பக்கம் -1-

பதிப்புரை

தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக!

உங்கள் கைகளில் தவழும் - இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்.

ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது.

நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும். அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். மேலும், எழுதப்படும் ஆய்வுகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

1) ஆய்வுகள் முழுமையாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள் வரிசை கிரமமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2) மிக அழகிய முறையில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கும் இதற்கு முன் அது பிரசுரமாகி இருக்கக் கூடாது.

3) இந்த ஆய்வுக்குச் சான்றாக, அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட சிறிய பெரிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

4) ஆய்வாளர் தனது வாழ்க்கைக் குறிப்பையும், கல்வித் திறனையும், வேறு ஏதேனும் அவரது வெளியீடுகள் இருப்பின், அவற்றையும் தெளிவாகவும் விவரமாகவும் குறிப்பிட வேண்டும்.

5) அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ‘தட்டச்சு’ செய்து அனுப்புவது மிக ஏற்றமானது.

6) அரபி அல்லது அரபியல்லாத வழக்கிலுள்ள மொழிகளில் ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

7) கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் ஹிஜ்ரி 1396 ரபிஉல் அவ்வல் முதல் ஹிஜ்ரி 1397 முஹர்ரம் வரை. (1976 மார்ச் முதல் 1977 ஜனவரி வரை.)

8) மக்காவிலுள்ள ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி“ம்ன் தலைமைச் செயலகத்துக்கு மூடப்பட்ட உறையில் ஆய்வுக் கோர்வைகள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

9) இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் குழு ஒன்று கோர்வைகளை ஆய்வு செய்து தேர்வு செய்யும்.

இவ்வாறு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பையும் அதன் நிபந்தனைகளையும் ராபிதா வெளியிட்டவுடன் அறிஞர் பெருமக்கள் பேராவலுடன் பெரும் முயற்சி எடுத்து ஆய்வுகளை கோர்வை செய்து ராபிதாவுக்கு அனுப்பினர்.

பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றை பரிசீலனை செய்ததில் ஐந்து ஆய்வுகள் முதல் தரம் வாய்ந்தவை என முடிவு செய்யப்பட்டு பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன.

1) அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா) அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 50,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

2) கலாநிதி மாஜித் அலீ கான் (புது டெல்லி, இந்தியா) அவர்களின் (ஆங்கில) ஆய்வு இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 40,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

3) கலாநிதி நாஸீர் அஹ்மது நாசிர் (பாகிஸ்தான்) அவர்களின் (உர்து) ஆய்வு மூன்றாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 30,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

4) பேராசியர் ஹாமித் மஹ்மூது (எகிப்து) அவர்களின் (அரபி) ஆய்வு நான்காம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 20,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

5) பேராசியர் அப்துஸ்ஸலாம் ஹாஷிம் (ஸவூதி) அவர்களின் (அரபி) ஆய்வு ஐந்தாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

ஹிஜ்ரி 1398, ஷஃபான் மாதத்தில் (1978-ஜூலை) கராச்சியில் நடைபெற்ற “ஆசிய இஸ்லாமிய மாநாட்டில்” வெற்றி பெற்றவர்களின் பெயர்களை ராபிதா அறிவித்தது. மேலும், அதனை பல பத்திகைகளும் பிரசுத்தன.

பரிசுகளை வழங்குவதற்காக சங்கைக்குரிய இளவரசர் ஸுஊது இப்னு அப்துல் முஹ்ஸின் அவர்கள் தலைமையில் மாபெரும் விழா ஒன்று மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றி பெற்றவர்களுக்கு ஹிஜ்ரி 1399, ரபீஉல் அவ்வல் பிறை 12 சனிக்கிழமை காலையில் பரிசுகளை வழங்கி இளவரசர் சிறப்பித்தார்.

நூலின் இப்பின்னணியை தெரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் “அர்ரஹீக்குல் மக்தூம்” என்பதாகும். “முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்” என்பது அதன் அர்த்தம். அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர்ஆனில் (83 : 25) கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தனது நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டியுள்ளார். அதையே நாம் சுருக்கமாக இந்நூலின் தமிழாக்கத்திற்கு “ரஹீக்” என்று பெயரிட்டுள்ளோம்.

