பக்கம் -101-
தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை...
இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து புறப்பட்டது.
மதீனாவில் நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் முஹம்மது இப்னு மஸ்லமா
(ரழி) என்றும், சிலர் ஸபா இப்னு உர்ஃபுதா (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) தங்களது
குடும்பத்திற்கு அலீ இப்னு அபூதாலிபை (ரழி) பிரதிநிதியாக நியமித்தார்கள். படை புறப்பட்ட
பின் இதைப் பற்றி நயவஞ்சகர்கள் குத்தலாகப் பேசவே, அலீ (ரழி) மதீனாவில் இருந்து புறப்பட்டு
நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்தார்கள். “மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) இருந்ததைப்
போன்று நீ எனக்கு இருக்க விரும்பவில்லையா? ஆனால், எனக்குப் பின் எந்தவொரு நபியும் இல்லை”
என்று கூறி, அலீயை மதீனாவிற்கு திரும்ப அனுப்பி விட்டார்கள்.
படை மதீனாவிலிருந்து வியாழக்கிழமை தபூக்கை நோக்கிப் புறப்பட்டது. படையின் தயாரிப்புக்காக
எவ்வளவுதான் செலவு செய்த போதிலும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை
முப்பதாயிரமாக இருந்ததால், வீரர்களின் எண்ணிக்கை அளவுக்கு வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது.
ஒரே ஓர் ஒட்டகத்தில் முறை வைத்து பதினெட்டு நபர்கள் வாகனித்தனர். உணவுப் பற்றாக்குறையால்
இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாயெல்லாம் புண்ணாகி விட்டன. தண்ணீருக்காக ஒட்டகங்களை அறுத்து
அதன் இரப்பையில் இருக்கும் நீரை அருந்தும் அளவிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்காரணத்தால்
இப்படைக்கு ‘ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது.
தபூக்கை நோக்கிச் செல்லும் வழியில் ‘ஜ்ர்’ என்னும் ஊர் வந்தது. ‘வாதில் குரா’ என்ற
பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரின் வீடுகள் இங்குதான் இருந்தன.
தாகம் மிகுதியால் அங்குள்ள கிணற்றிலிருந்து தங்களது பாத்திரங்களிலும் துருத்திகளிலும்
தண்ணீரை நிரப்பிக் கொண்டார்கள். ஆனால், “அந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள் அதில் உழுவும்
செய்யாதீர்கள் அதிலிருந்து குழைத்த மாவை ஒட்டகங்களுக்குக் கொடுத்து விடுங்கள் நீங்கள்
அதிலிருந்து எதையும் சாப்பிடாதீர்கள் அதை அடுத்துள்ள ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம்
தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து நீரை சேமித்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) ஹிஜ்ர் பகுதிக்கு வந்த போது “தங்களுக்குத்
தாங்களே அநியாயம் செய்தவர்களின் இடங்களை நீங்கள் கடந்துச் செல்லும் போது அழுதவர்களாக
செல்லுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை உங்களுக்கும் ஏற்படலாம் என பயந்து கொள்ளுங்கள்”
என்று கூறி தங்களது தலையை மறைத்துக் கொண்டு அந்தப் பள்ளத்தாக்கை விரைவாகக் கடந்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
வழியில் படைக்குத் தண்ணீன் தேவை அதிகமாகவே, நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபி
(ஸல்) அல்லாஹ்விடம் தண்ணீர் புகட்டக் கோரி இறைஞ்சினார்கள். அல்லாஹ் தாகத்தைப் போக்க
மேகத்தை அனுப்பி மழை பொழியச் செய்தான். மக்கள் தாகம் தணிந்து பாத்திரங்களிலும் மழை
நீரைச் சேமித்துக் கொண்டார்கள்.
“தபூக்கிற்கு மிக நெருக்கமாக வந்தவுடன் நாளை நீங்கள் தபூக் நகரின் ஊற்றை சென்றடைவீர்கள்.
முற்பகல் வருவதற்குள் அங்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றவுடன் நான் வரும் வரை அந்த
ஊற்றை யாரும் நெருங்கவும் வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
“நாங்கள் தபூக் வந்தபோது எங்களில் இருவர் முந்திக் கொண்டு அந்த ஊற்றுக்குச் சென்று
விட்டனர். அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் சிறுகச் சிறுக வெளியேறிக் கொண்டிருந்தது. நபி
(ஸல்) அவ்விருவரிடம் “நீங்கள் அந்தத் தண்ணீரைத் தொட்டீர்களா?” என்று கேட்க அவர்கள்
“ஆம்!” என்றனர். அவ்விருவருக்கும் அல்லாஹ் நாடியவாறு சிலவற்றைக் கூறிய நபி (ஸல்) அவ்வூற்றுக்
கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அள்ளி ஒரு பாத்திரத்தில் நிரப்பி, பின்பு அதில்
தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு அந்தத் தண்ணீரை மீண்டும் அந்த ஊற்றில் கொட்டினார்கள்.
அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு வழிந்தோடியது. மக்களெல்லாம் நீர் பருகிக் கொண்டார்கள்.
பின்பு “முஆதே உனது வாழ்க்கை நீண்டதாக இருந்தால் வெகு விரைவில் இந்த இடங்கள் தோட்டங்களாக
மாறுவதைப் பார்ப்பாய்” என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தபூக் செல்லும் வழியில் அல்லது சென்றடைந்த பிறகு (இரு விதமாகவும் சொல்லப்படுகின்றது)
“இன்றிரவு உங்கள் மீது கடுமையான காற்று வீசும். யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம்
உள்ளவர்கள் அதைக் கட்டி வைக்கவும்” என நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுமையான
காற்று வீசியது. படையில் ஒருவர் எழுந்து நின்றுவிட்டார். அவர் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு
‘தை’ மலையில் வீசப்பட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) பயணத்தில் ளுஹ்ரை அஸருடன் அல்லது அஸ்ரை ளுஹ்ருடன், மஃரிபை இஷாவுடன் அல்லது
இஷாவை மஃரிபுடன் சேர்த்து தொழுது வந்தார்கள்.
தபூக்கில் இஸ்லாமியப் படை
இஸ்லாமியப் படை தபூக் வந்தடைந்து தனது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டு எதிரிகளைச்
சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தது. நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு
உரமூட்டும் பேருரை நிகழ்த்தினார்கள். ஈருலக நன்மையை அடைந்து கொள்வதற்கு ஆர்வப்படுத்தியதுடன்,
அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்தார்கள். ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும்
தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும்
சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள்.
மற்றொருபுறம் நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை
ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கமடைந்தார்கள். அவர்கள் தங்களது
பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றி தங்களது நாட்டுக்குள்
பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி
முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. இதனால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்குப்
பெரும் பயன்களும் கிடைத்தன. ஒருக்கால் ரோமர்கள் வந்து போர் நடந்திருந்தால் கூட, இந்தளவு
நன்மைகள் கிடைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது.
தபூக்கிற்கு அருகிலிருந்த அய்லா பகுதியின் தலைவர் யுஹன்னா இப்னு ரூஃபா தானாக முன்வந்து
ஒப்பந்தம் செய்து கொடுத்ததுடன் ஜிஸ்யாவையும் நிறைவேற்றினார். மேலும், ‘ஜர்பா’ பகுதியினரும்
‘அத்ருஹ்’ பகுதியினரும் ஒப்பந்தம் செய்து ஜிஸ்யாவையும் வழங்கினர். நபி (ஸல்) ஒப்பந்தப்
பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். இவ்வாறே மீனா பகுதி மக்களும் தங்கள்
பகுதியில் விளையும் கனிவர்க்கங்களில் 1ழூழூ4 பங்கை வழங்கி விடுவதாக சமாதான ஒப்பந்தம்
செய்து கொண்டனர்.
அய்லாவின் தலைவருக்கு நபி (ஸல்) எழுதிக் கொடுத்த ஒப்பந்தமாவது:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் புறத்திலிருந்தும்
அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்தும் யுஹன்னா இப்னு ருஃபாவுக்கும் அய்லாவாசிகளுக்கும்
வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாகும் இது. கடலில் செல்லும் இவர்களது கப்பல்களுக்கும்,
பூமியில் செல்லும் இவர்களது பயணக் கூட்டங்களுக்கும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பும் முஹம்மதுடைய
பாதுகாப்பும் உண்டு. மேலும், ஷாம் நாட்டிலும் இவர்களது கடல் பகுதியை சுற்றி வாழும்
மக்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உண்டு. ஆனால், இவர்களில் யாராவது குழப்பம், கலகம் செய்தால்
அவரது உயிர், பொருள் பாதுகாக்கப்படாது. அவரை அடக்குபவருக்கு அவரது பொருள் சொந்தமாகிவிடும்.
இவர்கள் தண்ணீருக்காக செல்லும் போது யாரும் தடுக்கக் கூடாது கடலிலோ தரையிலோ பயணிக்கும்
போது யாரும் குறுக்கிடக் கூடாது.”
