பக்கம் -107-
15) துஜீப் குழுவினர்
இக்குழுவினர் ஜகாத் பொருட்களை தங்களிலுள்ள ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு
மீதமானதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் தங்கி
குர்ஆனையும் மார்க்கக் கல்வியையும் கற்றனர். மேலும், பல விஷயங்கள் குறித்து கேட்டனர்.
நபி (ஸல்) அவற்றை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும்படி தோழர்களிடம் சொன்னார்கள். நீண்ட
நாட்கள் தங்கியிருக்க முடியாமல் திரும்பிச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் புறப்படும்
போது அவர்களிலுள்ள அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை
மன்னித்து என் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டும் என்று எனக்காக அல்லாஹ்விடம்
நீங்கள் துஆக் கேட்குமாறு கோருவதற்காகவே நான் இங்கு வந்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்களும்
அவ்வாறே அவருக்கு துஆச் செய்தார்கள்.
அல்லாஹ் தனது தூதரின் துஆவை அப்படியே ஏற்றுக் கொண்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்
பின் குழப்பங்கள் அதிகமாகி மக்கள் மார்க்கத்தை விட்டு மதம் மாறும் அபாயம் ஏற்பட்ட போது
இவரும் இஸ்லாமில் உறுதியாக இருந்து, தமது கூட்டத்தாருக்கு இவர் வழங்கிய அறிவுரையால்
அவர்களும் இஸ்லாமில் நிலையாக இருந்தனர். இவர் தனது கூட்டத்தாரிலேயே மிக அதிகமாக போதுமென்ற
குணம் கொண்டிருந்தார். இக்குழுவினர் ஹஜ்ஜத்துல் விதாவில் (ஹிஜ்ரி பத்து) நபியவர்களின்
இறுதி ஹஜ்ஜில் இரண்டாம் முறையாக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர்.
16) தய் குழுவினர்
இக்குழுவில் ஜைது அல்கைல் என்பவரும் இருந்தார். இக்குழுவினர் வந்த போது நபி (ஸல்) அவர்கள்
இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். “ஒருவரைப்
பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை
விட குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப்
பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றி கூறப்பட்டது எனக்குக்
குறைவாகவே பட்டது. எனவே, “ஜைது அல் கைர் - சிறந்த ஜைது என நான் பெயரிடுகிறேன்” என்று
நபி (ஸல்) கூறினார்கள்.
இவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றுள்ளனர். வரலாற்றாசிரியர்கள்
நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பல குழுக்களை குறிப்பிட்டுள்ளனர். அக்குழுக்களின் பெயர்களை
மட்டும் இங்குக் குறிப்பிடுவோம்.
1) யமன் நாட்டு குழுக்கள், 2) அஜ்து, 3) பனூ ஸஅத் ஹுதைம், 4) பனூ ஆமிர், 5) பனூ அஸத்,
6) பஹ்ரா, 7) கவ்லான், 8) முஹாப், 9) பனூ ஹாரிஸ் இப்னு கஅப், 10) காமித் 11) பனூல்
முன்தஃபிக், 12) சலாமான், 13) பனூ அப்ஸ், 14) முஜைனா, 15) முராத், 16) ஜுபைத், 17)
கிந்தா, 18) தூ முர்ரா, 19) கஸ்ஸான், 20) பனூ ஈஷ், 21) நகஃ. இந்த குழுவினர் ஜி 11ல்
முஹர்ரம் மாதம் நடுவில் வந்தனர். இக்குழுவில் 200 நபர்கள் இருந்தனர். இதுவே நபி (ஸல்)
அவர்களைச் சந்தித்த குழுக்களில் இறுதியானக் குழுவாகும்.
மேற்கூறிய குழுக்களில் பெரும்பாலானவை ஹிஜ்ரி 9,10-ல் வந்தவை. சில குழுக்கள் மட்டும்
11ல் வந்தன. இவ்வாறு பல குழுக்கள் அதிகமதிகம் மதீனா நோக்கி வருகை தந்தது, இஸ்லாமிய
அழைப்புப் பணி பெற்ற வெற்றியையும் இஸ்லாம் அரபியத் தீப கற்பத்தில் முழுமையான முறையில்
வேரூன்றி விட்டதையும் அரபிகள் மதீனாவை உயர்ந்த பார்வையில் பார்த்தனர் என்பதைச் சுட்டிக்
காட்டுகிறது. இஸ்லாமுக்கு முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர்கள்
அறிந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக
மாறியது. அதனைப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலை உண்டானது. இவ்வாறெல்லாம் இருந்தும் புதிதாக
இஸ்லாமை ஏற்ற அனைவரின் உள்ளங்களிலும் மார்க்கம் உறுதி பெற்றிருந்தது என நாம் கூற முடியாது.