தாருல் ஹுதாவின் ஊழியர்களான நாங்கள் இந்நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழ்ச்சிகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

இம்மொழியாக்கப் பணியில் பெரிதும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய சகோதரர்களையும் இந்நூல் வெளிவர உதவிய நண்பர்கள் அனைவரையும் உங்கள் துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் இவர்களுக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் என்றென்றும் நல்லருள் புரிவானாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது பொருத்தத்தை வழங்குவானாக!

இந்நூலில் குறைகள், தவறுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறுபதிப்பில் சரிசெய்து கொள்ள ஏதுவாக சுட்டிக் காட்டுமாறு வாசக அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

தாருல் ஹுதா மேன்மேலும் பல நல்ல நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என அல்லாஹ்விடம் தாங்கள் மறவாமல் இறைஞ்ச வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம்.

அகிலத்தாரின் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டாகுக! ஆமீன்!!

குறிப்பு: இந்நூலின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) பிறப்பதற்கு முந்திய வரலாற்றைப் பற்றி சற்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சில வாசகர்களுக்கு சடைவாகத் தோன்றினால், அவர்கள் நூலின் அடுத்த பகுதிக்குச் சென்று விடவும். அதில் தான் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்குப் பிந்திய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மிக ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது.

அ. உமர் ஷரீஃப்
(குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்)
தாருல் ஹுதா
சென்னை - 1.


ஆசிரியன் வாழ்க்கைக் குறிப்பு

பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர்.

உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள ‘முபாரக்பூர்’ எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ‘ஹுஸைனாபாத்’ எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார்.

1948ஆம் ஆண்டு ‘தாருத்தஃலீம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார்.

1954ஆம் ஆண்டு ‘இஹ்யாவுல் உலூம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி பயில சேர்ந்தார்.

1956ஆம் ஆண்டு ‘ஃபைஜ் ஆம்’ (மவ்வு, உ.பி.) என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்து 1961ஆம் ஆண்டு ஆலிம் மற்றும் முஃப்தி பட்டம் பெற்றார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் கல்வித் துறையால் அங்கீகக்கப்பட்ட பல இஸ்லாமிய பட்டங்களையும் ஆசிரியர் பெற்றுள்ளார். அவை:

1959ஆம் ஆண்டு “மவ்லவி”.

1960ஆம் ஆண்டு “ஆலிம்”.

1972ஆம் ஆண்டு “ஃபாஜில் அதப்”.

1978ஆம் ஆண்டு “ஃபாஜில் தீனியாத்” ஆகிய பட்டங்களாகும்.

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய கல்விக்கூடங்களில் நடந்த தேர்வுகள், அரசாங்கத் தேர்வுகள் அனைத்திலும் ஆசிரியர் முதல் இடத்திலேயே வெற்றி பெற்றார்.

பணியாற்றிய பொறுப்புகளும் இடங்களும்

1961 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின் இலாஹாபாத் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கல்விப் பணியாற்றினார்.

1963லிருந்து 1965 வரை ‘ஃபைஜ் ஆம் மத்ரஸாவில்’ ஆசிரியராக பணியாற்றினார்.

1966லிருந்து 1968 வரை ‘தாருல் ஹதீஸ்’ (மவ்வு, உ.பி.) மத்ரஸாவில் மூன்றாண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

1969 லிருந்து 1971 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஃபைஜுல் உலூம்’ என்ற இஸ்லாமியக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி கல்லூரியை நிர்வகித்தல், பாடம் நடத்துதல் ஆகிய பணிகளுடன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

1972லிருந்து 1973 வரை முபாரக்பூல் உள்ள ‘தாருத்தஃலீம்’ என்ற மத்ரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்.

1974ல் வாரனாஸி நகரத்திலுள்ள ‘ஜாமிஆ ஸலஃபிய்யா’ என்ற இஸ்லாமியக் கல்லூயில் ஆசிரியராக சேர்ந்தார். இந்நூல் எழுதிய பிறகு மதீனாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரை அங்கு அழைத்துக் கொண்டது.