அடுத்து, இருபத்து நான்கு குதிரை வீரர்களுடன் தூமதுல் ஜந்தலின் தலைவர் உகைதிர் என்பவரை
பிடித்து வருவதற்காக காலித் பின் வலீதை நபி (ஸல்) அனுப்பினார்கள். மேலும், “நீ அவரை
சந்திக்கும் போது அவர் ஒரு மாட்டை வேட்டையாடிக் கொண்டிருப்பார்” என்றும் நபி (ஸல்)
காலிதிடம் கூறினார்கள். காலித் (ரழி) உகைதின் கோட்டைக்கு அருகில் சென்று தாமதித்தார்.
அப்போது ஒரு மாடு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வெளியேறி உகைதின் கோட்டைக் கதவை கொம்புகளால்
உராய்ந்து கொண்டிருந்தது. உகைதிர் அதை வேட்டையாடி பிடிப்பதற்காகக் கோட்டைக்கு வெளியே
வந்தார். அன்று பௌர்ணமி இரவாக இருந்தது. காலித் தனது படையுடன் சென்று உகைதிரை பிடித்து
வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம்
ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகள் தருவதாக ஒப்பந்தம்
செய்து கொண்டார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜிஸ்யா தருவதாகவும் ஒப்புக் கொண்டார். முன்
சென்றவர்களுடன் ஒப்பந்தம் செய்தது போன்று நபி (ஸல்) இவருடனும் செய்து கொண்டார்கள்.
ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்கள் எல்லாம் “இனி நம்முடைய பழைய தலைவர்களை நம்புவதில்
பலனில்லை அந்தக் காலம் மலையேறி விட்டது இனி முஸ்லிம்களுக்குத்தான் நாம் பணிய நேரிடும்”
என நன்கு புரிந்திருந்தனர். இவ்வாறே இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து விரிவாகி ரோம ராஜ்ஜியத்தைத்
தொட்டது. பெரும்பாலான அரபு பகுதியிலுள்ள ரோம ஆளுநர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு
வந்தது.
மதீனாவிற்குத் திரும்புதல்
தபூக்கிலிருந்து இஸ்லாமிய ராணுவம் சண்டையின்றி வெற்றி வாகை சூடி மதீனா வந்தது. சண்டைகளிலிருந்து
இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். வழியில் ஒரு கணவாயை அடையும்போது நபி (ஸல்)
அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் சதித்திட்டம் தீட்டினர். நபி
(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முன் பக்கத்தில் இருந்து அம்மார் இழுத்துச் செல்ல, ஹுதைஃபா
(ரழி) ஒட்டகத்தைப் பின்னாலிருந்து ஓட்டிச் சென்றார். திடீரென ஒரு கூட்டம் முகங்களை
மறைத்தவர்களாக இம்மூவரையும் சூழ்ந்து கொண்டனர். ஹுதைஃபா (ரழி) தன்னிடமிருந்த வளைந்த
கைத்தடியால் சூழ்ச்சிக்காரர்களுடைய வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார்.
நபித்தோழர்கள் உஷாராக இருப்பதைக் கண்ட அந்தக் கும்பலின் உள்ளத்தில் பயம் கவ்வியதும்
தப்பி ஓடி, முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். அந்தக் கும்பலில்
வந்தவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பதை நபி (ஸல்) விவரித்துக் கூறினார்கள்.
இதனால்தான் ஹுதைஃபாவுக்கு “நபியின் அந்தரங்கத் தோழர்” என்ற புனைப் பெயரும் உண்டு.
இந்நிகழ்ச்சி குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
(உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள்) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச்
செய்யவும் முயற்சித்தனர். (அல்குர்ஆன் 9:74)
வெகு தூரத்தில் மதீனாவின் கட்டடங்கள் தெரியவே “இது தாபா (இது சிறந்த ஊர்). இதோ உஹுது
மலை. இது நம்மை நேசிக்கிறது நாமும் இதனை நேசிக்கிறோம்” என நபி (ஸல்) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வருகையை கேள்விப்பட்ட முஸ்லிம்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர்,
குழந்தைகள் அனைவரும் மதீனாவுக்கு வெளியே வந்து மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று,
“நம் எதிரே முழு நிலா தோன்றியது
வழியனுப்பும் பாறைகளிலிருந்து.
நன்றி கூறல் நம்மீது கடமை;
அல்லாஹ்வை அழைப்பவர் அழைக்கும் வரை.”
என்று பாடினர்.
ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இப்போருக்காக
ஐம்பது நாட்கள் செலவாயின. அதாவது, இருபது நாட்கள் தபூக்கில் தங்கினார்கள். மீதம் முப்பது
நாட்கள் இதற்கான பயணத்தில் கழிந்தன. இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.