பக்கம் -69-
ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்த போது நபியவர்கள்
தங்களது தோழர்களிடம் “உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் “ஸஅதே! இந்த யூதர்கள்
உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்” என்றார்கள். அப்போது ஸஅது (ரழி)
“எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு
மற்றவர்கள் “ஆம்! செல்லுபடியாகும்” என்றனர். பிறகு ஸஅது (ரழி) “முஸ்லிம்களின் மீது
எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். அப்போது
“இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது
தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் “ஆம்! நானும் உங்களுடைய
தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில்
தீர்ப்பு கூறினார்கள்:
“ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின்
சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு” என
ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் “ஏழு வானங்களுக்கு மேலிருக்கும்
அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்கள்.
உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே! ஏனெனில்,
குரைளா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க
வேண்டுமென்பதற்காக 1500 வாட்களையும், 2000 ஈட்டிகளையும், 300 கவச ஆடைகளையும், 500 இரும்புக்
கேடயங்களையும், ஒரு தோலினாலான கேடயத்தையும் சேகரித்து வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள்
அவர்களுடைய இல்லங்களை வெற்றி கொண்ட பின் கைப்பற்றினர்.
இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ்
என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக
மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு
அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது. பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக
அழைத்துச் செல்லப்படும்போது அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் “தலைவரே! எங்களை
அழைத்துச் சென்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்!” என்றனர். அதற்கு கஅப் “என்ன! உங்களுக்கு
எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார்.
அழைத்துச் செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது கூட புரியவில்லையா? அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?” என்றார். அவர்கள்
600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இவ்வாறு மோசடி மற்றும் வஞ்சக குணமுள்ள விஷப் பாம்புகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன.
இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக
குவிந்த ராணுவங்களுக்கும் உதவியும் செய்தனர். அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான
நேரமாக இருந்தது. ஆகவே, யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர்.
எனவே, அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.
இந்த குரைளா யூதர்களுடன் நளீர் யூதர்களைச் சேர்ந்த கொடிய ஷைத்தான் ஹய் இப்னு அக்தப்
என்பவனும் கொலை செய்யப்பட்டான். இவன் நமது அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களின் தந்தையாவான்.
இவன்தான் இப்போரின் போது முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி கஅப்
இப்னு அஸ்அதைத் தூண்டினான். இதன் விவரத்தை முன்பே நாம் கூறியிருக்கிறோம். குறைஷி மற்றும்
கத்ஃபான் இனத்தவர்கள் போரிலிருந்து திரும்பிச் சென்ற பின் ஹய் இப்னு அக்தப், தான் கொடுத்த
வாக்கை நிறைவேற்றுவதற்காக குரைளா யூதர்களின் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். மற்றவர்களுடன்
இவனும் கைது செய்யப்பட்டு, கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அழைத்து
வரப்பட்டான். தன்னை கொன்றதற்குப் பின் தனது ஆடைகளை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது
என்பதற்காக அனைத்து பக்கங்களிலும் விரல்களின் நுனி அளவிற்கு கிழித்து ஓட்டையிட்டுக்
கொண்டான். நபியவர்களுக்கு அருகில் இவனை அழைத்து வந்த போது அவன் நபியவர்களைப் பார்த்து
“உன்னைப் பகைத்துப் கொண்டதற்காக நான் என்னை இகழவில்லை. இருப்பினும் அல்லாஹ்வுடன் மோதியவன்
தோற்றுவிடுவான் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டு “மக்களே! அல்லாஹ்வின் கட்டளையைப்
பற்றி நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற சோதனைகளையும் போர்களையும் அல்லாஹ் இஸ்ரவேலர்கள்
(யூதர்கள்) மீது விதித்து விட்டான்” என்று கூறினான். பிறகு அவனது தலை வெட்டப்பட்டது.
கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித்தோழரை ஒரு யூதப் பெண் மாவாட்டும் திருகையால்
கொன்று விட்டாள். எனவே, அப்பெண்ணையும் பழிக்குப் பழி கொல்லப்பட்டது.
