பக்கம் -48-
கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்
பத்ர் மைதானத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மாபெரும் உதவி செய்தான். அதனால் முஸ்லிம்களைப்
பற்றிய மதிப்பு, மரியாதை மற்றும் பயம், உள்ளூர்வாசிகள் - வெளியூர்வாசிகள் என அனைவரின்
உள்ளத்திலும் ஏற்பட்டன. இது யூதர்களுக்கு வெறுப்பை ஊட்டியது. அவர்களது கோபத்தைக் கிளறியது
இதனால் வெளிப்படையாகவே முஸ்லிம்களை எதிர்த்தனர் அவர்களுக்குத் தீங்கு செய்தனர்.
யூதர்களில் ‘கஅப் இப்னு அஷ்ரஃப்’ என்பவன் முஸ்லிம்களுக்கு பெரிய எதிரியாக விளங்கினான்.
அவ்வாறே யூதர்களில் இருந்த மூன்று பிரிவினர்களில் கைனுகா கிளையினரே மிகக் கெட்டவர்களாக
இருந்தனர். இவர்கள் மதீனாவினுள் வசித்தனர். சாயமிடுதல், இரும்பு பட்டறை, பாத்திரங்கள்
செய்வது என்று பல தொழில்கள் இவர்கள் வசம் இருந்தன. இதுபோன்ற தொழில்களில் இவர்கள் இருந்ததால்
இவர்களிடம் பெருமளவில் போர் சாதனங்கள் இருந்தன. மதீனாவிலிருந்த யூதர்களில் இவர்களே
வீரமுடையவர்களாக விளங்கினர். யூதர்களில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கையை
முறித்தவர்கள் இவர்களே.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு பத்ரில் கொடுத்த வெற்றிக்குப் பிறகு இவர்களது அத்துமீறல் கடுமையானது
அராஜகம் அதிகரித்தது இவர்கள் மதீனாவில் குழப்பங்களை ஏற்படுத்தினர் முஸ்லிம்களைப் பரிகாசம்
செய்தனர் தங்களது கடைவீதிகளுக்கு வரும் முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இடையூறு
அளித்தனர்.
இவர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து நபி (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். நேர்வழிக்கும்
நன்னெறிக்கும் அழைத்தார்கள். அத்து மீறல், பகைமை கொள்ளல், தீங்கு விளைவித்தல் ஆகியவற்றின்
பின்விளைவைப் பற்றி எச்சரித்தார்கள். ஆனால், நபி (ஸல்) எச்சரித்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து
விலகாமல் அதிலேயே நிலைத்திருந்தனர்.
இதுபற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவதை கேட்போம்: நபி (ஸல்) பத்ர் போரில் குறைஷிகளைத்
தோற்கடித்து மதீனா திரும்பிய பிறகு, கைனுகாவினன் கடைவீதியில் அங்குள்ள யூதர்களை ஒன்று
சேர்த்தார்கள். அவர்களிடம் “யூதர்களே! குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படுவதற்கு
முன் நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு அவர்கள், “முஹம்மதே!
போர் செய்யத் தெரியாத அனுபவமற்ற குறைஷிகளில் சிலரை போரில் கொன்று விட்டதால் நீர் மயங்கிவிட
வேண்டாம்! நீர் எங்களிடம் போர் தொடுத்தால் நாங்கள் வலிமைமிக்க மனிதர்கள் என்பதையும்,
எங்களைப் போன்றவர்களை நீர் இதுவரை சந்தித்ததில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்!!” என்று
பதிலளித்தனர். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான். அதை நபி (ஸல்) அவர்கள்
அம்மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்:
“அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில்
சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம். (பத்ர் போர்க்களத்தில்) சந்தித்த
இரு சேனைகளில் நிச்சயமாக உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில்
போர்புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய)
இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களைத் தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்)
கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான்.
(படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.”(அல்குர்ஆன்
3:12 , 13) (ஸுனன் அபூதாவூது)
கைனுகாவினன் இந்த பதில் பகிரங்கமாகப் போருக்கு விடுத்த அழைப்பாகவே இருந்தது. இருப்பினும்
நபி (ஸல்) தங்களது கோபத்தை அடக்கினார்கள். முஸ்லிம்களும் சகிப்புடன் நடந்தார்கள். இறுதி
நிலை எப்படி முடிகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
கைனுகாவினன் துணிவு அதிகரித்தது. அவர்கள் பல வழிகளில் மதீனாவில் குழப்பம் விளைவித்து,
தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடினர்.
இதுபற்றி இப்னு ஹிஷாம் (ரஹ்) அறிவிக்கிறார்: ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின்
மேல் விக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக கைனுகாவினன் கடைத் தெருவிற்கு வந்தார். விற்ற
பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவன் கடைக்கருகில் அமர்ந்தான்.
அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர்.
ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் ஆடையை அவரது முதுகுப்புறத்தில்
அவருக்குத் தெரியாமல் கட்டினான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு அவர் அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது மறைவிடம்
தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர். இதனால் அவர் வெட்கித் தலைக்
குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து
அவனைக் கொன்றுவிட்டார். பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ்லிமின்
மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள். அப்போது அந்த முஸ்லிமின் உறவினர்கள் மற்ற
முஸ்லிம்களிடம் யூதர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றனர். இதிலிருந்தே
முஸ்லிம்களுக்கும் கைனுகாவினருக்குமிடையில் சண்டை மூண்டது. (இப்னு ஹிஷாம்)
முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்
இனியும் பொறுமைகாப்பது உசிதமல்ல என்பதால் நபி (ஸல்) அவர்கள் கைனுகாவினர் மீது போர்
தொடுக்க முடிவு செய்தார்கள். மதீனாவில் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைத்
தனது பிரதிநிதியாக நியமித்து விட்டு கைனுகாவனரிடம் புறப்பட்டார்கள். முஸ்லிம்களுக்குரிய
கொடியை ஹம்ஜா (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள். கைனுகா கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களை
பார்த்தவுடன் கோட்டைகளுக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அவர்களை நபி
(ஸல்) முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை ஹிஜ்ரி 2, ஷவ்வால் 15 சனிக்கிழமை தொடங்கி
15 இரவுகள் (துல்கஅதா முதல் பிறை வரை) தொடர்ந்தது. அல்லாஹ் அந்த யூதர்களின் உள்ளத்தில்
பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் அனைவரும் தங்கள் விஷயத்திலும் தங்களின் சொத்து, பெண்கள்,
பிள்ளைகள் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்குவதாய் கூறி, கோட்டைகளை
விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அம்மக்களின் கரங்களைக் கட்ட உத்தரவிட்டார்கள்.
இந்நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத் தன்மைக்கேற்ப செயல்பட்டான். நபி
(ஸல்) அவர்களிடம் யூதர்களை மன்னிக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். “முஹம்மதே! என்னுடன்
நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்” என்று
கூறினான். (பனூ கைனுகா, கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாக இருந்தார்கள்.) இப்னு உபை தனது
இக்கூற்றை பலமுறை திரும்பக் கூறியும் நபி (ஸல்) அதைப் புறக்கணித்தார்கள். அவன் நபி
(ஸல்) அவர்களின் சட்டைப் பைக்குள் கையை நுழைத்துக் கொண்டு, அவர்களை வற்புறுத்தினான்.
நபி (ஸல்) அவர்கள் அவனிடம் “என்னை விட்டுவிடு” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின்
முகத்தில் ஏற்பட்ட கோபத்தின் மாறுதலை நபித் தோழர்கள் உணர்ந்தார்கள். மீண்டும் “உனக்கென்ன
நேர்ந்தது! என்னை விட்டுவிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். ஆனால், அந்நயவஞ்சகன் தனது
பிடிவாதத்தைத் தொடர்ந்தவனாக “இவர்களில் கவச ஆடை அணியாத நானூறு நபர்கள், கவச ஆடை அணிந்த
முந்நூறு நபர்கள் இவர்களெல்லாம் என்னைப் பாதுகாத்தவர்கள். இந்த அனைவரையும் ஒரே பொழுதில்
நீர் வெட்டி சாய்த்து விடுவீரோ! எனது நண்பர்கள் விஷயத்தில் நீர் அழகிய முறையில் நடந்து
கொள்ளாதவரை நான் உம்மை விடமாட்டேன். பின்னால் பிரச்சனைகள் ஏற்படுவது பற்றி இப்போதே
நான் அஞ்சுகிறேன்” என்று கூறினான்.
