பக்கம் -61-
இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது
இப்போர் தொடர்பான முக்கியக் கட்டங்கள் ஒவ்வொன்றையும் குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது.
முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்களையும் குர்ஆன் மிகத் தெளிவாக
கூறுகிறது. முஸ்லிம்களின் ஒரு சாராரிடம் இருந்த பலவீனங்களையும் குர்ஆன் வெளிப்படுத்தியது.
இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில் முஸ்லிம்களின் கடமைகள், இந்த சமுதாயம் உருவாக்கப்பட்டதன்
உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம்
என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்த சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள்,
சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளையும் குர்ஆன் கோடிட்டது.
(1) இதுபோன்ற கடுஞ்சோதனையின் போது முஸ்லிம்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய கடமைகள், (2)
இச்சமுதாயம் உருவான உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், (3) மற்ற சமுதாயத்தை விட மிகச் சிறந்த
சமுதாயமாக விளங்குபவர்களிடம் இருக்க வேண்டிய சீரிய பண்புகள் ஆகிய இம்மூன்றையும் முன்வைத்து
பார்க்கும்போது முஸ்லிம்களிடம் அந்த குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்திக்கக் கூடாது
என்று குர்ஆன் உணர்த்துகிறது.
இவ்வாறே நயவஞ்சகர்களின் நிலைமையைப் பற்றி குர்ஆன் விவரிக்கிறது. அல்லாஹ்வின் மீதும்,
அவனது தூதரின் மீதும், நயவஞ்சகர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தி
அவர்களை இழிவடையச் செய்தது. யூதர்களும், நயவஞ்சகர்களும் பரப்பி வந்த சந்தேகங்களையும்,
உறுதி குறைந்த முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்த சந்தேகங்களையும் குர்ஆன் அகற்றியது. மேலும்,
இந்த போரினால் ஏற்படவிருக்கும் நல்ல முடிவுகளையும் அதிலுள்ள நுட்பங்களையும் குர்ஆன்
சுட்டிக் காட்டுகிறது. இப்போரைப் பற்றி அத்தியாயம் ஆல இம்ரானில் அறுபது வசனங்கள் அருளப்பட்டன.
அதில் போரின் தொடக்கதிலிருந்து இறுதி வரை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதன் தொடக்கம்
இவ்வாறு ஆரம்பிக்கிறது.
(நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று
முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும்
செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 3:121
அதன் இறுதி இப்போரின் விளைவுகள் பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் மிகச் சரியான
விமர்சனங்களுடன் முடிகிறது.
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு
மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும்
வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 3:176
இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்
அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: உஹுத் போரிலும் அதில்
முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தவற்றிலும் பல படிப்பினைகளும் இறை நுட்பங்களும் உள்ளன். அவற்றில்
சிலவற்றைக் கீழே பார்ப்போம்:
1) பாவத்தினால் உண்டாகும் கெட்ட முடிவுகள் மற்றும் தடுக்கப்பட்டதை செய்வதனால் ஏற்படும்
தீய விளைவுகள் குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, அம்பெறியும்
வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாற்றம் செய்ததால்
ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.
2) தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும்.
இதில் அடங்கியிருக்கும் நுட்பமாவது: இறைதூதர்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைத்துக்
கொண்டிருந்தால் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவர்களும் தங்களை அல்லாஹ்வை நம்பிககை கொண்டவர்கள்
என்று பெயரளவில் சொல்லிக் கொள்வர். அதனால் உண்மையானவர் யார்? பொய்யர் யார்? என பிரித்து
அறிய முடியாது. எப்போதும் இறைத் தூதர்களுக்கு தோல்வியே ஏற்பட்டு வந்தால் அவர்களைத்
தூதர்களாக அனுப்பிய நோக்கமும் நிறைவேறாது. எனவே, பொய்யர்களிலிருந்து உண்மையானவர்களைப்
பிரித்து விடுவதற்காக வெற்றி தோல்வி இரண்டையும் சேர்த்து வழங்குவதே சரியானது. அதாவது,
நயவங்சகர்களின் நயவஞ்சகத்தனம் முஸ்லிம்களுக்கத் தெரியாமல் இருந்தது. இப்போரில் சொல்லிலும்
செயலிலும் தங்களின் நயவஞ்சகத் தன்மையை அந்நயவஞ்சகர்கள் வெளிப்படுத்திய போது அவர்கள்
முகத்திரை அகன்று, அவர்கள் யார்? எனத் தெளிவாகிவிட்டது. மேலும், முஸ்லிம்கள் தங்களின்
இல்லங்களுக்குள் இருக்கும் எதிரிகளைத் தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து விலகி, அவர்களின்
தீமையை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
3) சில சமயங்களில் அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு
அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு
உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.
4) அல்லாஹ் சொர்க்கத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பல உயர் நிலைகளையும் அந்தஸ்துகளையும்
ஏற்படுத்தியிருக்கின்றான். அதை அவர்கள் வணக்க வழிபாடுகளால் அடைய முடியாதபோது பல சோதனைகளையும்
சிரமங்களையும் அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் அந்த உயர் பதவிகளை அடைந்து கொள்கிறார்கள்.
5) இஸ்லாமிய போரில் உயிர் தியாகம் செய்வது என்பது இறைநேசர்களின் மிக உயர்ந்த பதவியாகும்
அதை அல்லாஹ் தனது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வழங்கினான்.
6) அல்லாஹ் தனது எதிரிகளை அழிக்க நாடினால் அதற்காக அவர்களிடம் காரணங்களை ஏற்படுத்துகிறான்.