காரணம், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் முரட்டுக் குணங்கொண்ட கிராமவாசிகளாக
இருந்தனர். இவர்கள் இஸ்லாமை ஏற்றது தங்களது தலைவர்கள் முஸ்லிமாகி விட்டார்கள் என்ற
காரணத்தினால்தான். இவர்கள் முஸ்லிமாக மாறிய பின்பும் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்
செயல்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இஸ்லாமிய அறிவுரைகள் மூலம் சீராக வேண்டிய
அளவு அவர்கள் தங்களைச் சீர்செய்து கொள்ளவில்லை.
எனவே, இவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ்
தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள்.
அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத் திற்காகச்)
செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி)
விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை) மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக்
கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்
9:97, 98)
மற்றும் சிலரை அல்லாஹ் புகழவும் செய்கிறான்:
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப் புறத்து) அரபிகளில் பலர்
இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி
வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக்
கொள் கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள்
அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான்.
நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:99)
மறுபுறம் மக்காவாசிகள், மதீனாவாசிகள், ஸகீஃப் கிளையினர், யமன், பஹ்ரைனில் இருந்த பெரும்பாலானவர்கள்
மார்க்கத்தில் உறுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். மூத்த நபித்தோழர்களும், சிறந்த
முஸ்லிம்களும் இதில் உள்ளவர்களே! (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல்
பாரி)
அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்
நபி (ஸல்) அவர்களின் இறுதி காலக் கட்டத்தைப் பற்றி நாம் அறிவதற்கு முன் இதுநாள் வரை
அவர்கள் புரிந்த செயல்பாடுகள், ஆற்றிய பணிகள் பற்றி சுருக்கமாகக் கூறுவது நல்லது. அதற்குக்
காரணம், இச்செயல்பாடுகள்தான் நபி (ஸல்) வாழ்க்கையின் இதயப் பகுதியாகும். இதனால்தான்
ஏனைய இறைத்தூதர்களிலிருந்து நமது நபி (ஸல்) தனிச் சிறப்புற்று விளங்குகிறார்கள். அல்லாஹ்
அவர்களுக்கு “முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் தலைவர்” என்று மகுடம் சூட்டியிருப்பதற்கும்
காரணம் இதுதான்.
(நபியே!) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீங்கள் (தொழுகைக் காக எழுந்து)
நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல அதிலொரு) சொற்ப பாகம். (அல்குர்ஆன் 73:1, 2)
(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து நின்று
(மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் (அல்குர்ஆன் 74:1, 2)
என்று அல்லாஹ் கூறியதுதான் தாமதம்.
நபி (ஸல்) எழுந்தார்கள், நின்றார்கள்... இருபது ஆண்டுகளுக்கு மேலாக நின்றார்கள். இப்புவியில்
மாபெரும் அமானிதச் சுமையை... தங்களது தோளில் சுமந்தவர்களாக நின்றார்கள்... முழு மனித
சமுதாயச் சுமையை... கொள்கைச் சுமையை... பல துறைகளில் போராட்டச் சுமையை... சுமந்து நின்றார்கள்...
மடமை இருள்களிலும் வழிகேடுகளிலும் மூழ்கிப்போன மனித இதயத்தை... மீட்க எழுந்து நின்றார்கள்...
அற்ப ஆசைகளின் பிடியிலும், மன இச்சை சிறைகளிலும், சிக்குண்டிருக்கும் உள்ளங்களை மீட்கும்
போராட்டங்களுக்காக நின்றார்கள்... ஆம்! ஒரு நேரத்தில் தங்களுக்கென உன்னதத் தோழர்களை
வார்த்தெடுத்தார்கள்... அறியாமை அழுக்குகளிலிருந்தும் அற்ப உலக ஆசைகளில் இருந்தும்
அவர்களின் உள்ளங்களை புடம் போட்டத் தங்கமாக மாற்றினார்கள்.
