பக்கம் -47-
பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்
சற்று முன் நாம் கூறிய பத்ர் போரில்தான் முதன் முதலாக முஸ்லிம்களும்
இணை வைப்பவர்களும் ஆயுதமேந்தி கடும் சண்டையிட்டுக் கொண்டனர். இப்போர் முஸ்லிம்களுக்கு
உறுதியான வெற்றியைக் கொடுத்தது. இதை அனைத்து அரபுலகமும் அறிந்தனர். இப்போரினால் கடுமையாக
பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் இதில் நேரடியாக சேதமடைந்த மக்காவாசிகள். அதாவது,
இணைவைப்பவர்கள். அதற்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். இவர்கள் முஸ்லிம்களின்
வெற்றியையும் அவர்கள் மிகைத்து விடுவதையும் தங்களது மார்க்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும்
மிகப் பெரிய அடியாகவும் வீழ்ச்சியாகவும் கருதினர். ஆக, பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்ததிலிருந்து இணைவைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்கள் மீது கோபத்தாலும்
ஆத்திரத்தாலும் கொந்தளித்தனர்.
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும்
கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! (அல்குர்ஆன் 5:82)
இந்த இருசாராருக்கும் மதீனாவிற்குள் சில இரகசிய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு
இஸ்லாமைத் தவிர வேறு எங்கும் கண்ணியம் கிடைக்காது என்று உறுதியாக தெரிந்த பிறகு, தங்களைப்
பெயரளவில் ‘முஸ்லிம்கள்’ என்று அறிமுகப்படுத்தினர். உண்மையில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும்
விட அவர்கள் முஸ்லிம்கள் மீது குரோதத்தால் குறைந்தவர்கள் அல்லர். அவர்கள் அப்துல்லாஹ்
இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர்.
மேற்கூறப்பட்ட மூன்று பிரிவினரைத் தவிர அங்கு நான்காவது ஒரு பிரிவினரும் இருந்தனர்.
அவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்த கிராம அரபிகள். இவர்களுக்கு குஃப்ர் (இறைநிராகரிப்பு),
ஈமான் (இறைநம்பிக்கை) என்பதெல்லாம் ஒரு முக்கியமான பிரச்சனையல்ல. இவர்கள் மக்களின்
செல்வங்களைச் சூறையாடுவதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள்
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வெற்றியால் கவலைக்குள்ளாகினர். மதீனாவில் முஸ்லிம்களின் வலிமையான
அரசாங்கம் அமைந்துவிட்டால் தங்களால் கொள்ளைத் தொழிலைத் தொடர முடியாது என்று பயந்தனர்.
இதனால் முஸ்லிம்கள் மீது குரோதம் கொண்டனர் அவர்களுக்கு எதிரிகளாக மாறினர்.
பத்ரில் ஏற்பட்ட வெற்றி முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும், வலிமைக்கும் காரணமாக அமைந்தது
போன்றே, பல வகைகளில் முஸ்லிம்களை மற்றவர்கள் பகைத்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.
ஆகவே, ஒவ்வொரு கூட்டத்தினரும் தமது நோக்கத்தை நிறைவேற்று வதற்குத் தேவையான வழிகளைக்
கையாள ஆரம்பித்தனர்.
மதீனாவிலும், மதீனாவைச் சுற்றிலும் மக்களில் சிலர் இஸ்லாமை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள்
முஸ்லிம்களுக்கு எதிராக இரகசிய ஆலோசனைகளையும், சதித்திட்டங்களையும் தீட்டினர். ஆனால்,
யூதர்களில் ஒரு கூட்டமோ முஸ்லிம்களுக்கு எதிராக தங்கள் குரோதத்தையும், பகைமையையும்
வெளிப்படையாகவே காட்டினர். மற்றொரு பக்கம் மக்காவாசிகளோ, தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு
பழிவாங்கியே தீருவோம் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அழித்தே தீருவோம் என்று
எச்சரித்தது மட்டுமல்லாமல், அதற்கான முழு தயாரிப்பையும் பகிரங்கமாகச் செய்தனர்.
அவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்தது.
ஒளி பொருந்திய ஒரு நாள் வந்தே தீரும்!
அதன் பிறகு ஒப்பாரியிடும் பெண்களின்
அழுகையை நான் நீண்ட நாட்கள் கேட்பேன்!
ஆம்! அப்படித்தான். மக்காவாசிகள் மதீனாவின் மீது மிக மூர்க்கமான போர் ஒன்றை தொடுத்தனர்.
இதை வரலாற்றில் “உஹுத் போர்” என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய
இழப்பு ஏற்பட்டதால் அவர்கள்மீது மக்களுக்கு இருந்த பயம் குறைந்தது.
இந்த ஆபத்துகளைப் முறியடிப்பதில் முஸ்லிம்கள் மிக முக்கிய பங்காற்றினார்கள். நபி (ஸல்)
இந்த ஆபத்துகளைப் பற்றி எந்தளவு விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்பதையும், அவற்றை
முறியடிப்பதற்கு எந்தளவு முறையான திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதையும், அது விஷயத்தில்
அவர்களின் வழி நடத்தும் மகத்தான திறமை எவ்வாறு இருந்தது என்பதையும் அவர்கள் மேற்கொண்ட
செயல்திட்டங்கள் மூலமாக நன்றாகத் தெரிய வருகிறது.
பின்வரும் வரிகளில் அந்த செயல்திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
ஸுலைம் குலத்தவருடன் போர்
பத்ர் போருக்குப்பின் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி “ஸுலைம் மற்றும்
கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டுகின்றனர்”
என்பதாகும். உடனே நபி (ஸல்) 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து
‘குதுர்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், ஸுலைம் கிளையினர் தப்பிவிட்டனர். 500 ஒட்டகங்கள்
அவர்கள் ஊரில் இருந்தன. அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதிலிருந்து ஐந்தில் ஒன்றை
ஒதுக்கிவிட்டு எஞ்சிய 400 ஒட்டகங்களை, ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு ஒட்டகங்கள் வீதம்
நபி (ஸல்) வழங்கினார்கள். மேலும் ‘யஸார்’ என்ற ஓர் அடிமையும் கிடைத்தார். அவரை உரிமையிட்டார்கள்.
அவர்களது ஊரில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர் நபி (ஸல்) மதீனா திரும்பினார்கள்.
பத்லிருந்து திரும்பி, ஏழு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் இந்தப் போர்
ஏற்பட்டது. ஆனால், சிலர் முஹர்ரம் மாதத்தின் நடுவில் ஏற்பட்டதென்று கூறுகின்றனர். இப்போருக்குச்
செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஸிபாஉ இப்னு உர்ஃபுதா என்ற தோழரை தனது பிரதிநிதியாக
ஆக்கினார்கள். சிலர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமைப் பிரதிநிதியாக ஆக்கினார்கள்
என்றும் கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
நபியவர்களைக் கொல்ல திட்டம்
பத்ர் போரில் தோற்றதால் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மக்காவாசிகள் கோபத்தால் கொதித்தனர்.
தங்களின் வீழ்ச்சிக்கும் இழிவுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் அந்த முஹம்மதைக்
கொன்று விடுவதுதான் அனைத்திற்கும் சரியான தீர்வு என முடிவு செய்தனர். இதற்காக மக்கா
நகர வீரர்களில் இருவர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர்.
உமைர் இப்னு வஹப் அல் ஜும மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகிய இருவரும் கஅபாவிற்கருகில்
அமர்ந்தனர். இது பத்ர் போர் முடிந்து, சில நாட்கள் கழித்து நடந்ததாகும். இந்த உமைர்,
குறைஷி ஷைத்தான்களில் மிகப் பெரிய ஷைத்தானாவான். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும்
மக்காவில் அதிகம் நோவினை செய்தவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இவனது மகன் வஹப்
இப்னு உமைரை முஸ்லிம்கள் பத்ர் போரில் சிறைப்பிடித்தனர். பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களையும்,
முஸ்லிம்களால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் ஸஃப்வானுக்கு உமைர் நினைவூட்டினான்.
