பக்கம் - 527 -
5) ஜைனப் பின்த் குஜைமா (ரழி) - இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். கணவர் உஹுத் போல் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4ல் மணமுடித்தார்கள். மணமுடித்து ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.
6) உம்மு ஸலமா ஹிந்த் பின்த் அபூ உமையா (ரழி) - இவர் அபூ ஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4, ஜுமாதா அல்ஆகிராவில் அபூ ஸலமா (ரழி) மரணமானார். அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.
7) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரழி) - இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாரிஸாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரழி) தலாக் கொடுத்து, இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)
வளர்ப்பு மகன் தொடர்பான சட்டங்கள் அத்தியாயம் அஹ்ஜாபில் இறக்கப்பட்டன. அதனை அடுத்துப் பார்ப்போம். ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53வது வயதில் ஹிஜ்ரி 20ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தியவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரழி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.
8) ஜுவைய்யா பின்த் அல்ஹாரிஸ் (ரழி) - இவன் தந்தை ஹாரிஸ், குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு சம்மாஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு (கனீமா) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட ஸாபித் முடிவு செய்தார். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6, (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 5) ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55) ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார்.