பக்கம் -99-
உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்
இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) ஜிஃரானாவில் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்.
மக்காவில் அத்தாப் இப்னு உஸைப் (ரழி) என்ற தோழரை ஆளுநராக நியமித்துவிட்டு மதீனா நோக்கிப்
பயணமானார்கள். ஹிஜ்ரி 8, துல்கஅதா மாதம் முடிய ஆறு நாட்கள் இருக்கும் போது மதீனா வந்தடைந்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, தாரீக் இப்னு கல்தூன்)
மக்கா வெற்றிக்குப் பின் அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளும் குழுக்களும்
இந்த நீண்ட வெற்றிமிக்க பயணத்திலிருந்து நபி (ஸல்) மதீனா திரும்பிய பின்,
பல பாகங்களிலிருந்து மக்கள் கூட்டங்களும், குழுக்களும் வந்தன. மேலும், நபி (ஸல்) தங்களது
தோழர்களை பல இடங்களுக்கு ஆளுநர்களாக அனுப்பினார்கள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும்
பல அழைப்பாளர்களை பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இவை ஒரு புறமிருக்க, இஸ்லாமை
ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அரபுலகம் கண் கூடாகப் பார்த்துக் கொண்ட உண்மைக்கு அடிபணியாமல்
அகம்பாவம் பிடித்து, வம்புத்தனம் செய்து வந்த கோத்திரங்களை அடக்குவதற்குண்டான நடவடிக்கைகளையும்
நபி (ஸல்) எடுத்தார்கள். இது தொடர்பான சிறு விளக்கங்களைப் பார்ப்போம்:
ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்
ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் நபி (ஸல்) மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்
என்பதை இதற்கு முன் நாம் அறிந்தோம். ஆக, சில நாட்களிலேயே ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதம்
இஸ்லாமியப் புத்தாண்டு தொடங்கிற்று. சென்ற ஆண்டிற்கான ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) தங்களது
தோழர்களை பல கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதன் விவரமாவது:
ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுப்பப்பட்ட கோத்திரத்தாரின் பெயர்கள்:
1. உயைனா இப்னு ஹிஸ்ன் (ரழி) - பனூ தமீம்
2. யஜீது இப்னு அல் ஹுஸைன் (ரழி) - அஸ்லம், கிஃபார்
3. அப்பாது இப்னு பஷீர் அஷ்ஹலி (ரழி) - சுலைம், முஜைனா
4. ராஃபி இப்னு மக்கீஸ் (ரழி) - ஜுஹைனா
5. அம்ரு இப்னு ஆஸ் (ரழி) - பனூ ஃபஜாரா
6. ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கிளாப்
7. பஷீர் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கஅப்
8. இப்னு லுத்பிய்யா அஜ்தி (ரழி) - பனூ துப்யான்
9. முஹாஜிர் இப்னு அபூ உமைய்யா (ரழி) - ஸன்ஆ நகரம் (இவர்கள் ஸன்ஆவிற்கு அனுப்பப்பட்ட
காலத்தில் தான் தன்னை நபி என்று வாதிட்ட அஸ்வது அனஸி அங்குத் தோன்றினான்)
10. ஜியாது இப்னு லபீது (ரழி) - ஹழர மவுத் (யமன் நாட்டிலுள்ள ஓர் ஊர்)
11. அதீ இப்னு ஹாத்தம் (ரழி) - தை மற்றும் பனூ அஸத்
12. மாலிக் இப்னு நுவைரா (ரழி) - பனூ ஹன்ளலா
13. ஜிப்கான் இப்னு பத்ர் (ரழி) - பனூ ஸஅதின் ஒரு பிரிவினருக்கு
14. கைஸ் இப்னு ஆஸிம் (ரழி) - பனூ ஸஅதின் மற்றொரு பிரிவினருக்கு
15. அலா இப்னு ஹழ்ரமி (ரழி) - பஹ்ரைன் தீவு
16. அலீ இப்னு அபூதாலிப் (ரழி) - நஜ்ரான் பிரதேசம் (ஜகாத் மற்றும் ஜிஸ்யா வசூலிப்பதற்காக
அனுப்பப்பட்டவர்கள்.)