அடுத்து சில சோதனைகள்... போர்கள்... ஒன்றா?... இரண்டா?... தொடர்ந்த சங்கிலிகளைப் போன்று
போர்களே போர்கள்! அல்லாஹ்வின் எதிரிகளுடன்... எதிரிகளா அவர்கள்?... கல் நெஞ்சம் கொண்ட
அநியாயக்காரர்கள்... இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க... இறை நேசர்களை ஒழிக்க... இஸ்லாமிய
இளஞ்செடி பூமியில் வேரூன்றி... வானளாவ அதன் கிளைகள் உயர்ந்து... அதன் நிழல்கள் உலகை
வியாபிப்பதற்கு முன்பாக... அதைக் கிள்ளி எறிய நப்பாசைக் கொண்டவர்கள்! எதிரிகளுடன் ஓயாத
ஒழியாத போர் ஒருபுறம்! உள்ளத்துடன் உக்கிரமான போர் மறுபுறம்! உள்ளத்துடன் போர் நிரந்தரம்!...
என்றுமே அது ஷைத்தானுடன் நடைபெறும்!... உள்ளத்தின் ஆழங்களில் ஊசலாட்டத்தை ஊடுருவச்
செய்து மனிதனை வழிகெடுக்க வேண்டும்! அவனது நேர்வழிப் பயணத்தைத் திசை திருப்ப வேண்டும்
என்பதற்காக ஒரு கணமும் ஷைத்தான் அயர்வதில்லை... உள்ளத்தின் போர் என்பது அவனுடன் செய்யும்
போரே!
இந்த இடுபாடுகள் நிறைந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் அழைப்பை எட்டச் செய்வதற்காக
நபி (ஸல்) நின்றார்கள். தொடர்ந்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாய்... கோணங்கள் மாறுபட்ட பல
போர்களை எதிர்கொள்ள நபி (ஸல்) நின்றார்கள். தங்களை நோக்கி வந்த உலகைக் கடைக் கண்ணாலும்
பாராமல் சிரமத்திலும் துன்பத்திலும், நெருக்கடியான நிலையிலும் நிலைகுலையாது நின்றார்கள்...
நின்ற நபியின் நிழலிலே... விசுவாசிகள் சுகத்தையும் நிம்மதியையும் சுவாசித்தார்கள்...
முடிவுபெறா சிரமங்கள் தொடர்ந்தாலும்... அழகிய பொறுமையுடன் இரவில் நின்று... ஏக இறைவனை
வணங்குவதுடன்... அருள்மறை குர்ஆனை ஓதுவதுடன்... அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருந்து...
இறை ஆணையை நிறைவேற்ற நின்றார்கள்... (ழிலாலுல் குர்ஆன்)
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இறைப் பணியில் கவனம் சிதறாமல் தொடர் போராட்டத்தில் எதிர்
நீச்சல் போட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள்... அந்த வெற்றிக்கு
அரபுலகம் பணிந்தது! அறியாமை இருள் அகன்றது! பிணிகொண்ட அறிவுகள் சீர்பெற்றன! இதனால்
சிலைகளை விட்டு விலகியது மட்டுமல்ல அதனை உடைத்து தவிடு பொடியாக்கினார்கள். அவர்களின்
ஏகத்துவ முழக்கம் விண்ணுலகை எட்டியது. இறை வணக்கத்திற்கான பாங்கொலி விண்ணின் செவிகளைப்
பிளந்தன. புதிய நம்பிக்கையால் உயிர்பெற்று எழுந்த அழைப்புப் பணி (ஏகத்துவ முழக்கம்)
வறண்ட பாலைவனங்களை ஊடுருவிச் சென்றன.
நாலாத் திசைகளிலும் குர்ஆனை கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் பரவிச் சென்று இறைவேதத்தை ஓதிக்
காண்பித்து, அவனது சட்டங்களை நிலை நிறுத்தினார்கள். பிரிந்து கிடந்த வம்சங்களும் சமூகங்களும்
ஒன்றாயின. மனிதன் மனிதனை வணங்குவதிலிருந்து விடுபட்டு... அல்லாஹ்வை வணங்க முற்பட்டான்.
அநியாயக்காரன்-அநீதியிழைக்கப்பட்டவன், அரசன்-ஆண்டி, எஜமான்-அடிமை என்ற பாகுபாடுகள்
நீங்கின. மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே அனைவரும் தங்களுக்குள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர்
நேசித்துக் கொள்ள வேண்டும் இறைக் கட்டளைக்கு ஒவ்வொருவரும் அடிபணிய வேண்டும் என்ற சூழ்நிலை
உருவானது. அறியாமைக் கால கர்வம், முன்னோர்களைக் கூறி பெருமையடிப்பது, இனவெறி கொள்வது
அனைத்தையும் விட்டு அல்லாஹ் இவர்களை தூரமாக்கினான்.
இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகைளிலும் ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விட, ஓர் அரபியல்லாதவருக்கு
அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச்
சிறப்பும் மேன்மையும் இல்லாமல் போனது. மக்கள் எல்லோரும் ஆதமின் மக்களே! ஆதமோ மண்ணால்
படைக்கப்பட்டவர் என்ற உண்மை உள்ளத்தில் பதிய வைக்கப்பட்டது. இறுதியாக இந்த அழைப்புப்
பணியின் சிறப்பால் முழு மனித சமுதாயம், சமூகம் அரசியல் என அனைத்தாலும் ஒன்றுபட்டது.
இம்மை மறுமை பிரச்சனைகளில் மானுடம் ஈடேற்றம் கண்டது. காலங்கள் மாறி புதிய உலகம் தோன்றிது.
புதிய வரலாறு உருவானது. புதிய சிந்தனை எழுந்தது.
இஸ்லாமிய அழைப்புப் பணி தோன்றுவதற்கு முன்னதாக உலகை அறியாமை ஆட்சி செய்தது. மனித உள்ளங்கள்
சீர்கெட்டு பண்பாடின்றி இருந்தன. நன்மை தீமைகளின் அளவு கோல்கள் கோளாறாயிருந்தன. அநியாயம்
புரிதலும் அடிமைபடுத்துதலும் சமுதாயத்தில் பரவி இருந்தன. ஒருபுறம் சிலர் வரம்பு மீறிய
செல்வத்தில் கொழிக்க, மறுபுறம் ஏழைகள் வறுமையில் வாடினர்.
எத்தனையோ முந்திய மார்க்கங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் குளறுபடிகளும், குழப்பங்களும்,
பலவீனங்களும் வேரூன்றி விட்டதால், மனித இதயங்களை அவை ஆட்சி செலுத்த முடியவில்லை. அவை
உயிரற்ற, உணர்ச்சியற்ற, இறுகிப்போன சடங்குகளாகவே மாறிவிட்டன. இதனால் மனிதர்களை இறைநிராகரிப்பும்
வழிகேடுகளும் சூழ்ந்திருந்தன. இஸ்லாமிய அழைப்புப் பணி, மனித சமுதாயத்திற்குச் செய்ய
வேண்டிய பணிகளைச் சிறப்பாக செவ்வனே செய்தது கற்பனை, வீண் குழப்பங்கள், பிறருக்கு அடிமையாகுதல்,
விஷமம், கலகம், கெட்ட குணங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றிலிருந்து மனித உயிரை தூய்மைப்படுத்தியது.
அநியாயம், அட்யூழியம், அத்துமீறல், பிரிந்து சிதறி ஒற்றுமையின்றி வாழுதல், நிற, இன
பேதங்கள் பாராட்டுதல், அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகுதல், குறிகாரர்கள், ஜோசியர்களால்
இழிவடைதல் ஆகிய அனைத்திலிருந்தும் இஸ்லாமிய அழைப்புப் பணி மனித சமுதாயத்தைக் காப்பாற்றியது.
ஒழுக்கம், கட்டுப்பாடு, அக, புற தூய்மை, முழு சுதந்திரம், புதுமை, கல்வியறிவு, தெளிவு,
உறுதி, பிடிப்பு, இறை நம்பிக்கை, மனித நேயம், வாழ்க்கையை வளப்படுத்த, மேம்படுத்த, உயர்வாக்கத்
தொடர்ந்து முயற்சித்தல், அவரவர் உரிமையைக் கொடுத்தல் என்ற உறுதிமிக்க அஸ்திவாரத் தூண்களின்
மீது மனித சமுதாயக் கட்டடத்தை இஸ்லாம் நிறுவியது. இதுவரை கண்டிராத வளமிக்க எழுச்சிகளையும்,
மாற்றங்களையும் இந்த அழைப்புப் பணியின் முன்னேற்றத்தால் அரபுலகம் அடைந்தது. தனது வாழ்க்கை
வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒளி வெள்ளத்தை இந்நாட்களில் அரபுலகம் கண்டது.