பக்கம் - 514 -
பொடிக் கற்களை எடுத்து பத்னுல் வாதியிலிருந்து ஜம்ராவை நோக்கி எறிந்தார்கள். பிறகு குர்பானி கொடுக்குமிடம் வந்து தங்களது கரத்தால் 63 ஒட்டகங்களை அறுத்தார்கள். பிறகு கத்தியை அலீ (ரழி) அவர்களிடம் கொடுக்க, மீதமுள்ள முப்பத்து ஏழு ஒட்டகங்களை அலீ (ரழி) அறுத்தார்கள். நபி (ஸல்) அலீயை தங்களது குர்பானியில் கூட்டாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு ஒட்டகையிலிருந்து ஒரு சதைத் துண்டு வீதம் எடுத்து சமைத்து, தானும் அலீயும் சாப்பிட்டார்கள். ஆணத்தையும் (சால்னா) குடித்தார்கள்.
பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் கஅபத்துல்லாஹ் வந்தார்கள். அங்கு ளுஹ்ர் தொழுது விட்டு ஜம்ஜம் கிணற்றருகே வந்தார்கள். அங்கு முத்தலிப் கிளையினர் ஜம்ஜம் கிணற்றில் இருந்து நீறைத்து மக்களுக்கு வழங்கினார்கள். அவர்களைப் பார்த்து “முத்தலிப் கிளையினரே! நன்றாக நீரை இறைத்து வழங்குங்கள். உங்களுடன் போட்டியிட்டு மக்களும் தண்ணீரை இறைக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைப்பதில் பங்கு பெறுவேன்” என்றார்கள்.
முத்தலிப் கிளையார் ஒரு வாளி தண்ணீரை இறைத்து கொடுக்க, நபி (ஸல்) அதிலிருந்து குடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அன்றும் நபி (ஸல்) முற்பகலில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது நபி (ஸல்) கோவேறுக் கழுதை மீது இருந்தார்கள். அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களின் உரையை எடுத்துரைத்து கொண்டிருக்க, மக்கள் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் செவிமடுத்தனர். தங்களது இன்றைய உரையில் நேற்று கூறிய சிலவற்றையும் சேர்த்துக் கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)
அபூபக்ரா (ரழி) வாயிலாக இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:
பிறை 10ல் நபி (ஸல்) எங்களுக்கு உரையாற்றினார்கள். “காலம், அல்லாஹ் வானங்கள் பூமியைப் படைத்த தினத்தின் அமைப்பை போன்றே இருக்கிறது. ஆண்டு 12 மாதங்கள் கொண்டது. அவற்றில் நான்கு கண்ணியமிக்கது. துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என்று தொடர்ந்து வரும் மூன்று மாதங்களும் ஜுமாதா அஸ்ஸானியா, ஷஅபான் ஆகிய இரண்டிற்கு மத்தியிலுள்ள ரஜப் மாதமும் ஆகும். பிறகு “இது எந்த மாதம்?” என்று நபி (ஸல்) கேட்க “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கு அறிந்தவர்கள்” என்று கூறிவிட்டோம். நபி (ஸல்) சற்று நேரம் அமைதியாக இருந்ததும் நபி (ஸல்) இதற்கு வேறு பெயர் கூறப்போகிறார்கள் என்று எண்ணினோம். “இது துல்ஹஜ் மாதமில்லையா?” என்று கேட்க, “ஆம்! துல்ஹஜ் மாதம்தான்” என்றோம். “இது எந்த ஊர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்” என்றோம். நபி (ஸல்) அமைதி காத்தபோது இதற்கு வேறு பெயர் கூறுவார்கள் என எண்ணினோம். “இது அந்த ஊர் இல்லையா?” என்று கேட்க, “நாங்கள் ஆம்! அந்த ஊர்தான்” என்று கூறினோம். பின்பு “இன்றைய தினம் என்ன நாள்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவார்கள் என்றோம்”. பிறகு நபி (ஸல்) “இது அறுத்து பலியிடும் 10வது தினம்தானே என்றார்கள்.” நாங்கள் “ஆம்! 10வது நாள்தான்” என்றோம்.
உங்களது உயிரும் பொருளும் கண்ணியமும் உங்களது இந்த மாதம், இந்த ஊர், இந்த தினத்தைப் போன்று கண்ணியம் பெற்றதாகும். உங்களுடைய இறைவனை சந்திப்பீர்கள். உங்களது செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பின் நீங்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு வழி தவறிவிடாதீர்கள். “நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேனா?” என்று கேட்க, குழுமி இருந்தோர் “ஆம்!” என்றனர். “யா அல்லாஹ்! நீயே இதற்கு சாட்சி, செய்தியைக் கேள்விப்படுபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவர்களை விட விளக்கமுள்ளவராக இருக்கலாம்.”என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, இப்னு ஹிஷாம், இப்னு ஜரீர்)