நபி (ஸல்) அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலேயே மேற்கூறப்பட்ட அனைத்து குழுக்களையும் அனுப்பிவிடவில்லை.
அவர்களில் சில கோத்திரத்தார்கள் தாமதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால், அற்குப் பிறகே
நபி (ஸல்) தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அளவுக்கு முக்கியத்துவம்
கொடுத்து நபி (ஸல்) தங்களது தோழர்களை அனுப்பி வைத்தது ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில்தான்
ஆரம்பமானது. இதிலிருந்து ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமிய அழைப்புப் பணி
எந்தளவு வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட
பின் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.
படைப் பிரிவுகள்
ஜகாத் வசூல் செய்வதற்குப் பல கோத்திரத்தாரிடம் தங்களது தோழர்களை அனுப்பியவாறே சில படைகளையும்
பல பகுதிகளுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். அரேபியத் தீபகற்பம் முழுவதிலும் முழு அமைதியை
நிலை நாட்டுவதே அதன் நோக்கமாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் விவரம் வருமாறு:
1) உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு: தமீம் கிளையினர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய
கிளையினரைத் தூண்டி வந்ததுடன், முஸ்லிம்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஸ்யா வரியையும்
கொடுக்க விடாமல் தடுத்து வந்தனர். எனவே, உயைனா இப்னு ஹிஸ்ன் அல்பஸாயின் தலைமையில் ஐம்பது
குதிரை வீரர்களை ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில் பனூ தமீம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி
வைத்தார்கள். இப்படையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் எவரும் இருக்கவில்லை. அனுப்பப்பட்ட
அனைவரும் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களே.
உயைனா தனது படையுடன் இரவில் பயணிப்பதும் பகலில் மறைவதுமாக தமீமினரை நோக்கிச் சென்றார்.
ஒரு பாலைவனத்தில் ஒன்று கூடியிருந்த அந்த தமீம் கிளையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.
முஸ்லிம்களின் படையைச் சமாளிக்க முடியாமல் அக்கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினர். பதினொரு
ஆண்கள், இருபத்தொரு பெண்கள், முப்பது சிறுவர்களைக் கைதிகளாக்கி உயைனா மதீனா அழைத்து
வந்தார். அவர்கள் அனைவரும் ரம்லா பின்த் அல்ஹாரிஸின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தமீமினன் தலைவர்களில் பத்து முக்கிய நபர்கள் தங்களின் கைதிகளை விடுவிப்பதற்காக மதீனா
வந்தனர். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களின் இல்லம் வந்து “முஹம்மதே! எங்களிடம்
வாருங்கள்” என்று கூவி அழைத்தனர். நபி (ஸல்) வந்தவுடன் அவர்கள் நபியவர்களை பற்றிக்
கொண்டனர். நபி (ஸல்) சிறிது நேரம் பேசிவிட்டு ளுஹ்ர் தொழுகைக்காகச் சென்று விட்டார்கள்.
தொழுகை முடித்து பள்ளியின் முற்றத்தில் அமர்ந்தபோது அக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம்
வந்து “வாருங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பெருமையைப் பற்றி விவாதிப்போம்” என்று கூறினர்.
அவர்களில் புகழ்பெற்ற பேச்சாளரான உத்தாத் இப்னு ஹாரிஸ் என்பவரை அவர்கள் முன்னிறுத்தினர்.
அவர் உரையாற்றியவுடன் இஸ்லாமியப் பேச்சாளரான கைஸ் இப்னு ஷம்மாஸுக்கு நபி (ஸல்) கட்டளையிட,
அவர் எழுந்து உத்தாதிற்கு பதிலளித்தார். பின்பு தங்களின் புகழ்பெற்ற கவிஞர் ஜுப்ருகான்
இப்னு பத்ரை அவர்கள் நிறுத்தினர். அவர் தங்களின் பெருமையைக் கவிதையாகப் பாடினார். நபி
(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்திடம் பதில் கூறும்படி கூறினார்கள். ஹஸ்ஸான் உடனடியாக
வாயடைக்கும் பதிலைத் தனது கவிதையில் வழங்கினார்.
