பக்கம் -100-
தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்)
இதற்கு முன் நிகழ்ந்த மக்கா போர் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைப் பிரித்தறிவித்து
விட்டது. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைப்
புரிய வைத்துவிட்டது. எனவே, காலநிலை முற்றிலும் மாறி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில்
வரத் தொடங்கினர் என்பதை இதற்குப் பின் “குழுக்கள்” என்ற தலைப்பில் வரும் விவரங்களிலிருந்தும்,
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்தும்
இதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஆக, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் முஸ்லிம்களின் உள்நாட்டுப்
பிரச்சனைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக்
கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் மக்களை
அழைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு முழுமையான அவகாசம் கிடைத்தது.
போருக்கான காரணம்
எனினும், ஒரே ஒரு சக்தி மட்டும் எவ்விதக் காரணமுமின்றி முஸ்லிம்களுக்குத் தொந்தரவு
கொடுத்து வந்தது. அதுதான் ரோமானியப் பேரரசு. ரோமர்கள் அக்காலத்தில் உலகத்தில் மிகப்
பெரிய வல்லரசாகத் திகழ்ந்தார்கள். இதற்கு முன் ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த ‘ஹாரிஸ்
இப்னு உமைர் அஸ்தி’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர்
கஸ்ஸானி’ என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான். அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்)
ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் ‘முஃதா’ என்ற இடத்தில்
ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுமையாக அந்த அநியாயக்காரர்களைப் பழிவாங்க
முடியவில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் ஒரு சிறு படை ஒரு மாபெரும் வல்லரசை எதிர்த்துச்
சண்டையிட்டது. அரபியர்களின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
முஃதாவின் அருகிலுள்ள அரபியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும்
கூட முஸ்லிம்களைப் பற்றிய அதே பாதிப்பை இது ஏற்படுத்தியது.
இப்போனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மையையும் இதற்குப் பின் தன் கட்டுப்பாட்டுக்குள்
இருந்த அரபுக் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து
கொள்வதையும் கைஸர் மன்னனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தனது எல்லையை நெருங்கி
வரும் ஆபத்தாக உணர்ந்தான். அரபியர்களுக்கு அருகிலிருக்கும் தனது ஷாம் நாட்டுக் கோட்டைகளை
ஆட்டம் காண வைக்கும் ஒரு செயலாகக் கருதினான். முஸ்லிம்களின் இந்த எழுச்சி அழிக்க முடியாத
அளவுக்கு வலிமைப் பெறுவதற்கு முன்னதாகவே அடக்கி அழித்துவிட வேண்டும் ரோம் நாட்டை சுற்றியிருக்கும்
அரபு பகுதிகளில் முஸ்லிம்கள் கிளர்ச்சியை உண்டாக்குவதற்கு முன்னதாகவே அவர்களை ஒன்றுமில்லாமல்
செய்துவிட வேண்டும் என அவன் எண்ணினான்.
முஃதா போர் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் தனது இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக
பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான்
கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.
ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்
முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மாபெரும் போருக்குரிய முனைப்புடன் ரோமர்கள் வருகிறார்கள்
எனும் செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மதீனாவாசிகள் அச்சத்திலும் திடுக்கத்திலும்
காலத்தைக் கழித்தனர். வழக்கத்திற்கு மாற்றமான ஏதாவது இரைச்சலைக் கேட்டுவிட்டால் ரோம்
நாட்டுப் படை மதீனாவிற்குள் நுழைந்து விட்டதோ என எண்ணினர். உமர் இப்னு கத்தாப் (ரழி)
தங்களைப் பற்றி கூறுவதிலிருந்து இதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) தங்கள் மனைவிகளிடம் ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அந்த ஆண்டு சத்தியம்
செய்து விலகி தங்கள் வீட்டுப் பரணியில் தங்கிக் கொண்டார்கள். உண்மை நிலவரத்தை அறியாத
நபித்தோழர்கள் நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள் என்பதாக விளங்கிக்
கொண்டார்கள். இது நபித்தோழர்களுக்குப் பெரும் துக்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியைப் பற்றி உமர் (ரழி) கூறுகிறார்கள்:
“எனக்கு அன்சாரி நண்பர் ஒருவர் இருந்தார். நான் எங்காவது சென்று விட்டால் அன்று நடந்த
செய்திகளை என்னிடம் வந்து கூறுவார். அவர் எங்காவது சென்றிருந்தால் நான் அவருக்கு விவரிப்பேன்.