ஆசிரியர் அவர்கள் உருது மற்றும் அரபி மொழியில் மேலும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பனாரஸிலிருந்து வெளிவரும் ‘முஹத்திஸ்’ என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அல்லாஹ் அவர்களுக்கு முழுமையான உடல் சுகத்தையும், மேன்மேலும் தங்களின் கல்வியால் சமுதாய மக்களுக்கு பயனளிக்கவும் நல்வாய்ப்பு அருள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக! ஆமீன்!!


ஆசிரியர் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி அவனை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களுக்கு அத்தூதரிடம் அழகிய முன்மாதிரியை அமைத்தான்.

அல்லாஹ்வே! அத்தூதர் மற்றும் அவர்களது உறவினர்கள், தோழர்கள் ஆகியோரை மறுமை நாள் வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுவோருக்கு உனது அருளையும் ஈடேற்றத்தையும், நலம் பொருந்திய வளங்களையும், அன்பையும், பொருத்தத்தையும் என்றென்றும் வழங்குவாயாக!

மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி யாதெனில்: ஹிஜ்ரி 1396, ரபிஉல் அவ்வல் மாதம் பாகிஸ்தானில் “ஸீரத்துன் நபி” (நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களது ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி’ என்ற அமைப்பு அம்மாநாட்டில் ஒரு அகில உலக போட்டியை அறிவித்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகிய ஓர் ஆய்வு கட்டுரையாக எழுதி அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான் அந்த அறிவிப்பு. வாக்கியங்களால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிறப்புமிக்கதாக இந்த அறிவிப்பை நான் கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும், முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கின்றன என்பதை ஆழமாக ஆராயும்போது தெரிந்து கொள்ளலாம்.

அந்த சிறப்புமிக்க போட்டியில் கலந்து, கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியதை நான் எனக்குக் கிடைத்த நற்பேறாகக் கருதுகிறேன். எனினும், முன்னோர் பின்னோன் தலைவரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பற்றி முழுமையாக என்னால் கூறி முடிக்க இயலாது. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெற விழையும் சாதாரண அடியான் நான். நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக மரணித்து அவர்களது பரிந்துரையால் அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதே அடியேனின் லட்சியம்.

அடுத்து, கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை ராபிதா அறிவித்திருந்தது. அது தவிர நானும் இந்த ஆய்வுக்காக எனக்கென பல நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டேன்.

அதாவது, சோர்வு ஏற்படுத்துமளவுக்கு நீளமாக இல்லாமலும், புரியமுடியாத வகையில் சுருக்கமாக இல்லாமலும் நடுநிலையாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் குறித்து பல மாறுபட்ட செய்திகள் இருந்து அவற்றிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லையெனில், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் எனது பார்வையில் மிக ஏற்றமானதாக நான் கருதுவதை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுவேன். நான் தெரிவு செய்ததற்கான காரணங்களை பக்கங்கள் அதிகமாகிவிடும் என்பதற்காக எழுதவில்லை.

மூத்த அறிஞர்கள் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும், அவர்களின் முடிவை அப்படியே நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் சரியானது அழகானது பலவீனமானது என எப்படி முடிவு செய்தாலும் அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இதுகுறித்து மேலாய்வு செய்வதற்கு போதுமான நேரம் என்னிடம் இல்லை.

நான் கூறும் கருத்துகள் படிப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம் என நான் அஞ்சும் இடங்களில் அல்லது பெரும்பாலோன் கருத்து நான் கூறும் உண்மையான கருத்துக்கு மாற்றமாக இருக்குமிடங்களில் மட்டும் நான் தெரிவு செய்த கருத்துக்குரிய ஆதாரங்களை சுட்டிக் காட்டியுள்ளேன். அல்லாஹ்தான் நல்வாய்ப்பு வழங்க போதுமானவன்.

அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நலவை முடிவு செய்! நீதான் மன்னிப்பாளன், அன்பு செலுத்துபவன், அர்ஷின் அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!!

ஸஃபிய்யுர் ரஹ்மான்,
முபாரக்பூர், இந்தியா.