இப்போட்டி முடிந்தவுடன் தமீம் குழுவில் இடம் பெற்றிருந்த நடுவர் அக்ரா இப்னு ஹாபிஸ்
கூறி தீர்ப்பாவது: நபி (ஸல்) அவர்களின் பேச்சாளர் நமது பேச்சாளரை விட மிகத் திறமையானவர்
நபி (ஸல்) அவர்களின் கவிஞர் நமது கவிஞரைவிட மிகத் திறமையானவர் அவர்களுடைய குரல் நமது
குரலைவிட மிக உயர்ந்தது அவர்களது சொற்கள் நமது சொற்களை விட மிக உயர்ந்தது. அவன் இத்தீர்ப்புக்குப்
பின் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். நபி (ஸல்) அவர்களுக்கு வெகுமதிகளை அளித்ததுடன் கைதிகளையும்
அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
2) குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் ‘துரபா’ என்ற நகருக்கருகிலுள்ள
‘தபாலா’ என்ற பகுதியில் வசிக்கும் கஸ்அம் கபீலாவைச் சேர்ந்த ஒரு கிளையினரிடம் குத்பா
இப்னு ஆமிர் என்பவரை இருபது வீரர்களுடன் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பத்து
ஒட்டகங்களில் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பயணம் செய்தனர். அங்குச் சென்று எதிரிகளுடன்
கடுமையான சண்டை செய்தனர். இரு தரப்பிலும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டன. இதில் தளபதியாக
இருந்த குத்பாவும் கொல்லப்பட்டார். ஆனால், இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே கிடைத்தது.
எதிரிகளின் கால்நடைகளையும் பெண்களையும் முஸ்லிம்கள் மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.
3) ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் ‘ழஹ்ஹாக்
இப்னு ஸுஃப்யான் கிலாபி’ என்பவரின் தலைமையில் கிளாப் கிளையினரை இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காக
நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் அழைப்பை அவர்கள் ஏற்க
மறுத்துப் போருக்குத் தயாரானார்கள். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எதிரிகளில்
ஒருவன் மட்டும் கொல்லப்பட்டான்.
4) அல்கமா படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் ஆகிர் மாதம் ‘ஜுத்தா’ கடற்கரையை நோக்கி ‘அல்கமா
இப்னு முஜஸ்ஸிர்’ என்பவரின் தலைமையின் கீழ் 300 வீரர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
இதற்குக் காரணம், ஹபஷாவைச் சேர்ந்த சிலர் மக்காவில் கொள்ளையடிப்பதற்காக ஜுத்தா கடற்கரையில்
ஒன்று கூடியிருக்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அல்கமா தனது
படையுடன் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றினார். அங்குள்ள ஒரு தீவு வரை சென்று
தேடினார். முஸ்லிம்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஹபஷிகள் தப்பி ஓடிவிட்டதால்
சண்டை ஏதும் நடக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)
5) அலீ படைப் பிரிவு: தை கூட்டத்தினருக்கென்று பிரசித்திப்பெற்ற சிலை ஒன்றிருந்தது.
அதை அம்மக்கள் ‘ஃபுல்ஸ்’ என்றழைத்தனர். அதை இடிப்பதற்ககாக அலீ இப்னு அபூ தாலிபை 150
வீரர்களுடன் ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள்
நூறு ஒட்டகைகள், ஐம்பது குதிரைகளில் பயணம் செய்தனர். இவர்களிடம் கருப்பு நிறத்தில்
பெரிய கொடி ஒன்றும், வெள்ளை நிறத்தில் சிறிய கொடி ஒன்றும் இருந்தது. வந்து சேர வேண்டிய
இடத்தை அடைந்தவுடன், ஃபுல்ஸ் சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும்
கைப்பற்றினர். அதில் மூன்று வாட்களும், மூன்று கவச ஆடைகளும் இருந்தன.
