பக்கம் - 528 -
9) உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரழி) - இவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். அவர் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தை பிறந்ததால் உம்மு ஹபீபா என்றழைக்கப்பட்டார். இவர் தனது கணவருடன் ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார். அங்கு உபைதுல்லாஹ் கிறிஸ்துவராக மாறினார். சில காலத்திற்குப் பின் அங்கேயே இறந்து போனார். உம்மு ஹபீபா (ரழி) இஸ்லாமில் நிலையாக இருந்தார். ஹிஜ்ரி 7, முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமைய்யா ழம்ரீ என்ற தோழரை மன்னர் நஜ்ஜாஷியிடம் அனுப்பி, அங்குள்ள முஸ்லிம்களை அழைத்து வரச் சொன்ன போது உம்மு ஹபீபாவை மணமுடிக்கும் விஷயமாகவும் நஜ்ஜாஷியிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நபி (ஸல்) குறிப்பிட்டிருந்தார்கள். அவர் நபி (ஸல்) சார்பாக நானூறு திர்ஹங்கள் மஹர் கொடுத்து உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்து ‘ஷுரஹ்பீல் இப்னு ஹஸ்னா’ என்ற தோழருடன் அனுப்பி வைத்தார். இக்குழுவினர் நபி (ஸல்) கைபர் போரில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்தனர். போரிலிருந்து திரும்பிய பின் நபி (ஸல்) இவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 42ல் இவர் மரணமெய்தினார். சிலர் ஹிஜ்ரி 44 என்றும், சிலர் 50 என்றும் கூறுகின்றனர்.
10) ஸஃபிய்யா பின்து ஹய் (ரழி) - இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவன் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமைவிட்டு கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7ல் மணமுடித்துக் கொண்டார்கள். மதீனாவுக்குச் செல்லும் வழியில் கைபரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் இவருடன் நபி (ஸல்) வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
11) மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) - இவர் உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் ஹாரிஸின் சகோதயாவார். நபி (ஸல்) உம்ரத்துல் கழாவை முடித்துத் திரும்பும் போது ஹிஜ்ரி 7, துல்கஅதாவில் இவரை மணமுடித்தார்கள். மக்காவிலிருந்து 9 மைல் தொலைவிலுள்ள ‘சஃப்’ என்ற இடத்தில் இவருடன் நபி (ஸல்) இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஹிஜ்ரி 61ல் இதே சஃப் என்ற இடத்திலேயே இவர் மரணமடைந்தார் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். மரணமடைந்த ஆண்டு சிலர் ஹிஜ்ரி 38 என்றும், சிலர் 63 என்றும் கூறுகிறார்கள்.
ஆக, மேற்கூறிய 11 பெண்களை நபி (ஸல்) மணமுடித்து வாழ்க்கை நடத்தினார்கள். இவர்களில் கதீஜா, ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) வாழும்போதே மரணமானார்கள். மற்ற மனைவிமார்கள் அனைவரும் வாழும்போது நபி (ஸல்) மரணமானார்கள். இவர்களைத் தவிர, கிலாஃப் குடும்பத்தாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், கிந்தா குடும்பத்தைச் சேர்ந்த ஜுவைனிய்யா என்ற பெண்ணைiயும் நபி (ஸல்) மணமுடித்தார்கள். ஆனால், அவர்களுடன் வாழ்க்கை நடத்தவில்லை. இது தொடர்பான பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவற்றை இங்கு விவரிக்க இயலாது.
நபி (ஸல்) அவர்களுக்கு இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். ஒன்று: மன்னர் முகவ்கிஸ் வழங்கிய மாயா கிஃப்திய்யா. நபி (ஸல்) அவர்கள் மூலம் இவருக்கு ‘இப்றாஹீம்’ என்ற ஆண் மகவு பிறந்து பாலப்பருவத்திலேயே (ஹிஜ்ரி 10, ஷவ்வால் பிறை 28 அல்லது 29, (கி.பி. 632 ஜனவரி 27ல்) இறந்து விட்டது.