பக்கம் - 515 -
மேலும் இப்பிரசங்கத்தில் நபி (ஸல்) கூறினார்கள்: “ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினர்களுக்கல்ல. எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் எந்த பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ அல்லது பிள்ளையின் குற்றத்திற்காக தந்தையையோ தண்டிக்கப்பட மாட்டாது.
நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்தப் பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் அற்பமாகக் கருதுபவற்றில் அவனுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவன் மகிழ்ச்சி அடைவான். (ஜாமிவுத் திர்மிதி, இப்னு மாஜா)
நபி (ஸல்) அவர்கள் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் மினாவில் தங்கி ஹஜ் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டும், மார்க்கச் சட்டத் திட்டங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து கொண்டும் இருந்தார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின்படி நேரிய வழிமுறைகளை நிலை நிறுத்தி இணைவைப்புடைய அடையாளங்களையும் அடிச்சுவடுகளையும் அடியோடு அழித்தார்கள்.
இந்த மூன்றில் சில நாட்களிலும் நபி (ஸல்) உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘ஸர்ரா பின்த் நப்ஹான்’ என்ற பெண்மணி வாயிலாக ஓர் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) எங்களுக்கு பிறை 12ல் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “தஷ்ரீக் (பிறை 11, 12, 13) நாட்களில் இது நடுநாள் அல்லவா?” என்று வினவினார்கள். தொடர்ந்து பிறை 10ல் ஆற்றியது போன்றே இன்றும் உரை நிகழ்த்தினார்கள். (ஸுனன் அபூதாவூது)
நபி (ஸல்) அவர்களின் இவ்வுரை,
(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீர்களாக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 110:1-4)
என்ற அத்தியாயம் நஸ்ர் இறங்கியதற்கு பின் நடைபெற்றது.
துல்ஹஜ் பிறை 13ல் நபி (ஸல்) மினாவில் இருந்து புறப்பட்டு ‘அப்தஹ்’ என்ற இடத்திலுள்ள கினானா என்ற கிளையினரின் இடத்தில் அன்று பகலும் இரவும் தங்கியிருந்தார்கள். அங்குதான் ளுஹ்ர், அஸர், மஃரிப், இஷா தொழுதார்கள். இஷாவுக்குப் பிறகு சிறிது தூங்கிவிட்டு கஅபாவிற்கு வந்து ‘தவாஃபுல் விதா’ நிறைவேற்றினார்கள். மக்களையும் அதை நிறைவேற்ற பணித்தார்கள்.
ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின்பு, மதீனா முனவ்வரா நோக்கிப் புறப்படுமாறு தங்களுடன் வந்தவர்களைக்கு கூறினார்கள். அவர்கள் சற்று ஓய்வு எடுப்பதற்கும் அவகாசம் அளிக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும், தியாகங்களையும் புரிவதற்காக உடனடியாக புறப்படும்படி அழைப்பு விடுத்தார்கள்.
குறிப்பு: நபியவர்களின் இந்த இறுதி ஹஜ்ஜை பற்றிய விவரங்கள் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.