பக்கம் -108-

ஹஜ்ஜத்துல் விதா

அழைப்புப் பணிகள் நிறைவுற்றன. இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. “லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்” என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

“அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.” நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக ‘துல் ஹுலைஃபா’ வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, “அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, “ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்” என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ளுஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்துக் கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கள் கரங்களால் கஸ்தூரி கலந்த ஒரு நறுமணத்தையும் ‘தரீரா’ என்ற நறுமணத்தையும் நபி (ஸல்) அவர்களின் உடலிலும் தலையிலும் தடவினார்கள். அந்த நறுமணத்தின் மினுமினுப்பு நபி (ஸல்) அவர்களின் தலை வகிடுகளிலும் தாடியிலும் காணப்பட்டது. அந்த நறுமணத்தை அவர்கள் அகற்றவில்லை. பின்னர் வேறொரு கைலியையும் போர்வையினையும் அணிந்து கொண்டு ளுஹ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். தொழுகையை முடித்து வெளியேறி, கஸ்வா ஒட்டகத்தின் மீதேறி, மீண்டும் தல்பியா கூறினார்கள். பாலைவனங்களில் செல்லும் இடமெல்லாம் தல்பியா கூறினார்கள். இவ்வாறு கடந்து வந்து, மக்கா அருகில் ‘தூத்துவா’ என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கு ஸுப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10, துல்ஹஜ் பிறை 4, ஞாம்று காலை நேரமாகும். ஆக, பயணத்தில் நபி (ஸல்) எட்டு நாட்கள் கழித்தார்கள். சங்கைமிக்க கஅபா வந்தபோது தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள். தவாஃபையும் ஸயீயையும் முடித்துக் கொண்டு கஅபாவிலிருந்து புறப்பட்டு மக்காவின் மேட்டுப் பகுதியிலுள்ள ‘ஹஜுன்’ என்ற இடத்தில் தங்கினார்கள். தவாப் செய்வதற்காக மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கஅபா வரவில்லை. பிறை 8 வரை அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தன்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள்.

‘தர்வியா’ என்றழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 8ல் நபி (ஸல்) மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ‘நமிரா’ என்ற இடத்தில் அவர்களுக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்தில் சூரியன் நடுப்பகலை தாண்டும் வரை தாமதித்திருந்தார்கள். நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தனது கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்தச் செய்து அதில் வாகனித்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் (1,24,000) அல்லது ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம் (1,44,000) முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா உரை

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறியபோது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)

என்ற வசனம் இறங்கியது.