முடி முளைத்த அனைவரையும் கொன்று, முடி முளைக்காதவர்களை விட்டு விடும்படி நபி (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். முடி முளைக்காதவர்களில் ‘அத்தியா’ என்ற ஒரு சிறுவர் இருந்தார்.
பிற்காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராக மாறினார். (முடி முளைத்தவர்கள்
என்பது (மேஜர்) பருவமடைந்தவர்களையும் முடி முளைக்காதவர் என்பது (மைனர்) பருவமடையாதவர்களையும்
குறிக்கும்).
ஸாபித் இப்னு கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதரையும் அவரது
குடும்பத்தார்கள் மற்றும் பொருட்களையும் தனக்கு தந்துவிடுமாறு நபியவர்களிடம் கோரினார்.
நபியவர்களும் அவர் கேட்டவாறே கொடுத்து விட்டார்கள். நபித்தோழர் ஸாபித்துக்கு இதற்கு
முன் இந்த யூதர் உதவி புரிந்திருந்தார். ஸாபித் அவரிடம் “உன்னையும் உமது பொருளையும்,
உமது குடும்பத்தார்களையும் நபியவர்கள் எனக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். நான்
அவற்றைத் திரும்ப உனக்கே கொடுத்து விடுகிறேன்” என்றார். ஆனால், அந்த ஜுபைர் இப்னு பாத்தா
என்ற யூதன் “ஸாபித்தே நான் உனக்கு செய்த உதவியின் பொருட்டால் கேட்கிறேன். என்னைக் கொன்று
என்னுடைய சகோதரர்களுடன் சேர்த்துவிடு” என்றான். ஸாபித் அவனது கழுத்தைச் சீவி அவனது
நண்பர்களுடனேயே சேர்த்து விட்டு, அவனது மகன் அப்துர் ரஹ்மான் இப்னு ஜுபைரை உயிரோடு
விட்டுவிட்டார். இவர் பிறகு இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.
உம்முல் முன்திர் ஸல்மா பின்த் கைஸ் (ரழி) என்ற ஸஹாபிப் பெண்மணி ‘ஃபாஆ இப்னு ஸம்வால்’
என்ற யூதரைத் தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும்படி நபியவர்களிடம் கேட்டார். நபியவர்கள்
கொடுத்துவிடவே அப்பெண்மணி அவரை உயிரோடு விட்டுவிட்டார். அந்த யூதர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின்
தோழராகி விட்டார்.
அன்றிரவு கோட்டையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன் சிலர் இஸ்லாமை ஏற்றனர். எனவே, அவர்களைக்
கைது செய்யவில்லை. அவர்களது பொருட்களும் குடும்பங்களும் பாதுகாக்கப்பட்டன.
அம்ர் இப்னு ஸஅதி என்ற ஒரு யூதர் இருந்தார். நபியவர்களுக்குத் தனது இனத்தவர் செய்த
மோசடியில் அவர் கூட்டு சேரவில்லை. அன்றிரவு அவர் கோட்டையில் இருந்து வெளியேறியதை பாதுகாப்புப்
படையின் தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமா பார்த்தார். அவரைப் பற்றி முஹம்மது
இப்னு மஸ்லமாவிற்கு தெரிய வரவே அவர் தப்பித்துச் செல்வதற்கு வழிவிட்டார். ஆனால் அவர்
எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற விவரம் வரலாற்றில் அறியப்படவில்லை.
குரைளாவினன் பொருட்களில் ஐந்தில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் ஒதுக்கிவிட்டு மீதத்தை தங்களின்
தோழர்களுக்குப் பங்கிட்டார்கள். அதாவது, குதிரை வீரர்களுக்கு மூன்று பங்கும் (ஒரு பங்கு
அவருக்கும் மற்ற இரு பங்கு குதிரைக்கும்) காலாட்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும்
என நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஸஅது இப்னு ஜைது (ரழி) என்ற அன்சாரி தோழன் தலைமையில்
கைதிகளை விற்று வர ஒரு குழுவை நபியவர்கள் நஜ்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு
சென்று கைதிகளை விற்று குதிரைகளையும் ஆயுதங்களையும் வாங்கி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைதியாக இருந்த பெண்களில் தனக்கென ரைஹானா பின்த் அம்ர் இப்னு குனாஃபா
என்பவரை எடுத்துக் கொண்டார்கள். இவர் நபியவர்களின் வாழ்நாள் வரை அவர்களுடன் இருந்தார்
என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (இப்னு ஹிஷாம்)
ஆனால், வேறு சிலர் கூறுவதாவது: நபி (ஸல்) இவரை விடுதலை செய்து, பின்பு ஹிஜ்ரி 6ல் திருமணம்
செய்து கொண்டார்கள். நபியவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது இவர் இறந்துவிட்டார்.
