பக்கம் -51-
உஹுத் போர்
குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்
பத்ர் போரில் தோல்வியைத் தழுவியது ஒருபுறம் தங்களின் மாபெரும் தலைவர்கள்
கொல்லப்பட்டது மறுபுறம் என கோபத்தில் கொதித்துப் போயிருந்த குறைஷிகள் பழிதீர்க்கும்
வெறியோடு காத்திருந்தனர். எங்கே நாம் படும் இன்னல்களும் துன்பங்களும்
முஸ்லிம்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அவமானத்தில், கொல்லப்பட்டவர்களுக்காக ஒப்பாரி
வைத்து அழுவதோ, அப்போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க
முயற்சிப்பதோ கூடாது என தடையும் விதித்து இருந்தனர்.
கோபம் தணியும் அளவிற்கு, பழிவாங்கும் வெறியின் தாகத்தைத் தீர்த்துகொள்ள, பெரிய
அளவில் ஒரு போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று குறைஷிகள் அனைவரும்
ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் இறங்கினர்.
இப்போரைச் சந்திப்பதற்கு மிகுந்த உற்சாகத்துடனும், ஆவேசத்துடனும் இருந்த குறைஷித்
தலைவர்களில் இக்மா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, அபூ ஸுஃப்யான் இப்னு
ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதற்காக அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை: அபூ ஸுஃப்யான் பத்திரமாக பாதுகாத்து
அழைத்து வந்த வியாபார கூட்டத்தில் இருந்த பொருட்களை அப்படியே வைத்துக் கொண்டனர்.
இந்த வியாபார கூட்டம்தான் பத்ர் போருக்கான காரணமாக இருந்தது. எனவே, அந்த
செல்வங்களுக்குரியவர்களிடம் சென்று “குறைஷிகளே! நிச்சயமாக முஹம்மது உங்களுக்கு
அநியாயம் செய்திருக்கிறார். உங்களில் சிறந்தவர்களைக் கொன்றிருக்கிறார். எனவே,
அவரிடம் சண்டை செய்வதற்காக எங்களுக்கு இந்தப் பொருட்களை கொடுத்துதவுங்கள். அதன்
மூலம் நாம் அவர்களிடத்தில் பழி தீர்த்துக் கொள்ளலாம்” என்று கூறினர். அதற்கு அதன்
உரிமையாளர்களும் இணங்கி அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றனர். அந்த வியாபார
பொருட்களில் 1,000 ஒட்டகங்களும், 50,000 தங்க நாணயங்களுக்குரிய பொருட்களும்
இருந்தன. இது குறித்து அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில்
செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேன்மேலும் இவ்வாறே செலவு
செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர்
அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்)
நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள். (அல்குர்ஆன் 8:36)
இதற்குப் பின் மக்காவைச் சுற்றியுள்ள பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்கள்,
கினானா மற்றும் திஹாமாவாசிகள் ஆகியோரிடம், ‘முஸ்லிம்களுடன் நடக்க இருக்கும் போரில்
கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” என்று அறிவித்தனர்.
மக்களைப் போருக்குத் தூண்ட மேலும் பல வழிகளைக் கையாண்டனர். ‘அபூ இஸ்ஸா’ என்ற கவிஞனை
ஸஃப்வான் இப்னு உமைய்யா இதற்காகத் தயார் செய்தான். இக்கவிஞன் பத்ர் போரில்
முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவன். நபி (ஸல்) இவனை ஈட்டுத் தொகையின்றி விடுதலை
செய்து, இஸ்லாமிற்கெதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று அவனிடம்
வாக்குறுதி வாங்கினார்கள். ஆனால், ஸஃப்வானின் ஆசை வார்த்தைகளுக்கு அபூஇஸ்ஸா
வசப்பட்டான். “நீ போரிலிருந்து உயிருடன் திரும்பினால் உனக்கு பெரும் செல்வத்தைக்
கொடுப்பேன். இல்லை நீ கொல்லப்பட்டால், உனது பெண் பிள்ளைகளை நான் என் பொறுப்பில்
எடுத்துக் கொள்கிறேன் என்று ஸஃப்வான் வாக்குறுதி கொடுத்தான். அபூ இஸ்ஸா உணர்வுகளைத்
தட்டி எழுப்பும் தனது கவியால் குறைஷியரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான்.