அங்கு வசித்த ‘ஹாத்திம்’ குடும்பத்தனரிடம் சண்டையிட்டு நிறைய கால்நடைகளைக் கைப்பற்றி
அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தய்ம் கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு
ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை (சிரியா) நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியாக்கப்பட்டவர்களில்
இவன் சகோதரியும் இருந்தார். மதீனா வரும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்காக வெற்றிப் பொருளில்
ஐந்தில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு மீதியை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
ஆனால், கைதிகளில் ஹாத்திம் குடும்பத்தாரை மட்டும் பங்கிடாமல் நபி (ஸல்) அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது. அதீயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் தன் மீது இரக்கம் காட்டுமாறு
கேட்டுக் கொண்டார். “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதவி செய்பவரும் ஓடிவிட்டார் தந்தையும்
இறந்துவிட்டார் நானோ வயதான மூதாட்டி. எனக்குப் பணிவிடை செய்வதற்கும் யாருமில்லை. எனக்கு
உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்” என்று அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம்
கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமக்கு உதவி செய்பவர் யார்?” என்று கேட்க, “அதீ இப்னு
ஹாத்திம்” என்று பதிலளித்தார். “அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் விரண்டோடிய
அவரா?” என்று கேட்டுவிட்டு வேறெதுவும் பேசாமல் சென்று விட்டார்கள்.
மறுநாளும் இதுபோன்றே நபி (ஸல்) அவர்களிடம் அப்பெண்மணி உரையாடினார். முந்தைய நாள் கூறியது
போன்றே கூறிவிட்டு சென்று விட்டார்கள். மூன்றாம் நாளும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து
முன்பு கூறியது போன்றே கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர் மீது இரக்கம் காட்டி அவரை
விடுதலை செய்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் இருந்தார். அநேகமாக அவர் அலீயாக இருக்குமென்று
அப்பெண் கூறுகிறார். அவர் “வாகனிப்பதற்காக வாகனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு
பெற்றுக் கொள்!” என்று யோசனைக் கூறினார். அப்பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் வாகனம்
கேட்கவே நபி (ஸல்) அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து
திரும்பிய அப்பெண்மணி தனது சகோதரரைத் தேடி ஷாம் நாட்டிற்குப் பயணமானார். அங்கு தனது
சகோதரரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை குறித்து விவரித்துவிட்டு “உமது
தந்தை செய்திராத நற்செயல்களை எல்லாம் அவர் செய்கிறார். எனவே, விரும்பியோ விரும்பாமலோ
நீ அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்” என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த
யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை
சந்திக்க அவர் பயணமானார்.
நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை
அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் “நீ இஸ்லாமை
ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுவதற்கு
பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு
எட்டுகிறதா?” என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் “அப்படி ஒன்றுமில்லை” என்றார்.
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு “அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்?
அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?”
என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் “அவ்வாறு இல்லை” என்று பதிலளித்தார்.
யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள், கிறிஸ்தவர்கள் வழிதவறியவர்கள் என்று நபி
(ஸல்) கூறினார்கள். இதனைக் கேட்ட அதிய் “நான் இணைவைப்பிலிருந்து முற்றிலும் விலகிய
முஸ்லிமாக இருக்கிறேன்” என்று கூறினார். அவன் இப்பேச்சைக் கேட்ட நபி (ஸல்) முகம் மலர்ந்தவர்களாக
அன்சாரி ஒருவன் வீட்டில் விருந்தாளியாக, அவரைத் தங்க வைத்தார்கள். அவர் அங்கு தங்கி
ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து வந்தார்.
(ஜாதுல் மஆது)
தான் முஸ்லிமானதைப் பற்றி அதிய் கூறியதை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)அறிவிக்கிறார்: “என்னை
நபி (ஸல்) தங்கள் இல்லத்தில் அவர்களுக்கு முன்பாக அமர வைத்தார்கள். நபி (ஸல்) என்னிடம்
“ஹாத்திமின் மகன் அதியே! நீ ‘ரகூஸி“யாக இருந்தாய் அல்லவா?” (ம்ரகூஸி’ என்பது கிறிஸ்துவம்
மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்.)