நாங்கள் இருவரும் மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்தோம். நாங்கள் முறைவைத்து மாறி
மாறி நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொள்வோம். கஸ்ஸான் நாட்டு மன்னன் எங்களைத்
தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி பரவியிருந்ததால் எப்போதும்
நாங்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருநாள் திடீரென அன்சாரி தோழர் எனது வீட்டிற்கு
ஓடிவந்து “திற! திற!!” எனக் கூறிக் கொண்டு கதவை வேகமாகத் தட்டினார். நான் கதவைத் திறந்து
“என்ன கஸ்ஸானிய மன்னனா வந்து விட்டான்?” எனக் கேட்டேன். அதற்கவர் “இல்லை! அதைவிட மிக
ஆபத்தான ஒன்று நடந்து விட்டது நபி (ஸல்) தங்கள் மனைவியரை விட்டு விலகி விட்டார்கள்”
என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)
மற்றும் ஓர் அறிவிப்பில் வருவதாவது, உமர் (ரழி) கூறுகிறார்கள்: கஸ்ஸான் கிளையினர் எங்களிடம்
போர் புரிவதற்குப் படையை ஒன்று திரட்டுகின்றார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்ததிலிருந்து
அதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எனது அன்சாரி நண்பர் நபி (ஸல்)
அவர்களின் அவையில் கலந்து கொண்ட பின், இஷா நேரத்தில் என் வீட்டு வாசல் கதவைப் பலமாகத்
தட்டி “என்ன அவர் தூங்குகிறாரா?” என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம்
வந்தபோது அவர் “மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது” என்று கூறினார். அதற்கு
நான் “என்ன? கஸ்ஸானின் படை வந்துவிட்டதா?” என வினவினேன். அதற்கவர் “அதைவிடப் பெரிய
விஷயம் ஒன்று நடந்து விட்டது. நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள்”
என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)
மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து ரோமர்களின் படையெடுப்பைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில்
எந்தளவு அச்சம் நிலவியிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ரோமர்கள் மதீனாவைத் தாக்கப்
புறப்படுகின்றனர் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் பல
சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களே வெற்றியடைகிறார்கள்.
அவர்கள் உலகில் எந்த சக்தியையும், அரசர்களையும் பயப்படுவதில்லை. மாறாக, நபியவர்களின்
வழியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நயவஞ்சகர்கள்
நன்றாக விளங்கியிருந்தும் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தங்கள் உள்ளத்தில்
மறைத்து வைத்திருந்த கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.
“தங்களுடைய சதித்திட்டங்களைத் தீட்டுவதற்குத் தகுந்த இடமாக ஒரு பள்ளிவாசலையும் அமைத்துக்
கொண்டனர். முஸ்லிம்களுக்குக் கெடுதல் செய்வதற்காகவும், அவர்களுக்கு மத்தியில் பிரிவினை
உண்டாக்குவதற்காகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பவர்களுக்குப் பதுங்குமிடமாகவும்
அமைய இப்பள்ளியை ஏற்படுத்தினர்” என்று இந்தப் பள்ளியைப் பற்றி குர்ஆனிலேயே அல்லாஹ்
குறிப்பிடுகின்றான். இப்பள்ளியைக் கட்டிய பின் நபி (ஸல்) அதில் தொழுகை நடத்த வரவேண்டுமென
கோரினர். அவர்களது நோக்கமெல்லாம் “முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் இப்பள்ளியில் தாங்கள்
செய்யும் சதிகளைப் பற்றி முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளக் கூடாது தங்களுக்கும் வெளியிலுள்ள
முஸ்லிம்களின் எதிரிகளான தங்களின் நண்பர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இது அமைய வேண்டும்”
என்பதே.
