் உஸாமாவை தங்களது வாகனத்தின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு முஜ்தலிபாவுக்குச் சென்றார்கள். அங்கு மஃரிப், இஷா இரண்டையும் ஒரு அதான் (பாங்கு) இரண்டு இகாமத் கூறி தொழுதார்கள். இரண்டு தொழுகைகளுக்கு மத்தியில் எந்த தஸ்பீஹும் செய்யவில்லை. பிறகு காலை வரை ஓய்வெடுத்தார்கள். ஃபஜ்ர் நேரமானவுடன் பாங்கு இகாமத் கூறி காலைத் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்பு மஷ்அருல் ஹரமுக்கு ஒட்டகத்தில் வந்து சேர்ந்தார்கள். அங்கு கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டு தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ், துஆ போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்கள். சூரியன் உதயத்திற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு மினா வந்தடைந்தார்கள். அப்போது ஃபழ்லு இப்னு அப்பாஸை தங்களுக்குப் பின் அமர்த்தியிருந்தார்கள். ‘பத்ரின் முஹஸ்ஸிர்’ என்ற இடம் வந்தபோது சற்று விரைவாகச் சென்றார்கள். அங்கிருந்து நடுபாதையில் சென்று முதல் ஜம்ராவை அடைந்தார்கள். அக்காலத்தில் முதல் ஜம்ரா அருகே ஒரு மரம் இருந்தது. அந்த ஜம்ராவுக்கு ‘ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் ஊலா’ என இரு பெயர்கள் உள்ளன.