பக்கம் -2-
அரபியர்கள் நிலபரப்பு மற்றும் வமிசம், ஆட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்
அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
‘நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு’ என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு
வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல்,
செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்கள்.
அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக்
களைந்து நன்மைகளை போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள்.
படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து, படைப்பாளனாகிய ஒரே இறைவனை
வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின், இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின்
வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்படுவதற்கு
முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட பின் ஏற்பட்ட மாற்றங்களையும்
முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த அரபிய சமுதாயங்கள்,
அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய
அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது
அரசியல், பொருளியல் ஆகியவற்றை குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும்
அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
‘அரப்’ என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் பூமி, (மரம், செடி கொடிகள், தண்ணீர் இல்லாத)
வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக அரபிய தீபகற்பத்துக்கும்
(இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர் கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய வளைகுடாவும் இராக்கின்
சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப் பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே
ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000
சதுர கிலோ மீட்டரிலிருந்து 13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த முக்கியத்துவம்
உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு இப்புவியியல்
அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் எல்லாக் காலங்களிலும்
தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களுக்கு
அருகாமையில் மாபெரும் இரு வல்லரசுகள் (ரோம்-பாரசீகம்) இருந்தும் அவை இப்பகுதியில் தங்களின்
ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போனதற்கு இந்த இயற்கையான புவியியல் அமைப்பே காரணம்!
அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கின்றன.
அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் இணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப்
பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப்
பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது.
அவ்வாறே, ஒவ்வொரு கண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து
வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன.
இப்புவியியல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும்,
வியாபாரம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்தன.
அரபிய சமுதாயங்கள்
வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர்.
1) அல் அரபுல் பாயிதா
இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும்,
ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த
இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.
2) அல் அரபுல் ஆபா
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர்
என்றும் இவர்களை அழைக்கப்படும்.
3) அல் அரபுல் முஸ்தஃபா
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வமிச அரபிகள்
என்றும் அழைக்கப்படும்.
மேற்கூறப்பட்ட அல் அரபுல் ஆபா என்பவர்கள் கஹ்தான் வமிசத்தில் வந்த யமன் வாசிகள். இவர்களது
கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தான் என்பவரின் வழி வந்தவையாகும்.
இந்த கோத்திரங்களில் 1) ஹிம்யர் இப்னு ஸபா, 2) கஹ்லான் இப்னு ஸபா என்ற இரண்டு கோத்திரத்தினர்
மட்டும் பிரபலமானவர்கள். ஹிம்யர், கஹ்லான் இருவரைத் தவிர ஸபாவுக்கு பதினொன்று அல்லது
பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் ‘ஸபா
வமிசத்தினர்’ என்றே கூறப்பட்டது. அவர்களுக்கென தனிப் பெயர் கொண்ட கோத்திரங்கள் ஏதும்
உருவாகவில்லை.
அ) ஹிம்யர் கோத்திரமும் அதன் உட்பிரிவுகளும்
1) குழாஆ: பஹ்ராஃ, பலிய்ம், அல்கைன், கல்ப், உத்ரா, வபரா ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து
உருவானவர்கள்.
2) ஸகாஸிக்: இவர்கள் ஜைது இப்னு வாம்லா இப்னு ஹிம்யர் என்பவரின் சந்ததியினர் ஆவர். இதில்
ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் ‘ஸகாஸிக்’ என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். (பின்னால்
கூறப்படவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக்
என்பவர் வேறு. இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் என்பவர் வேறு.)
3) ஜைது அல் ஜம்ஹூர்: இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர்), ஸபா அஸ்ஙர் (சின்ன ஸபா),
ஹழுர், தூ அஸ்பா ஆகிய குடும்பங்கள் உருவாகின.
ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர், ஷாம் ஆகிய இரு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வமிசத்தினரின்
கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களைத் தடுத்தனர். இதனால் கஹ்லான் வமிசத்தினரின் வணிகங்கள்
பெருமளவு நசிந்தன. இதனாலும் அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம். அத்தோடு
ஸபா பகுதியில் ‘அல்அரீம்’ என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனாலும் சில காலத்திற்குப்பிறகு
அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கஹ்லான்
வமிசத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும், வெள்ளப்பெருக்கு
ஏற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகங்கள் நசிந்து போயிருந்தன. தொடர்ந்து ஸபா
நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயங்களும், கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால்
ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. இதனாலும் அவர்கள் அங்கிருந்து
வெளியேறி இருக்கலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர்.
மேன்மைமிகு குர்ஆனில் ‘ஸபா’ எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள்
இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.
மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது. அதாவது
கஹ்லான், ஹிம்யர் இரு வமிசத்தினர் இடையில் சண்டை சச்சரவுகள் தோன்றின. இதனால் கஹ்லான்
வமிசத்தினர் தங்களது நாட்டைத் துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்று விட்டனர். வணிகங்கள்
நசிந்து விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வமிசத்தினரும் ஸபாவில் இருந்து
வெளியேறி இருப்பார்கள். ஆனால், அவர்கள் வெளியேறவில்லை. இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும்
இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.
நாடு துறந்த கஹ்லான் வமிசத்தினர் நான்கு வகைப்படுவர்:
1) அஜ்து கிளையினர்
இவர்கள் தங்களின் தலைவர் ‘இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ’ என்பவரின் ஆலோசனைக்கிணங்க
நாடு துறந்தனர். இவர்கள் யமன் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து,
தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர். இவ்வமிசத்தில் யார் எங்கு தங்கினர் என்ற
விபரங்கள் பின்வருமாறு:
இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் ‘உமான்’ (ஓமன்) நாட்டில் சென்று தங்கினார்.
இவர்களை உமான் நாட்டு அஜ்து வமிசத்தினர் என்று சொல்லப்படுகின்றது.
நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் ‘துஹாமா’ என்ற இடத்திற்குச் சென்று தங்கினர். இவர்களை
ஷனூஆ அஜ்து வமிசத்தினர் எனக் கூறப்படும்.
ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியாஃ என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்குச் சென்று ‘ஸஃலபியா’ மற்றும்
‘தூ கார்’ என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தங்கினார். அவரது பிள்ளைகள்
பேரன்கள் பெரியவர்களாகி நன்கு வலிமை பெற்றவுடன் அங்கிருந்து புறப்பட்டு மதீனா நகர்
வந்து தங்கினார். இந்த ஸஃலபாவுடைய மகன் ஹாஸாவின் பிள்ளைகள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற
இருவரும். இவ்விருவல் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வமிசங்கள் தோன்றின.
அஜ்து வமிசத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹி ஜாஸ் பகுதியில் ‘மர்ருல்
ளஹ்ரான்’ என்னும் இடத்தில் தங்கினர். சிறிது காலத்திற்குப் பின் மக்கா மீது படையெடுத்து
அங்கு வசித்த ஜுர்ஹும் வமிசத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்களது ஊராக ஆக்கிக்
கொண்டனர். இந்த ஹாஸாவின் வமிசத்திற்கு ‘குஜாஆ’ என்ற பெயரும் உண்டு.
ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தங்கினார். இவரது சந்ததியினர்தான்
வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர். சிரியா வருவதற்கு முன்
ஜஃப்னா இப்னு அம்ர் ஹி ஜாஸ் பகுதியில் உள்ள ‘கஸ்ஸான்’ என்ற கிணற்றுக்கருகில் குடியேறி
சில காலம் தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு ‘கஸ்ஸானியர்’
என்ற பெயரும் வந்தது.
கஅப் இப்னு அம்ர், ஹாஸ் இப்னு அம்ர், அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும்
மேற்கூறப்பட்ட பெரியகோத்திரங்களுடன் இணைந்து ஹி ஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்.
2) லக்ம் மற்றும் ஜுதாம்
இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர். லக்ம் வமிசத்தில் வந்த
நஸ்ர் இப்னு ரபீஆ என்பவரின் சந்ததியினர்தான் ‘ஹீரா’ நாட்டை ஆண்ட அரசர்கள். அந்த அரசர்களை
‘முனாதிரா’ என்று அழைக்கப்பட்டது.