இதுபோல் மக்களைப் போருக்கு ஆர்வமூட்ட முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்ற மற்றொரு
கவிஞனையும் நியமித்தார்கள்.
அபூ ஸுஃப்யானால் சென்றமுறை (ஸவீக் போரில்) தனது மனதிலுள்ள பழிவாங்கும் ஆசையை சரிவர
நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் பொருட்களில் பெரும்பாலானவற்றையும் அவர் இழந்தார்.
ஆகவே, முஸ்லிம்கள் மீது மிகுந்த எச்சலுடன் இருந்தார்.
ஜைது இப்னு ஹாஸாவுடைய தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டம் குறைஷிகளது பொருளா தாரத்தின்
முதுகெலும்பை உடைத்து அளவிட முடியாத கவலையை அவர்களுக்கு அளித்தது. ஏற்கனவே பத்ரில்
தங்கள் தலைவர்களை இழந்து துக்கக் கடலில் மூழ்கியிருந்த இவர்களுக்கு இது எயும்
நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது. எனவே, முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும்
மத்தியில் தீர்வாக அமையும் ஒரு போரைச் சந்திப்பதற்காக குறைஷிகள் முழு வேகத்துடன்
செயல்பட்டனர்.
குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்
ஓர் ஆண்டுக்குள் மக்காவாசிகள் தங்களது முழு தயாரிப்பையும் செய்து முடித்தனர்.
குறைஷிகள், அவர்களின் நட்புடைய ஏனைய குலத்தவர்கள் மற்றும் பல கோத்திரத்தைச் சேர்ந்த
வாலிபர்கள் என 3000 கூட்டுப் படையினர் போருக்காக கைகோர்த்தனர். பெண்களும் படை
பட்டாளங்களுடன் இணைந்து வந்தால், போர் வீரர்கள் பெண்களின் மானமும் கண்ணியமும்
பங்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக, ரோஷத்துடன் உயிருக்குத் துணிந்து போரிடுவார்கள்
எனக் கருதி படைத்தளபதி தங்களுடன் 15 பெண்களையும் சேர்த்துக் கொண்டார். இப்படையில்
3000 ஒட்டகங்கள், 200 குதிரைகள் மற்றும் 700 கவச ஆடைகள் இருந்தன. (ஜாதுல் மஆது)
இப்படையின் பொது தளபதியாக அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இருந்தார். குதிரைப் படை
வீரர்களுக்கு காலித் இப்னு வலீதும், அவருக்குத் துணையாக இக்மா இப்னு அபூ ஜஹ்லும்
பொருப்பேற்றனர். அப்துத் தார் கிளையினரிடம் போர் கொடி கொடுக்கப்பட்டது.
மக்காவின் படை புறப்படுகிறது
இவ்வாறு முழு தயாரிப்புடன் மக்கா படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டது. பழைய
பகைமையும், உள்ளத்தில் இருந்த குரோதமும், இதுவரை கண்ட தோல்வியும் அவர்களது
உள்ளங்களில் மேலும் கோப நெருப்பை மூட்டியவாறே இருந்தது. வெகு விரைவில் நடக்க
இருக்கும் பெரும் சண்டையை நினைத்து ஆறுதல் அடைந்தவர்களாக பயணத்தைத் தொடர்ந்தனர்.
முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) குறைஷிகளின் செயல்களையும் அதன் ராணுவத்
தயாரிப்புகளையும் கண்காணித்து வந்தார். மக்காவிலிருந்து படை புறப்பட்டுச்
சென்றவுடன் அவசர அவசரமாகப் படையின் முழு விவரங்களை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதை
நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.
அப்பாஸின் தூதர் ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை மூன்றே நாட்களுக்குள்
அதிவிரைவில் கடந்து நபி (ஸல்) அவர்களிடம் அக்கடிதத்தை ஒப்படைத்தார். அன்று நபி
(ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அக்கடிதத்தை உபை இப்னு கஅப் (ரழி) படித்துக் காண்பித்தார்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அச்செய்தியை வெளியில் கூறாமல் மறைத்து விடுங்கள் என்று
கட்டளையிட்டு மதீனா விரைந்தார்கள். அங்கு அன்சாரி மற்றும் முஹாஜிர் தோழர்களிலுள்ள
தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
அவசர நிலை
மதீனாவில் முஸ்லிம்கள் எந்நேரமும் ஆயுதமேந்தியவர்களாக இருந்தனர். எதிரிகளின்
தாக்குதலைச் சமாளிக்க எந்நேரமும் தயாராக இருந்தனர். ஆயுதங்களைத் தொழுகையிலும்
தங்களுடன் வைத்திருந்தனர்.