அதிய்: ஆம்! அப்படித்தான்.
நபி (ஸல்): உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா பொருட்களின் 1ழூழூ4 பங்கை அனுபவித்து
வந்தாயல்லவா?
அதிய்: ஆம்! அவ்வாறுதான் செய்தேன்.
நபி (ஸல்): அது உமது மார்க்கத்தில் ஆகுமான செயலாக இல்லையே?
அதிய்: ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொல்வது சதான்.
மக்களுக்கு தெரியாதவை அவருக்குத் தெரிகிறது. எனவே, நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர்தான்
என்று அறிந்து கொண்டேன்.) (இப்னு ஹிஷாம்)
அதிய் தொடர்பாக முஸ்னது அஹ்மதில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.
நபி (ஸல்): அதிய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றமடைவாய்!
அதிய்: நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தானே?
நபி (ஸல்): நான் உம்மைவிட உமது மார்க்கத்தை நன்கறிவேன்.
அதிய்: அது எப்படி என் மார்க்கத்தை என்னைவிட நீங்கள் நன்கறிவீர்கள்?
நபி (ஸல்): நீர் ரகூஸியா கூட்டத்தை சேர்ந்தவர்தானே? உமது கூட்டத்தில் கனீமத்தில் 1ழூழூ4
பங்கை அனுபவித்து வந்தீரே?
அதிய்: நீங்கள் கூறுவது உண்மைதான்.
நபி (ஸல்): நிச்சயமாக உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதல்லவே.
அதிய் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களின் இந்தப் பேச்சுக்கு முன் என்னால் ஒன்றும்
செய்ய முடியவில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். (முஸ்னது அஹ்மது)
ஸஹீஹ் புகாரியில் அதிய்யின் மூலமாக மற்றும் ஒரு நிகழ்ச்சி பதிவாகியுள்ளது: நான் நபி
(ஸல்) அவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம்
வந்து தனது வறுமையை முறையிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொருவர் தனது பொருட்களை
எல்லாம் கொள்ளையர்கள் வழியில் கொள்ளையடித்து விட்டதாக முறையிட்டார். நபி (ஸல்) என்னைப்
பார்த்து “அதிய்யே! ஹீரா தேசம் எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? உனக்கு ஆயுள்
நீளமாக இருந்தால் ஒரு பெண் தனியாக ஹீராவிலிருந்து புறப்பட்டு கஅபாவிற்கு வந்து தவாஃப்
செய்வாள். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த பயமும் இருக்காது என்பதை நீ பார்க்கத்தான்
போகிறாய். மேலும், உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் கிஸ்ராவின் பொக்கிஷங்களை நீ வெற்றி
கொள்வாய். மேலும், உனக்கு வயது நீளமாக இருந்தால் ஒருவர் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை
அள்ளிக்கொண்டு தர்மம் செய்ய வெளியேறி அதைப் பெறுவோர் யாரும் உண்டா? என்று தேடி அலைவார்.
ஆனால், அதைப் பெறுவதற்கு யாரும் அவருக்குக் கிடைக்க மாட்டார்கள்.
சற்று நீளமாக வரும் ஹதீஸின் இறுதியில்: “ஹீராவிலிருந்து பயணம் செய்து கஅபாவிற்கு வந்து
தவாஃப் செய்து திரும்பும் பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த
அச்சமுமில்லை. மேலும், கிஸ்ரா இப்னு ஹுர்முஜின் கஜானாக்களை வெற்றி கொண்டவர்களில் நானும்
இருந்தேன். உங்களுக்கு வாழ்க்கை நீளமாக இருந்தால் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான
கை நிறைய தங்கம், வெள்ளியை எடுத்துக் கொண்டு தர்மம் செய்ய அலைபவர்களையும் நீங்கள் பார்ப்பீர்கள்”
என்று அதிய் கூறுகினார். (ஸஹீஹுல் புகாரி)