3) பனூ தைய்
அஜ்து வமிசத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன் இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின்
வடக்கு பகுதிக்குச் சென்று அஜஃ, சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர். பிற்காலத்தில்
அந்த மலைகளுக்கு ‘தைய் மலைகள்’ என்ற பெயர் வந்தது.
4) கின்தா
இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர். அங்கு அவர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படவே
மீண்டும் யமன் நாட்டில் ‘ஹழ்ர மவ்த்’ எனும் நகரில் குடியேறினர். அங்கும் அவர்களுக்கு
சிரமங்கள் ஏற்படவே, அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கத்தை
நிறுவினர். ஆனால், சில காலங்களுக்குள்ளாகவே அவர்களது அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல்
போயிற்று.
ஹிம்யர் வமிசத்தைச் சேர்ந்த ‘குழாஆ’ என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி ‘மஷாஃபுல்
இராக்’ என்ற பகுதியில் ‘பாதியத்துஸ் ஸமாவா’ என்னும் ஊரில் குடியேறினர். குழாஆ வமிசத்தைச்
சேர்ந்த சில பிரிவினர் ‘மஷாஃபுஷ் ஷாம்’ என்ற பகுதியிலும் ஹி ஜாஸ் மாநிலத்தின் வடக்குப்
பகுதியிலும் குடியேறினர்.
இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டனார் நபி இப்றாஹீம்
(அலை) ஆவார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு
கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள ‘உர்’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். நபி இப்றாஹீம்
(அலை) அவர்களின் குடும்பம், உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமய சமூக பண்பாடுகள்
குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சிகள்
மூலம் கிடைத்துள்ளன.
இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது ஊரிலிருந்து வெளியேறி ஹாரான் அல்லது
ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினார்கள். சில காலத்திற்குப் பின் அங்கிருந்தும் புறப்பட்டு
ஃபலஸ்தீனம் நாட்டில் குடியேறினார்கள். ஃபலஸ்தீனை தனது அழைப்புப் பணிக்கு மையமாக ஆக்கிக்கொண்டு
அங்கும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனின் பக்கம் அழைத்தார்கள்.
ஒரு முறை மனைவி சாராவுடன் அழைப்புப் பணிக்காக அருகிலுள்ள ஓர் ஊருக்குச் சென்றார்கள்.
அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த அவ்வூரின் அநியாயக்கார அரசன்,
அவர்களை அழைத்து வரச்செய்து அவர்களுடன் தவறான முறையில் நடக்க முயன்றான். அன்னை சாரா
அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அவன் சாராவை நெருங்க
முடியாதபடி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான். அல்லாஹ்விடம் சாரா மிக மதிப்பிற்குரியவர்;
மேலும், நல்லொழுக்கச் சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அநியாயக்காரன், சாராவின்
சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாராவுக்கு
பணி செய்ய ஓர் அழகிய அடிமைப் பெண்ணை வழங்கினான். சாரா அவர்கள் அப்பெண்ணை தனது கணவர்
இப்றாஹீமுக்கு வழங்கி விட்டார்கள். அப்பெண்மணிதான் அன்னை ஹாஜர் ஆவார். (ஸஹீஹுல் புகாரி)
இந்நிகழ்ச்சிக்குப் பின் இப்றாஹீம் (அலை) தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்குத்
திரும்பினார்கள். அங்கு ஹாஜரின் மூலமாக ‘இஸ்மாயீல்’ என்ற மேன்மைக்குரிய ஒரு மகனை, அல்லாஹ்
இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கினான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க இப்றாஹீம்
(அலை) தங்களது மகன் இஸ்மாயீல் (அலை) மற்றும் ஹாஜரை அழைத்துக் கொண்டு மக்கா வந்தார்கள்.
அக்காலத்தில் அங்கு இறை இல்லமான ‘கஅபா’ கட்டடமாக இருக்கவில்லை.
கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது. வெள்ளம் வரும்போது கஅபா இருந்த
அந்த மேட்டுப் பகுதியின் வலது இடது இரு ஓரங்களைத் தண்ணீர் அரித்து வந்தது. கஅபத்துல்லாஹ்வின்
அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமர வைத்து, சிறிது பேரீத்தங்கனிகள்
இருந்த ஒரு பையையும், தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு,
இப்றாஹீம் (அலை) ஃபலஸ்தீனம் திரும்பினார்கள். சில நாட்களில் அவ்விருவரின் உணவான பேரீத்தங்கனிகளும்
தண்ணீரும் தீர்ந்துவிட்டன. அல்லாஹ் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும்
அற்புதமான ‘ஜம்ஜம்’ ஊற்றை அவ்விருவருக்காக தோன்றச் செய்தான். (ஸஹீஹுல் புகாரி)
இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும்போது (தண்ணீர்
இருப்பதைப் பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர்.
சில வரலாற்று ஆசிரியர்கள் “இந்த இரண்டாவது ஜுர்ஹும் வமிசத்தினர் முன்பிருந்தே மக்காவைச்
சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி,
ஜம்ஜம் கிணறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில்
குடியேறினர்” என்றும் கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால்
நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளலாம். இமாம் புகாரி
(ரஹ்) கூறியிருப்பதாவது:
இப்றாஹீம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதற்கு முன்பே மக்கா
வழியாக இரண்டாவது ஜுர்ஹும் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள். அன்னை ஹாஜர் மக்காவில்
வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்பட்டபின், அதாவது இஸ்மாயீல் (அலை) வாலிபமடைவதற்கு
முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள். இவ்வாறே ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது. இதிலிருந்து
இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத்
தெரிய வருகிறது. அதே நேரம், தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்றாஹீம்
(அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது
உறுதியாக தெரியவில்லை. எனினும் நான்கு முறை சென்றதற்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.
அந்த நான்கு முறைகள் வருமாறு:
1) இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். நபி இப்றாஹீம் (அலை),
அவர்கள் தமது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்வுக்கு தியாகம் செய்வதுபோல்
கனவு ஒன்று கண்டார்கள். அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா
வந்தார்கள். இது குறித்து பின்வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு,
(இப்றாஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது நாம்
“இப்றாஹீமே!” என நாம் அழைத்து “உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள்
என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, “நிச்சயமாக
இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்). ஆகவே, மகத்தானதொரு பலியை
அவருக்கு பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37 : 103-107)
இஸ்ஹாக்கைவிட இஸ்மாயீல் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் என்று தவ்றாத்” வேதத்தில்
‘தக்வீன்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைப் பற்றி
விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலிருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு முன்
நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. ஏனெனில், மேன்மைமிகு குர்ஆனில் நபி இப்றாஹீம்
(அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுதும்
கூறப்பட்ட பிறகு அதையடுத்தே இஸ்ஹாக் (அலை) பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டுள்ளது.
ஆக, இதிலிருந்து இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக நபி இப்றாஹீம் (அலை) அவர்கள்
ஒருமுறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும், அப்போது இஸ்மாயீல் (அலை) வாலிபமடையவில்லை
என்பதும் தெரிய வருகிறது.
மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி
(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமாவது:
2) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். அவர்களின்
ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை ஜுர்ஹும் கோத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தைச்
சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். இத்திருமணத்திற்கு பிறகே
அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்கு மக்கா வந்தபோது
மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள். இஸ்மாயீல் (அலை) அப்போது மக்காவில் இல்லை.
இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை,
சுகநலன்கள் பற்றியும் விசாரித்தார்கள். அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும்
பற்றி முறையிட்டார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் “இஸ்மாயீல் வந்தால்,
தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக, அவரிடம் நீ சொல்!” என்று
சொல்லிவிட்டு சென்றார்கள். இஸ்மாயீல் (அலை) வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை
விவத்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயீல்
(அலை) மணவிலக்கு செய்துவிட்டார். அதற்குப் பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் தலைவர் ‘முழாத்
இப்னு அம்ர்’ என்பவரின் மகளைத் திருமணம் செய்தார்.
3) இஸ்மாயீல் (அலை) அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டபின் நபி இப்றாஹீம் (அலை)
அவர்கள் மக்கா வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) வீட்டில் இல்லை. நபி இப்றாஹீம்
(அலை) தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையைப் பற்றியும் விசாரித்தார்கள்.