அன்சாரிகளின் ஒரு குழு நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்புக்காகத் தயாரானார்கள்.
அவர்களில் ஸஅது இப்னு முஆது, உஸைது இப்னு ஹுழைர், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகியோர்
இருந்தனர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாம்லில் ஆயுதம் ஏந்தி காவலில்
ஈடுபட்டனர். மேலும், திடீர் தாக்குதலைத் தடுக்க மதீனாவின் நுழைவாயில்கள் மற்றும்
சந்து பொந்துகள் அனைத்திலும் சிறுசிறு படைகளாக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் வர இயலுமோ அந்த
அனைத்து வழிகளிலும் எதிரிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக ரோந்துப் பணியிலும்
முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
எதிரிகள் மதீனா எல்லையில்
மக்கா படை வழக்கமான மேற்குப் பாதையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அப்படை ‘அப்வா’
என்ற இடத்தை அடைந்ததும் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபி (ஸல்)
அவர்களின் தாயாருடையக் கப்ரைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுக்க வேண்டும் என்று
விரும்பினாள். ஆனால், படையின் தளபதிகள் இக்கோரிக்கையை நிராகரித்ததுடன் இவ்வாறு
செய்தால் ஆபத்தான முடிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
குறைஷிப் படை தனது பயணத்தைத் தொடர்ந்தது. மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ‘அல்அகீக்’
என்ற பள்ளத்தாக்கைக் கடந்து, அங்கிருந்து வலப்புறமாகச் சென்று, உஹுத் மலைக்கருகில்
உள்ள ‘அய்னைன்’ என்ற இடத்தில் தங்கியது. இந்த இடம் உஹுத் மலைக்கருகில் மதீனாவின்
வடப் பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கின் மேற்புறத்தில் உள்ள ‘பத்னு ஸப்கா’ என்ற
பகுதியில் உள்ளது. ஆக, மக்காவின் படை இவ்விடத்தில் ஹிஜ்ரி 3, ஷவ்வால் மாதம் பிறை 6,
வெள்ளிக்கிழமை அன்று வந்திறங்கி தங்களது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது.
தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்
இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள், குறைஷி ராணுவத்தினரின் நிலைகளை அவ்வப்போது
நபியவர்களுக்கு அனுப்பியவாறு இருந்தனர். இறுதியாக, எதிரிகள் எங்கு முகாம்
அமைத்துள்ளனர் என்பது வரையுள்ள செய்திகள் ஒவ்வொன்றையும் நபி (ஸல்) அவர்களிடம்
கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது மேல்மட்ட ராணுவ ஆலோசனை சபையை நபி (ஸல்) அவர்கள்
ஒன்று கூட்டி, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைப் பரிமாறிக்
கொண்டதுடன், தான் கண்ட ஒரு கனவையும் அவர்களுக்குக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! நான் நல்ல கனவு ஒன்றைக் கண்டேன். சில மாடுகள் அறுக்கப்படுகின்றன. எனது
வாளின் நுனியில் ஓர் ஓட்டை ஏற்படுவதைப் பார்த்தேன். உறுதிமிக்க பாதுகாப்புடைய கவச
ஆடையில் எனது கையை நான் நுழைத்துக் கொள்வதாகவும் பார்த்தேன்” என்று கூறி, “மாடுகள்
அறுக்கப்படுவதின் பொருள் தங்களது தோழர்களில் சிலர் கொல்லப்படுவார்கள். வாளில்
ஏற்பட்ட ஓட்டையின் கருத்து தனது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படுவார். உருக்குச்
சட்டை என்பது மதீனாவாகும்” என்று விளக்கம் கூறினார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் தங்களது அபிப்ராயத்தைத் தோழர்களிடத்தில் கூறினார்கள்.