இப்னு உபை தன்னை முஸ்லிம் என்று கூறி ஒரு மாதம்தான் ஆகியிருந்தும் அவனிடம் நபி (ஸல்)
மிக அழகிய முறையில் நடந்து, அவன் கேட்டக் கோரிக்கைக்கிணங்க யூதர்கள் அனைவரையும் விடுதலை
செய்து மதீனாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அனைத்து யூதர்களும் ஷாமுக்குச்
சென்றனர். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர்களில் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர்.
அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பை முஹம்மது இப்னு மஸ்லாமாவிடம்
வழங்கினார்கள். அவர்களுடைய பொருட்களில் இருந்து மூன்று வில்களையும், இரண்டு கவச ஆடைகளையும்,
மூன்று வாட்களையும், மூன்று ஈட்டிகளையும் தனக்கென எடுத்த பிறகு, ஐந்தில் ஒன்றை அல்லாஹ்விற்காக
ஒதுக்கினார்கள். மற்ற அனைத்தையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டார்கள். (ஜாதுல் மஆது,
இப்னு ஹிஷாம்)
‘ஸவீக்’ போர்
இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ர் போர் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து நடந்த ஒரு
நிகழ்ச்சியாகும். பத்ர் போர் முடிந்த பிறகு அதில் தனது இனத்தவருக்கு ஏற்பட்ட இழப்பை
ஈடுகட்டவும் முஸ்லிம்களை பழிவாங்கவும் “முஹம்மதிடம் போர் செய்யும் வரை நான் என் மனைவியுடன்
சேரமாட்டேன்” என்று அபூ ஸுஃப்யான் நேர்ச்சை செய்தார். ஆகவே, முஸ்லிம்களைத் தாக்க அவர்
திட்டம் ஒன்று தீட்டினார். அதாவது, அதில் செலவும் சிரமமும் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம்களுக்குப் பாதிப்பு அதிகமாக ஏற்பட வேண்டும். இதனால் தனது சமுதாயத்தின்
இழந்த மதிப்பை மீட்க முடியும் அதன் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.
தனது இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக இருநூறு வீரர்களுடன் புறப்பட்டு மதீனாவிலிருந்து
12 மைல்கள் தொலைவில் இருக்கும் ‘சைப்’ என்ற மலைக்கருகிலுள்ள கணவாயில் வந்து இறங்கினார்.
எனினும், மதீனாவின் மீது பகலில் பகிரங்கமாக போர் தொடுக்க அவருக்குத் துணிவு வரவில்லை.
கொள்ளையர்களைப் போன்று மதீனாவின் மீது இரவில் தாக்குதல் நடத்த திட்டம் ஒன்று தீட்டினார்.
இரவானவுடன் மதீனாவுக்குள் புகுந்து ஹை இப்னு அக்தபை சந்திக்க வந்தார். ஹை இப்னு அக்தப்
பயத்தால் கதவைத் திறக்கவில்லை. எனவே, அங்கிருந்து திரும்பி நழீர் இன யூதர்களின் தலைவன்
ஸல்லாம் இப்னு மிஷ்கமிடம் வந்தார். அவனிடம் நழீர் இன யூதர்களின் செல்வங்கள் இருந்தன.
அவனிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அவன் அபூ ஸுஃப்யானை வரவேற்று நன்கு விருந்தோம்பல்
செய்து மது புகட்டினான். மேலும், மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் செய்திகளையும் இரகசியமாகக்
கூறினான். இரவின் இறுதியில் அங்கிருந்து வெளியேறிய அபூ ஸுஃப்யான் தனது படையின் ஒரு
பிரிவை மதீனாவில் ‘அல் உரைழ்’ என்ற பகுதியில் கொள்ளையடிக்க அனுப்பினார். அந்தப் படையினர்
அங்குள்ள பேரீத்தம் மரங்களை வெட்டி வீழ்த்தி எத்தனர். அன்சாரிகளில் ஒருவரையும், அவரது
ஒப்பந்தக்காரர் ஒருவரையும் கொன்றனர். அவ்விருவரும் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து
கொண்டிருந்தனர். இதற்குப் பின் அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மக்கா நோக்கி ஓட்டம்
பிடித்தனர்.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கவே, மதீனாவில் அபூலுபாபா இப்னு அப்துல் முன்திரைப்
பிரதிநிதியாக நியமித்து, தங்களது சில தோழர்களுடன் அபூ ஸுஃப்யானையும் அவரது படையையும்
விரட்டிப் பிடிப்பதற்குப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அதிவிரைவில் அங்கிருந்து
தப்பிவிட்டனர்.
அவ்வாறு செல்லும்போது தங்களது பயணத்தை விரைவாக தொடரத் தடையாக இருந்த சத்து மாவு மற்றும்
ஏனைய உணவுப் பொருட்களை வழியில் விட்டுவிட்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ‘கர்கரத்துல்
குதுர்’ என்ற இடம் வரை சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் மதீனா திரும்பினார்கள்.
வழியில் எதிரிகள் விட்டுச் சென்ற உணவுப் பொருள் மற்றும் சத்து மாவை தங்களுடன் எடுத்துக்
கொண்டனர். அதில் சத்து மாவு அதிகம் இருந்ததால் அதை குறிக்கும் ‘ஸவீக்’ என்ற சொல்லை
வைத்தே இந்த தாக்குதலுக்கு ‘ஸவீக்’ என்ற பெயர் வந்தது. (ஜாதுல் மஆது)
தீ அம்ர் போர்
இது ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது. உஹுத் போருக்கு முன் நபி (ஸல்)
அவர்கள் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களில் இதுவே பெரியதாகும்.
இப்போருக்கான காரணம் என்னவெனில், ஸஅலபா, முஹாப் ஆகிய கிளையினர் மதீனாவின் சுற்றுப்புறங்கள்
மீது தாக்குதல் நடத்த திட்டம் போடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது.
அவர்களை எதிர்கொள்வதற்காக நபி (ஸல்) முஸ்லிம்களைத் தயார்படுத்தி 450 வீரர்களுடன் புறப்பட்டார்கள்.
புறப்படும் முன் மதீனாவில் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.
வழியில் ஸஅலபா கிளையைச் சேர்ந்த ‘ஜுபார்’ என்பவர் முஸ்லிம்கள் வசம் சிக்கினார். அவரை
நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வர, நபி (ஸல்) அவருக்கு இஸ்லாமை அறிமுகப் படுத்தினார்கள்.
அவரும் இஸ்லாமைத் தழுவினார். அவர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காக நபி (ஸல்) தனது
தோழர் பிலாலுடன் அவரை இணைத்து விட்டார்கள். அவர் எதிரிகளின் பகுதியைக் காண்பித்துக்
கொடுக்க வழிகாட்டியாக முஸ்லிம்களுடன் வந்தார்.
மதீனாவின் படை வருவதைக் கேள்விப்பட்ட எதிரிகள் மலைகளின் உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர்.
நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். அதுதான் ‘தீ அம்ர்’ என்று
சொல்லப்படும் தண்ணீர் நிறைந்த இடம். அவ்விடத்தில் ஏறக்குறைய ஸஃபர் மாதம் முழுமையாகத்
தங்கியிருந்தார்கள். கிராம அரபிகளுக்கு முஸ்லிம்களின் ஆற்றலை உணரச் செய்து, அவர்களது
உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சமேற்படச் செய்தார்கள். பின்பு அங்கிருந்து நபி
(ஸல்) மதீனாவிற்குக் கிளம்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)