அதற்கு ஸஃப்வான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்குப் பின் வாழ்ந்து ஒரு பலனும்
இல்லை” என்றான்.
அதற்கு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உண்மையே கூறினாய். அறிந்துகொள்! அல்லாஹ்வின்
மீது ஆணையாக! என்னால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடன் சுமையும் எனக்குப் பின் சீரழிந்து
விடுவார்கள் என்று நான் பயப்படும் குடும்பமும் எனக்கு இல்லையெனில் நேரில் சென்று முஹம்மதை
நானே கொல்வேன். எனது மகன் அவர்களிடம் கைதியாக இருப்பதால் நான் அவர்களிடம் செல்வதற்கு
அது ஒரு காரணமாகவும் இருக்கிறது” என்றான் உமைர்.
ஸஃப்வான் இதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி, “உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன். உனது குடும்பத்தை
எனது குடும்பத்துடன் நான் சேர்த்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் காலமெல்லாம் நான்
அவர்களுக்கு உதவி செய்வேன். என்னிடம் இருக்கும் எதையும் அவர்களுக்கு நான் கொடுக்காமல்
இருக்க மாட்டேன்” என நயமாகப் பேசி, உமைரை இத்தீய செயலுக்குத் தூண்டினான்.
சரி! “நமது பேச்சை மறைத்துவிடு. யாரிடமும் சொல்லாதே” என்று உமைர் கூற, “அப்படியே செய்கிறேன்”
என்றான் ஸஃப்வான்.
உமைர் தனது வாளைக் கூர்மைப்படுத்தி அதில் நன்கு விஷம் ஏற்றினான். அந்த வாளுடன் மதீனா
புறப்பட்டான். கொலை வெறியுடன் அதிவிரைவில் மதீனா சென்றடைந்தான். நபி (ஸல்) அவர்களின்
பள்ளிக்கு அருகில் தனது ஒட்டகத்தைப் படுக்க வைத்தான். அப்போது உமர் (ரழி) பள்ளிக்குள்
முஸ்லிம்களுடன் பத்ர் போரில் அல்லாஹ் தங்களுக்கு செய்த உதவியைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள்.
சரியாக உமர் (ரழி) அவர்களின் பார்வை உமைர் மீது பட்டது. “இதோ நாய்! அல்லாஹ்வின் எதிரி!
தனது வாளைத் தொங்கவிட்டவனாக வந்துள்ளான். இவன் ஒரு கெட்ட நோக்கத்திற்காகத்தான் வருகிறான்”
என்று சப்தமிட்டவராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின்
எதிரி உமைர், தனது வாளை அணிந்தவனாக இங்கு வருகிறான்” என்று கூறினார்கள். அதற்கு நபி
(ஸல்) “என்னிடம் அவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அன்சாரிகளில் சிலரிடம்
“நீங்கள் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமருங்கள். இந்த கெட்டவனின் தீங்கிலிருந்து
நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவனை நம்ப முடியாது” என்று கூறியபின்
உமைன் வாளுறையை அவரது பிடரியுடன் இழுத்துப் பிடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து
வந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த நபி (ஸல்) “உமரே! அவரை விட்டு விடுங்கள்” என்று
கூறி, “உமைரே! இங்கு வாரும்” என்றார்கள். அப்போது உமைர் “உங்களின் காலைப் பொழுது பாக்கிய
மாகட்டும்” என்று முகமன் கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமைரே! உமது இந்த முகமனை விட
சிறந்த முகமனாகிய சுவனவாசிகளின் ‘ஸலாம்’ என்ற முகமனைக் கொண்டு அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தி
இருக்கிறான்” என்றார்கள்.