நபியவர்கள் இவரை பகீஃ மண்ணறையில் அடக்கம் செய்தார்கள். (தல்கீஹ்)
குரைளாவின் பிரச்சனை முடிந்தவுடன் ஸஅது இப்னு முஆத் (ரழி) தன் விஷயத்தில் செய்த வேண்டுதலை
அல்லாஹ் அங்கீகத்தான். ஸஅதின் வேண்டுதல் என்ன என்று இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இவருக்கென பள்ளிவாசலில் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்கள். நபியவர்கள்
அவரை அங்கு தங்க வைத்து அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள். சில நாட்களில் அவரது
காயம் வீங்கி உடைந்தது. அதிலிருந்து வழிந்த இரத்தம் கிஃபார் கிளையினருக்காக பள்ளியில்
கட்டப்பட்டிருந்த கூடாரத்தில் பரவியது. அதைப் பார்த்து அக்கூடாரத்தில் இருந்தவர்கள்
“இது என்ன! உங்கள் கூடாரத்திலிருந்து வருகிறதே!” என்று கேட்டனர். அங்கு சென்று பார்க்கையில்
ஸஅது (ரழி) அவர்களின் காயம் உடைந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியில் அவர்கள்
அக்காயத்தினாலேயே இறந்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே” குலுங்கியது என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஅது இப்னு முஆதின் ஜனாஸாவை (பிரேதத்தைச்) சுமந்து சென்றபோது அது மிக இலேசாக இருந்தது.
நயவஞ்சகர்கள் “என்ன இவரது ஜனாஸா இவ்வளவு இலேசாக உள்ளதே?” என்றனர். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் “நிச்சயமாக வானவர்கள் அதைச் சுமந்து செல்கிறார்கள்” என்றார்கள். (ஸுனனுத் திர்மிதி)
குரைளாவினரை முற்றுகையிட்டிருந்த போது கல்லாத் இப்னு ஸுவைத் (ரழி) என்ற நபித்தோழர்
யூதப் பெண் ஒருத்தியால் கொல்லப்பட்டார். மேலும், உக்காஷாவின் சகோதரர் அபூ ஸினான் இப்னு
மிஹ்ஸன் (ரழி) என்பவரும் முற்றுகையின் காலத்தில் இறந்தார்கள்.
அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின்
நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார். அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும்
தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில்
இருந்த போது அதிகாலை ஸஹர் நேரத்தில் அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான வசனம் இறங்கியது.
உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக “அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி
பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்” என்று கூறினார். இச்செய்தியைக்
கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்)
அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள்
சுபுஹு தொழுகைக்கு வந்த போது அவரை அவிழ்த்து விட்டார்கள்.
இந்தப் போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. முற்றுகை மொத்தம் இருபத்தைந்து
இரவுகள் நீடித்தது.(ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அல்லாஹுத் தஆலா அகழ் போர் தொடர்பாகவும், குரைளா போர் தொடர்பாகவும் ‘அஹ்ஸாப்’ எனும்
அத்தியாத்தில் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் இச்சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய
நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டு கூறியிருக்கிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்கள் மற்றும்
நயவஞ்சகர்களின் நிலைமைகளையும், முஸ்லிம்களை எதிர்க்க வந்த இராணுவங்கள் தோற்றுப்போனதையும்,
மோசடி செய்யும் யூதர்களின் நிலைமை என்னவானது என்பதையும் அதில் தெளிவாக அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான்.