அதாவது: “மதீனாவை விட்டு நாம் வெளியேறாமல், மதீனாவுக்குள் இருந்து கொண்டே நம்மை
பாதுகாத்துக் கொள்வோம். குறைஷிகள் தங்களின் ராணுவ முகாம்களிலேயே தங்கியிருந்தால்
எவ்விதப் பலனையும் அடையமாட்டார்கள். அவர்கள் தங்குவது அவர்களுக்கே தீங்காக அமையும்.
அவர்கள் மதீனாவுக்குள் நுழைய முயன்றால் முஸ்லிம்கள் தெரு முனைகளிலிருந்து அவர்களை
எதிர்க்க வேண்டும். பெண்கள் வீட்டுக்கு மேலிருந்து தாக்க வேண்டும்.”
நபி (ஸல்) அவர்கள் கூறிய இது உண்மையில் சரியான அபிப்ராயமாகவும் இருந்தது.
நயவஞ்சகர்களின் தலைவனான இப்னு உபை நபி (ஸல்) அவர்களின் இக்கருத்தையே ஆமோதித்தான்.
அவன் கஸ்ரஜ் வமிசத்தவர்களின் முக்கிய பிரமுகர்களில் ஒருவன் என்ற அடிப்படையில்
இச்சபையில் கலந்திருந்தான். ராணுவ ரீதியாக நபி (ஸல்) அவர்களின் கருத்துதான் மிகச்
சரியானது என்பதற்காக இப்னு உபை இக்கருத்துடன் ஒத்துப் போகவில்லை. மாறாக,
அப்போதுதான் எவருக்கும் தெரியாமல் போரிலிருந்து நழுவிவிட இயலும் என்பதற்காகவே இந்த
ஆலோசனையை அவன் ஆமோதித்தான்.
முஸ்லிம்கள் முன்னிலையில் முதல் முறையாக அவனும், அவனது தோழர்களும் இழிவடைய வேண்டும்
அவர்களது நிராகரிப்பையும், நயவஞ்சகத்தனத்தையும் மறைத்திருந்த திரை அவர்களை விட்டு
அகன்றிட வேண்டும் இது நாள் வரை தங்களது சட்டை பைக்குள் ஊடுருவி இருந்த விஷப்
பாம்புகளை முஸ்லிம்கள் தங்களுக்கு சிரமமான இந்நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக அல்லாஹ் முடிவை மாற்றி அமைத்தான்.
பத்ரில் கலக்காத நபித்தோழர்களிலும் மற்ற நபித்தோழர்களிலும் சிறப்புமிக்க ஒரு
குழுவினர் ‘மதீனாவை விட்டு வெளியேறி போர் புரிவதற்கு’ நபி (ஸல்) அவர்களிடம்
ஆலோசனைக் கூறி, அதை வலியுறுத்தவும் செய்தனர். அவர்களில் சிலர் இப்படியும் கூறினர்:
“அல்லாஹ்வின் தூதரே! இந்நாளுக்காக அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்தனை செய்து
வந்ததுடன், இப்படி ஒரு நாளை சந்திக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். அல்லாஹ் அந்நாளை
எங்களுக்கு அருளி இருக்கிறான். புறப்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. எதிரியை
நோக்கிப் புறப்படுங்கள். நாம் அவர்களைப் பார்த்து பயந்து கோழையாகி விட்டதால்தான்
மதீனாவை விட்டு வெளியேற வில்லை என்று அவர்கள் எண்ணிவிடக் கூடாது!”
இவ்வாறு வீரமாக பேசிய நபித்தோழர்களில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஜா இப்னு
அப்துல் முத்தலிபும் ஒருவர். இவர் பத்ர் போரில் கலந்துகொண்டு போற்றத்தக்க அளவில்
பங்காற்றினார். இவர் நபி (ஸல்) அவர்களிடம் “உங்கள் மீது வேதத்தை இறக்கிய
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மதீனாவுக்கு வெளியில் அந்த எதிரிகளை எனது வாளால்
வெட்டி வீழ்த்தாத வரை எந்த உணவும் சாப்பிட மாட்டேன்” என்று சத்தியம் செய்தார்.
(ஸீரத்துல் ஹல்பிய்யா)
உணர்ச்சிமிக்க இந்த வீரர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் தங்களது எண்ணத்தை விட்டுக்
கொடுத்தார்கள். மதீனாவை விட்டு வெளியேறி எதிரிகளைத் திறந்த மைதானத்தில்
சந்திக்கலாம் என்ற முடிவு உறுதியானது.