அதற்கு “அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார்.
அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் “இஸ்மாயீல் (அலை) வந்தால் தனது வீட்டு வாசலின்
நிலையை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயீலிடம் சொல்!” என்று
சொல்லிவிட்டு ஃபலஸ்தீனம் சென்றார்கள்.
4) நான்காம் முறை நபி இப்றாஹீம் (அலை) மக்கா வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயீல்
(அலை) ஜம்ஜம் கிணற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைபடுத்திக்
கொண்டிருந்தார்கள். தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பைப்
பரிமாறிக் கொண்டார்கள். இப்பயணத்தில்தான் இருவரும் இணைந்து கஅபத்துல்லாஹ்வைக் கட்டி,
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை
அல்லாஹ் வழங்கினான். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1) நாபித் (நபாயூத்), 2) கைதார், 3) அத்பாஈல் 4) மிபுஷாம், 4) மிஷ்மாஃ, 6) தூமா, 7)
மீஷா, 8) ஹுதத் 9) தீமா, 10) யதூர், 11) நஃபீஸ், 12) கைதுமான்.
பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின.
இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர். யமன், சிரியா, மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு
சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர். சில காலங்கள் கழித்து இவர்களில் பலர்
அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர். நாளடைவில் நாபித்,
கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய்விட்டது.
ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவரின் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி
‘பத்ரா’ என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம்
(உர்துன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழங்கால நகரமாகும். இவர்களின்
அரசாட்சிக்கு பணிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர். இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை
எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர்.
இந்த நாபித்தின் வமிசத்திற்கு ‘நிபித்தி வமிசம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிரியாவில்
ஆட்சி செய்த கஸ்ஸான் வமிசத்து அரசர்களும் மதினாவில் வசித்த அவ்ஸ், கஸ்ரஜ் வமிசத்தினரும்
இந்த நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என வமிச ஆய்வாளர்களின் ஒரு
கூட்டத்தினர் கூறுகின்றனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த பலர் அந்த ஊர்களில் இன்றும் வசிக்கின்றனர்.
இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் யமன் நாட்டு தொடர்பு
(உறவு) என்று ஒரு பாடத்தை குறிப்பிட்டுள்ளார். அப்பாடத்தில் தலைப்புக்கு பொருத்தமான
சில நபிமொழிகளை எழுதி, தனது கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார்.
ஹதீஸ் கலை (நபிமொழி) வல்லுனர் இப்னு ஹஜரும் தனது விரிவுரையில், கஹ்தான் வமிசத்தினர்
நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையே ஏற்றமானது
என குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன் கைதான் குடும்பத்தினர் பல காலங்கள் மக்காவில் வாழ்ந்தனர்.
அவரது சந்ததியில் அத்னானும் அவர் மகன் மஅதும் பேரும் புகழும் பெற்றவர்கள். இவர்களிலிருந்து
அத்னானிய அரபியர்கள் தோன்றினர். இவர்களையடுத்து பிற்காலத்தில் இவரது சந்ததியில் தோன்றியவர்கள்,
அத்னான் வரை தங்களது மூதாதைகளின் பெயர்களை சரியாக மனனமிட்டு பாதுகாத்துக் கொண்டனர்.
நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறையில் இந்த அத்னான் என்பவர் 21-வது தலைமுறை பாட்டனாராவார்.
சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும்போது
அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக் கொண்டு, “இதற்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள்
பொய்யுரைத்து விட்டனர்” என்று கூறுவார்கள்.
இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி
பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர். எனினும்,
அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் பல மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர்.
அக்கருத்துகளை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகளும் உள்ளன.
“அத்னான் மற்றும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன”
என்று பிரபலமான வரலாற்று அறிஞர் இப்னு ஸஅது (ரஹ்) கூறுகிறார். இக்கால அறிஞர்களில் பெரும்
ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பவரும் இக்கருத்தையே சரிகாண்கிறார். மேலும்,
இமாம் தபரி மற்றும் மஸ்வூதி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுள்ளார்கள்.
மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின. (மஅதுக்கு ‘நஜார்’ என்ற
ஒரு மகன் மட்டும்தான் இருந்தார் என்று சிலர் கூறியுள்ளனர்.)
நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூலம் பெரியவமிசங்கள் தோன்றின. 1) இயாத்,
2) அன்மார், 3) ரபீஆ, 4) முழர்.
இக்கோத்திரங்களைப் பற்றியுள்ள விவரங்களின் வரைபடத்தை அடுத்த பக்கத்தில் பார்க்கவும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத்
தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் ‘கினானா’ குடும்பத்தைத் தேர்வு செய்தான்.
கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத்
தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களில் (மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்)
மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில்
சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த
கோத்திரத்தில் என்னைப் படைத்தான். பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச்
சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன்.
குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன். (ஸஹீஹ் முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த
பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான். பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த
பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த
கோத்திரத்தில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி அவற்றில் குடும்பத்தாலும்
ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான். (ஜாமிவுத் திர்மிதி)
அத்னான் சந்ததியினருடைய எண்ணிக்கை பல்கிப் பெருகியபோது அவர்கள் மழை வளம், பசுமை, செழிப்புமிக்க
இடங்களைத்தேடி அரபு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அப்து கைஸ், பக்ரு இப்னு
வாயில் மற்றும் தமீம் ஆகிய சந்ததியினர் பஹ்ரைனிலும், ஹனீஃபா இப்னு அலீ இப்னு பக்ர்
குடும்பத்தினர் ‘யமாமா’ சென்று அங்குள்ள ‘ஹுஜ்ர்’ பகுதியிலும் குடியேறினர். (ஹுஜ்ர்
என்பது யமாமாவின் ஒரு நகரமாகும்.) பக்ர் இப்னு வாயிலின் ஏனைய குடும்பங்கள் யமாமா, பஹ்ரைன்,
ஸைஃப் காளிமா, அதன் அருகாமையிலுள்ள கடற்பகுதி, இராக்கின் கிராமப்புறங்கள் ஆகிய இடங்களில்
குடியேறினர்.
தங்லிப் குடும்பத்தவர்கள் ‘ஃபுராத்’ நதிக்கரையில் குடியேறினர். அவர்களில் ஒரு பிரிவினர்
பக்ர் குடும்பத்தாருக்கு அருகில் வசித்தனர். பனூ தமீம் குடும்பத்தவர்கள் பஸராவிலும்
அதன் கிராமப் பகுதிகளிலும் வசித்தனர்.
சுலைம் குடும்பத்தினர் மதீனாவுக்கு அருகாமையில் வசித்தனர். அவர்கள் வாதில் குராவிலிருந்து
கைபர்வரை, மதீனாவின் கிழக்குப் பகுதி, அதன் இரு மலைப்பகுதிகள் மற்றும் ஹர்ரா வரை வசித்தனர்.
அஸத் குடும்பத்தினர் ‘தீமாஃ’ நகரத்தின் கிழக்குப் பகுதிலும் ‘கூஃபா’ நகரத்தின் மேற்குப்
பகுதியிலும் வசித்தனர். அவர்களுக்கும் தீமாஃவுக்குமிடையே ‘தய்ம்’ கோத்திரத்தைச் சேர்ந்த
புஹ்த்துர் குடும்பத்தவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. அவ்வூருக்கும் கூஃபாவுக்கு
மிடையில் ஐந்து நாட்களுக்கு உரிய நடைதூரம் இருந்தது. திப்யான் குடும்பத்தவர்கள் தீமா
முதல் ஹவ்ரான் நகரம் வரையிலும் கினானாவின் சந்ததியினர் ‘திஹாமா’ பகுதியிலும் வசித்தனர்.
மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குறைஷி குடும்பத்தவர்கள் வசித்தனர். அவர்கள்
ஒற்றுமை இன்றி பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். குஸய்ம் இப்னு கிலாப் அவர்களை ஒருங்கிணைத்து
குறைஷியருக்கென தனிப்பெரும் சிறப்புகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தந்தார்.