அவர்கள் பலமுறை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அந்தப் பள்ளியில் தொழுகை நடத்த வருமாறு
கேட்டுக் கொண்டும், நபி (ஸல்) அதைத் தவிர்த்து வந்தார்கள். இறுதியில் ‘தபூக் போர்’
முடிந்து திரும்பும் போது இப்பள்ளியின் நோக்கத்தைப் பற்றிய முழுச் செய்தியையும் அல்லாஹ்
தன் நபியவர்களுக்கு அறிவித்து, அந்த நயவஞ்சகர்களைக் கேவலப்படுத்தி விட்டான். எனவே,
போரிலிருந்து திரும்பிய பின் அப்பள்ளியை இடித்துத் தகர்க்குமாறு கட்டளையிட்டார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்க, ஷாம் தேசத்திலிருந்து மதீனாவுக்கு ஜைத்தூன் எண்ணெய் விற்பனைக்காக
வந்திருந்த நிஃப்த்திகள் “ர்கல் நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட பெரும் படையை தயார் செய்து
விட்டான். தனது ஆளுநர்களில் ஒருவரை அப்படைக்குத் தலைமை ஏற்கச் செய்து, அரபியர்களில்
கிறிஸ்தவர்களாக மாறியிருந்த லக்கும், ஜுதாம் ஆகிய இரு கோத்திரங்களையும் அப்படையில்
இணைத்திருக்கிறான். இப்படையின் முற்பகுதி தற்போது பல்கா வந்தடைந்து இருக்கிறது” என்ற
அதிர்ச்சி தரும் செய்தியை முஸ்லிம்களின் காதுகளில் போட்டனர். மிகப் பெரிய ஆபத்து வந்துவிட்டதை
முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.
நிலைமை மேலும் மோசமாகுதல்
மேற்கூறியது ஒருபுறமிருக்க, அக்காலம் கடுமையான வெய்யில் காலமாக இருந்தது. மக்களும்
மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும்,
அது பேரீத்தம் பழங்களின் அறுவடை காலமாகவும் இருந்தது. தங்களின் அறுவடையில் ஈடுபடுவதும்,
மதீனா நிழலில் இளைப்பாறுவதும் அவர்களுக்கு மிக விருப்பமாக இருந்தது. அதுமட்டுமின்றி
செல்ல வேண்டிய இடமும் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது.
மேற்கண்ட காரணங்களால் போருக்குப் புறப்படுவது முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமானதாகவே இருந்தது.
நபியவர்களின் எதிர் நடவடிக்கை!
இந்த எல்லா நிலைமைகளையும் நபி (ஸல்) உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். இந்த இக்கட்டான
சந்தர்ப்பத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது முஸ்லிம்களின் எல்லைக்குள்
அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் முஸ்லிம் இராணுவத்தின் கௌரவத்திற்கும்
மிகப் பெரிய பின்னடைவையும் களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். ஹுனைன் யுத்தத்தில் படுதோல்வி
கண்டபின் தனது இறுதி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கும் முஷ்ரிக்குகள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள்.
முஸ்லிம்களுக்குச் சோதனைகளும், ஆபத்துகளும் நிகழ வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கும்
நயவஞ்சகர்கள் பாவி அபூ ஆமின் உதவியுடன் ரோம் நாட்டு மன்னனுடன் தொடர்பு வைத்திருந்தனர்.
முஸ்லிம்கள் மீது ரோமர்கள் தாக்குதல் நடத்தினால் இந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் முதுகுக்குப்
பின்னாலிருந்து தாக்கி அழிப்பார்கள். இதனால் இஸ்லாமைப் பரப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும்
அவர்களின் தோழர்களும் இதுநாள் வரை செய்து வந்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்.
பல போர்களையும் படையெடுப்புகளையும் சந்தித்து, உம்ராலும் பொருளாலும் பல தியாகங்களைச்
செய்ததின் மூலமாக கிடைத்த பயன்கள் எல்லாம் வீணாகிவிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த
நபி (ஸல்) “எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது
அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது”
என்று திட்டவட்டமான முடிவெடுத்தார்கள்.
ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு
நபி (ஸல்) தங்களின் நிலைமையை அறிந்து தெளிவாக முடிவெடுத்த பின் போருக்குத் தயாராகுங்கள்
என தங்களது தோழர்களுக்கு அறிவித்தார்கள். அருகிலுள்ள அரபு கோத்திரத்தாருக்கும், மக்கா
வாசிகளுக்கும் தங்களது தோழர்களின் குழுக்களை அனுப்பி போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள்.
நபி (ஸல்) ஒரு போருக்காகச் செல்லும் போது, தான் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிடாமல்
அதற்கு மாற்றமாக வேறொர் இடத்திற்குச் செல்கிறோம் என்று குறிப்பிடுவது அவர்களின் வழக்கமாக
இருந்தது. ஆனால், இப்போது நிலைமை பெரும் ஆபத்திற்குரியதாக இருப்பதாலும், மிகக் கடுமையான
வறுமை நிலைமையில் இருப்பதாலும் தங்களின் நோக்கத்தை நபி (ஸல்) வெளிப்படையாகக் கூறினார்கள்.
“நாம் ரோமர்களை சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான
முழு தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கிவைத்தான்.
துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால்
ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு
ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின்
பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின்
தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு போருக்குத் தயாராகுகின்றனர்
ரோமர்களிடம் போர் புரிய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பைக் கேட்டதுதான் தாமதம்,
முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாக போருக்குத் தயாராகினர். மக்காவைச்
சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். உள்ளத்தில்
நயவஞ்சகத் தன்மையுள்ளவர்களைத் தவிர போரில் கலந்து கொள்ளாமலிருப்பதை மற்றெவரும் அறவே
விரும்பவில்லை. ஆம்! நபி (ஸல்) அவர்களின் அந்த நெருக்கமான மூன்று தோழர்களைத் தவிர.
இவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. மற்றும் தங்களின் போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத
வறுமையில் உள்ள நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்களும்
ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்”
என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்க கவலையுடன் “உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம்
ஒன்றுமில்லையே” என்றார்கள். அந்தப் பதிலை கேட்ட தோழர்கள் “அல்லாஹ்வின் பாதையில் செலவு
செய்ய எங்களிடம் வசதி இல்லையே!” என்று அழுதவர்களாக சபையிலிருந்து திரும்பிச் சென்றனர்.
(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு “உங்களை ஏற்றிச்
செல்லக் கூடிய வாகனம் என்னிடம் இல்லையே” என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும்
செலவுக்குரிய பொருள் இல்லாது போன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை
தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும்
(போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் 9:92)
முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு
செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்
கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர் உஸ்மான் (ரழி) ஷாம் நாட்டு வியாபாரத்திற்கு
அனுப்புவதற்காக ஒரு குழுவை தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் இருநூறு ஒட்டகைகள்,
அதற்குரிய முழு சாதனங்களுடன் இருந்தன. மேலும், இருநூறு ஊக்கியா வெள்ளிகளும் இருந்தன.
அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு அவை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் தர்மமாக வழங்கினார்கள்.
பின்பு ஓரு நாட்கள் கழித்து முழு சாதனங்களுடன் உள்ள நூறு ஒட்டகைகளை தர்மமாக வழங்கிவிட்டு
ஆயிரம் தங்க காசுகளை நபி (ஸல்) அவர்களின் மடியில் பரப்பினார்கள். அதை நபி (ஸல்) புரட்டியவர்களாக
“இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எது செய்தாலும் அது அவருக்கு இடையூறளிக்காது” எனக்
கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)
இந்தளவுடன் நிறுத்திக் கொள்ளாமல் உஸ்மான் (ரழி) மேன்மேலும் அல்லாஹ்வின் பாதையில் வாரி
வழங்கினார்கள். இப்போருக்காக மொத்தத்தில் தொள்ளாயிரம் ஒட்டகைகளையும், நூறு குதிரைகளையும்
வழங்கினார்கள். இதுமட்டுமின்றி ஏராளமானத் தங்க வெள்ளி காசுகளையும் வாரி வழங்கினார்கள்.
இப்போருக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இருநூறு ஊக்கியா வெள்ளிகளை வழங்கினார்கள்.
அபூபக்ர் (ரழி) தனது செல்வம் அனைத்தையும் வழங்கினார்கள். தனது குடும்பத்தினருக்காக
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர வேறெதையும் விட்டு வைக்கவில்லை. இப்போருக்காக முதன்
முதலில் தனது பொருளை வழங்கியவர் அவர்தான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கியது மொத்தம்
நான்காயிரம் திர்ஹமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது செல்வத்தில் பாதியை, அப்பாஸ் (ரழி)
பெரும் செல்வத்தை, தல்ஹா, ஸஅது இப்னு உபாதா, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) ஆகியோரும்
தங்களின் பெரும்பகுதி செல்வத்தை வழங்கினார்கள். ஆஸிம் இப்னு அதி (ரழி) தொண்ணூறு வஸ்க்
பேரீத்தம் பழங்களை வழங்கினார்கள். இவ்வாறு குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை
எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஒரு சிலர்,
ஒன்று அல்லது இரண்டு ‘முத்“கள் (ம்முத்’ என்பது ஓர் அளவாகும்.) தானியங்களை வழங்கினர்.
அதைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் இருக்கவில்லை. பெண்கள் தங்களிடமிருந்த வளையல்கள்,
கால், காது அணிகலன்கள், மோதிரங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். உள்ளத்தில் நயவஞ்சகத்
தன்மை உள்ளவர்களே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர்.
இவர்கள் எத்தகையவர்கள் என்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருட்களை)
நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக)
கூலி வேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள்
பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான்.
அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 9:79)