அதாவது, அவர்களின் ஓரிறை நிராகரிப்பு, அல்லாஹ்வின் நேசர்களை நோவினை செய்வது போன்றவற்றைக்
காரணமாக்கி அவர்களை அழித்து விடுகிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவர்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பகரமாக ஆக்கி மன்னித்து விடுகிறான். (ஃபதஹுல் பாரி)
அறிஞர் இப்னுல் கய்யிமும் தனது ஜாதுல் மஆது என்ற நூலில் இத்தலைப்பின் கீழ் போதுமான
விவரங்களைத் தந்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் அங்கு பார்க்கலாம்.
உஹுத் போருக்கு பின் அனுப்பட்ட படை பிரிவுகளும் குழுக்களும்.
உஹுத் போரில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்ச்சி இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி
பிற மக்களிடம் இருந்த நற்பெயருக்கு பெரும் பங்கமாக அமைந்தது. முஸ்லிம்களைப் பற்றி பிறர்
உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டு பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு
அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. யூதர்களும்,
நயவஞ்சகர்களும் கிராமத்து அரபிகளும் தங்களின் பகைமையை வெளிப்படையாகக் காட்டினர். இவர்களில்
ஒவ்வொரு வகுப்பினரும் முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்க நாடினர். மேலும், முஸ்லிம்களை
முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டனர்.
உஹுத் போர் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் அஸத் கோத்திரத்தினர்
மதீனாவின் மீது கொள்ளையிட திட்டம் தீட்டினர். இதற்குப் பின் அழல், காரா என்ற இரு வமிசத்தினர்
ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் ஒரு சதித்திட்டம் தீட்டி 10 நபித்தோழர்களைக் கொன்றனர். மேலும்,
இம்மாதத்தில் ஆமிர் இப்னு துபைல் என்பவன் சில கிளையினரை தூண்டிவிட்டு 70 முஸ்லிம்களைக்
கொல்ல வைத்தான். இச்சம்பவம் வரலாற்றில் பிஃரு மஊனா என்ற அறியப்படுகிறது. மேலும், இக்கால
கட்டத்தில் நழிர் வமிச யூதர்கள் வெளிப்படையாக தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இறுதியாக,
ஹிஜ்ரி 4, ரபீஉல் அவ்வல் மாதம் நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவதற்கு சூழ்ச்சி செய்தனர்.
இதே ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதத்தில் கத்ஃபான் கோத்திரத்தார் மதீனாவின் மீது தாக்குதல்
நடத்தத் துணிவு கொண்டனர். முஸ்லிம்கள் மீது பிறருக்கு முன்பிருந்த பயம் உஹுத் போரினால்
அகன்றுவிட்டதால் ஒரு காலம் வரை முஸ்லிம்கள் மாற்றார்கள் மூலம் பல ஆபத்துகளுக்கும் அச்சுறத்தல்களுக்கும்
இலக்காயினர்.
இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கை இந்நிலைமையை
மாற்றியது. முஸ்லிம்களுக்கு அவர்கள் இழந்த மதிப்பை மீட்டு தந்தது. உயர்வையும் கண்ணியத்தையும்
அவர்களுக்கு புதிதாக அளித்தது. இந்த அடிப்படையில் நபியவர்கள் எடுத்த முதல் முயற்சி
அபூஸுஃப்யானின் படையை விரட்டியடிக்க அவர்கள் எடுத்த நடவடிக்கையாகும். இதன் காரணமாக
முஸ்லிம்கள் மதிப்பு சற்று பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்கு இருந்த உயர்வில் ஓரளவு தக்கவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேலும் பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள்
முஸ்லிம்களுக்கு இழந்த கண்ணியத்தையும் மதிப்பையும் மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல்
அதைவிட அதிகமாகவே இப்போது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அடுத்து வரும்
பக்கங்களில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் நடந்த சில சம்பவங்களை
நாம் பார்போம்.
அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)
உஹுதில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்பிய முதல் கூட்டம்
அஸத் இப்னு குஜைமா வமிசமாகும். தல்ஹா இப்னு குவைலித், ஸலமா இப்னு குவைலித் ஆகிய இருவரும்
தங்கள் கூட்டத்தினரையும் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களையும் அழைத்துக் கொண்டு அஸத்
இப்னு குஜைமாவினரிடம் வந்தனர். அவர்களை முஸ்லிம்களின் மீது போர் புரிய தூண்டினர். இந்தச்
செய்தி நபி(ஸல்0 அவர்களுக்குக் கிடைத்தவுடன் 150 வீரர்கள் கொண்ட படைப் பிரிவை ஏற்பாடு
செய்து அஸது கிளையினரை எதிர்க்க அனுப்பினார்கள். இப்படையில் முஹாஜிர்களும் அன்சாரிகளும்
பங்கேற்றனர். அப்படைப் பிரிவிற்கு அபூ ஸலமாவைத் தளபதியாக்கி அவரிடம் கொடியைக் கொடுத்தார்கள்.
அஸத் கிளையினர் தாக்குதல் நடத்த தயாராகும் முன் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கும்
போதே அவர்கள் மீது அபூஸலமா (ரழி) தனது படையினரை அழைத்துக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள்.
இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திக்குமுக்காடி தப்பித்துக் கொள்ள பல பக்கங்களிலும்
சிதறி ஓடி ஒளிந்தனர். முஸ்லிம்கள் அஸதினரின் ஒட்டகங்களையும் ஆடுகளையும் பிடித்துக்
கொண்டு மதீனா வந்தனர். அஸதினர் எதிர்க்காததால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.
ஏற்கனவே அபூ ஸலமாவிற்கு உஹுத் போரில் ஏற்பட்ட காயம் பெரிதாகி விடவே போரிலிருந்து மதீனா
வந்தடைந்த சில நாட்களிலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. (ஜாதுல் மஆது)