பின்பு “உமைரே! நீர் எதற்காக இங்கு வந்தீர்” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களிடம்
இருக்கும் இந்த கைதிக்காக வந்திருக்கிறேன். அவருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்”
என்றார் உமைர்.
அதற்கு நபி (ஸல்) “உமது கழுத்தில் ஏன் வாள் தொங்குகிறது” என்று கேட்டார்கள். அவர் “இந்த
வாள் நாசமாகட்டும். இது எங்களுக்கு என்ன பலனை அளித்தது” என்று கூறினார்.
நபி (ஸல்), “என்னிடம் உண்மையை சொல். நீர் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கவர் “நான் அந்த நோக்கத்தில்தான் வந்தேன்” என்றார்.
அதற்கு நபி (ஸல்) “இல்லை. நீயும் ஸஃப்வானும் கஅபாவிற்கு அருகில் அமர்ந்து பத்ரில் கொல்லப்பட்ட
குறைஷிகளைப் பற்றி பேசினீர்கள். பின்பு நீ “தன் மீது கடனும் தனது குடும்பத்தார்களின்
பொறுப்பும் இல்லையெனில், தான் முஹம்மதை கொலை செய்து வருவேன் என்று கூறினீர்! நீ என்னைக்
கொல்ல வேண்டுமென்பதற்காக உனது கடன் மற்றும் உனது குடும்ப பொறுப்பை ஸஃப்வான் ஏற்றுக்கொண்டான்.
ஆனால், இப்போது உனக்கும் உனது அந்த நோக்கத்திற்குமிடையில் அல்லாஹ் தடையாக இருக்கிறான்”
என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட உமைர் “நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
வானத்தின் செய்திகளையும், உங்களுக்கு இறங்கும் இறைஅறிவிப்பையும் நீங்கள் எங்களுக்கு
கூறியபோது உங்களை நாங்கள் பொய்யர் என்று கூறினோம். ஆனால் உங்களை கொலை செய்ய வேண்டும்
என முடிவு செய்த போது என்னையும் ஸஃப்வானையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்தான் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தான் என்று
நான் நன்கறிகிறேன். எனக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப்
புகழும்! அவனே இங்கு என்னை அனுப்பினான்” என்று கூறி, இஸ்லாமின் ஏகத்துவத்தை மனமாற மொழிந்தார்கள்.
அதற்குப் பின், நபி (ஸல்) அவர்கள் “உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும்
கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
“பத்ரினால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் மறக்கும்படியான ஒரு நற்செய்தி வெகு விரைவில் உங்களுக்குக்
கிடைக்கும்” என்று ஸஃப்வான் மக்காவாசிகளிடம் கூறுவான். மேலும் மதீனாவிலிருந்து வரும்
வழிப்போக்கர்களிடமும் உமைரைப் பற்றி விசாரிப்பான். இறுதியாக ஒருவர் உமைர் முஸ்லிமாகிவிட்டார்
என்ற செய்தியை ஸஃப்வானுக்கு அறிவிக்க, அவன் அதிர்ச்சியால் உறைந்தான். “அவருடன் பேச
மாட்டேன், அவருக்கு ஒருபோதும் எந்த உதவியும் செய்ய மாட்டேன்” என்று சத்தியம் செய்தான்.
உமைர் மதீனாவில் இஸ்லாமியக் கல்வியைக் கற்று, மக்கா திரும்பி அங்கு மக்களை இஸ்லாமின்
பக்கம் அழைத்தார். அவரது கரத்தில் பலர் இஸ்லாமைத் தழுவினர். (இப்னு ஹிஷாம்)
கைனுகா கிளையினருடன் போர்
யூதர்களுடன் நபி (ஸல்) செய்த ஒப்பந்தங்களைப் பற்றி இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.
அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
முஸ்லிம்களில் எவரும் அந்த ஒப்பந்தத்தின் ஒரு எழுத்திற்குக் கூட மாறு செய்யாமல் நடந்தனர்.
ஆனால் மோசடி, ஒப்பந்தத்தை முறித்தல் மற்றும் துரோகம் செய்தல் ஆகியவற்றுக்கு வரலாற்றில்
பெயர்போன யூதர்களோ தங்களின் இயல்புக்குத் தக்கவாறே நடந்தனர். குறுகிய காலத்திலேயே முஸ்லிம்களுக்கு
எதிரான சூழ்ச்சியை ஆரம்பித்ததுடன் அவர்களுக்குள் பழைய பகைமையையும் சலசலப்பையும் கிளப்பினர்.
மேலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கு சில உதாரணங்களைப்
பார்ப்போம்:
யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: “ஷாஸ் இப்னு கைஸ்’ என்ற வயது முதிர்ந்த யூதன் ஒருவன்
இருந்தான். அவன் முஸ்லிம்கள் மீது கடினமான பொறாமையும் குரோதமும் கொண்டிருந்தான். அன்சாரிகளில்
அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்..
இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை
அவனால் பொறுக்க முடியவில்லை. “இவ்வூரில் கைலா கூட்டத்தினர் அதாவது அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்
கிளையினர் ஒற்றுமையாகி விட்டனர். இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க
முடியாது” என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் “நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து
கொள். பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு
நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு”
என்று கூறினான்.
ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப்
பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை
போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம்
என்றார். மற்றவன் கூட்டத்தினர் “வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று
நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக்
கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான
சண்டை நடக்க நெருங்கி விட்டது.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை
அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை
பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே
அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின்
பக்கம் நேர்வழி காட்டினான் அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான் உங்களை விட்டு
அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான் இறைநிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து
இருக்கின்றான் உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா
நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?” என்று அறிவுரை கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின்
ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ்,
கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன்
தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி ‘ஷாஸ் இப்னு கைஸ்”
உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான். (இப்னு ஹிஷாம்)
யூதர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்த குழப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இது
ஓர் உதாரணமாகும். இவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் தடைகளை ஏற்படுத்த பல வழிகளைக்
கையாண்டனர். பல பொய் பிரச்சாரங்களைச் செய்தனர். காலையில் இஸ்லாமை ஏற்று, அன்று மாலையில்
நிராகரித்து விடுவார்கள். இதனால் புதிய, பலவீனமான முஸ்லிம்களுடைய உள்ளங்களில் இஸ்லாமைப்
பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தினர். மேலும், தங்களுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும்
முஸ்லிம்களுக்கு நெருக்கடி தந்தனர். முஸ்லிம்கள் தங்களுக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தால்
காலையிலும் மாலையிலும் சென்று அந்த கடனைக் கேட்டுத் துன்புறுத்துவர். முஸ்லிம்களுக்கு
இவர்கள் ஏதும் கொடுக்க வேண்டியிருந்தால் அதைக் கொடுக்காமல் மறுப்பார்கள். தங்களிடமுள்ள
முஸ்லிம்களின் சொத்துகளை அநியாயமாகத் தின்று வந்தனர். முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டிய
கடன்களைக் கொடுக்காமல் “நீ உமது மூதாதையரின் மார்க்கத்தில் இருந்த போதுதான் இந்த கடன்
எங்கள் மீது இருந்தது. நீ மதம் மாறியதால் இப்போது நாங்கள் அதனைக் கொடுக்க வேண்டியதில்லை”
என்று கூறுவார்கள்.
நாம் மேற்கூறிய நிகழ்வுகள் பத்ர் போருக்கு முன் நடந்தவைகள். இந்த யூதர்கள் நபி (ஸல்)
அவர்களுடன் உடன்படிக்கை செய்திருந்தும் அதை மதிக்காமல் நடந்தனர். இவர்கள் நேர்வழி பெறுவார்கள்
என்பதற்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் இவர்களின் அக்கிரமங்களை
நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சகித்து வந்தார்கள்.