பக்கம் -70-

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்... (ஹிஜ் 5, துல்கஅதா)

இவனது புனைப் பெயர் ‘அபூராஃபி’ எனப்படும். யூத இனத்தைச் சேர்ந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன். இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான். (ஃபத்ஹுல் பாரி)

இவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்தான். குரைளா யூதர்களின் பிரச்சனையை முடித்த பின் அவனைக் கொலை செய்துவிட கஸ்ரஜ் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினர். இதற்கு முன் இவனைப் போன்ற கொடியவன் கஅபு இப்னு அஷ்ரஃபை அவ்ஸ் கிளையினர் கொன்றதால் அதுபோன்ற ஒரு சிறப்பைத் தாங்களும் அடைய வேண்டும் என கஸ்ரஜ் கிளையினர் விரும்பினர். எனவே, நபியவர்களிடம் அதற்கு அனுமதி கோருவதில் தீவிரம் காட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், அவனைத் தவிர அங்குள்ள சிறுவர்களை அல்லது பெண்களை கொல்லக் கூடாது என தடை விதித்தார்கள். நபியவர்களிடம் அனுமதி பெற்று ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக புறப்பட்டுச் சென்றது. இவர்கள் அனைவரும் கஸ்ரஜ் கிளையினரில் ஸலமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் தளபதியாக அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) இருந்தார். இக்குழு அபூராஃபியின் கோட்டை இருந்த கைபர் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இவர்கள் கோட்டையை அடையும் போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டது. மக்கள் தங்களின் கால்நடைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு அதீக் தனது தோழர்களிடம் “நீங்கள் இங்கு இருங்கள். நான் சென்று வாயில் காவலரிடம் நளினமாகப் பேசிப் பார்க்கிறேன். முடிந்தால் நான் கோட்டைக்குள் நுழைந்து விடுகிறேன் என்று கூறி புறப்பட்டார். கோட்டை கதவுக்கருகில் சென்ற போது தன்னை ஆடையால் மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது போல் அமர்ந்து கொண்டார். கோட்டைக்குள் செல்ல வேண்டிய மக்கள் சென்று விட்டனர். அப்போது வாயில் காவலரிடம் “அல்லாஹ்வின் அடியானே! உள்ளே செல்வதாக இருந்தால் இப்போதே சென்றுவிடு. நான் கதவை மூடப் போகிறேன்” என்றான்.

அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) கூறுகிறார்கள்: நான் கோட்டைக்குள் சென்று ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டேன். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர் என்று தெரிந்தவுடன் வாயில் காவலாளி கதவை மூடினான். பின்பு சாவிகளை ஓர் ஆணியில் தொங்க விட்டான். நான் அந்த சாவிகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அபூ ராஃபி, சில நண்பர்களுடன் அவனது அறையில் இராக்கதைகள் பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர்கள் சென்றபின் நான் அவனது அறையை நோக்கி மேலே ஏறினேன். ஒவ்வொரு கதவாக திறந்து உள்ளே சென்றவுடன் அக்கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டேன். அதாவது இங்கு உள்ளவர்களுக்கு நான் இருப்பது தெரிந்து, என்னை நோக்கி பிடிப்பதற்கு வந்தாலும் அவர்கள் என்னை பிடிப்பதற்குள் நான் அவனைக் கொன்று விடலாம் என்பதற்காக இவ்வாறு செய்தேன். இறுதியாக அவன் இருந்த இடம் வரை சென்று விட்டேன். ஒரு இருட்டறையில் தனது குடும்பத்தார்களுடன் இருந்தான். ஆயினும், அறையில் எப்பகுதியில் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நான் “அபூ ராஃபி! என்று சப்தமிட்டு அழைத்தேன். அவன் “யாரது?” என்று வியந்து கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையை நோக்கிப் பயந்தவனாகவே எனது வாளை வீசினேன். ஆனால், எனது முயற்சி பலனளிக்கவில்லை. அவன் கூச்சலிடவே நான் உடனடியாக அறையிலிருந்து வெளியேறி ஒளிந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து திரும்ப அறைக்குள் சென்று “அபூ ராஃபியே! சற்று நேரத்திற்கு முன் இங்கு என்ன சப்தம்?” என்றேன். அதற்கவன் “உனது தாய்க்கு நாசம் உண்டாகட்டும். சற்று நேரத்திற்கு முன் ஒருவன் என்னைக் கொல்ல வந்தான்” என்றான். உடனே நான் மற்றொரு முறை அவனை வாளால் வெட்டிக் காயப்படுத்தினேன். ஆனால், அவனைக் கொல்ல முடியவில்லை. பின்பு வாளால் அவனது வயிற்றில் குத்தினேன். அதன் நுனி முதுகுப்புறமாக வெளிவந்தது. அதனால் நான் அவனை இம்முறை நிச்சயமாக கொன்றுவிட்டேன் என்று தெரிந்து கொண்டேன். பின்பு ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டு ஓர் ஏணியின் வழியாக கீழே இறங்கும் போது ஏணிப்படிகள் முடிந்துவிட்டன என்று எண்ணிக் காலை வைக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டேன். அதில் எனது கெண்டைக் கால் உடைந்து விட்டது. தலைப்பாகையால் என் காலைக் கட்டிக் கொண்டு நடந்து வந்து வாசலருகில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைக் கொன்று விட்டேன் என்று உறுதியாகத் தெரியும்வரை வெளியில் செல்லாமல் இன்றிரவை இங்கேயே கழிப்பது என்று முடிவு செய்தேன். காலையில் மரணச் செய்தி அறிவிப்பவன் “ஜாஸ் மாநிலத்தின் மாபெரும் வியாபாரப் பிரமுகர் அபூ ராஃபி கொல்லப்பட்டு விட்டார்” என்று அறிவித்தான். இதை நான் எனது தோழர்களிடம் வந்து கூறினேன். “வெற்றி கிடைத்து விட்டது, அல்லாஹ் அபூ ராஃபியைக் கொன்று விட்டான்” என்று கூறினேன். இதற்குப் பின் நான் நபியவர்களிடம் சென்று முழு விவரத்தையும் கூறினேன். அப்போது நபியவர்கள் உனது காலை நீட்டுவாயாக! என்று கூறினார்கள். நான் எனது காலை நீட்டியவுடன் நபியவர்கள் அதன் மீது தடவினார்கள். அது முற்றிலும் குணமடைந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை நாம் கூறிய இந்நிகழ்ச்சி இமாம் புகாரி (ரஹ்) அறிவித்ததாகும். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இதற்கு சற்று மாற்றமாக அறிவிக்கிறார்: அதாவது, அனைத்து நபித்தோழர்களும் கோட்டைக்குள் சென்று அபூ ராஃபியைக் கொல்வதில் பங்கெடுத்தனர். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) என்ற தோழர்தான் அவனை வாளால் வெட்டினார். அப்துல்லாஹ் இப்னு அதீக்கின் கெண்டைக்கால் உடைந்து விட்டதால் மற்ற தோழர்கள் அவரைச் சுமந்து கொண்டு கோட்டைக்குள் தண்ணீர் வருவதற்காக இருந்த வழியின் உள் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். கோட்டையில் இருந்த யூதர்கள் நெருப்பை மூட்டி விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் அவர்களால் நபித்தோழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு யூதர்கள் அனைவரும் தங்கள் தலைவன் நிலையை அறிய திரும்பினர். அதற்குப் பின் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அதீக்கை சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் ஹிஜ்ரி 5 துல்கஅதா அல்லது துல்ஹஜ் மாதத்தில் நடைபெற்றது. (ரஹ்மதுல் லில் ஆலமீன்)

மேற்கூறப்பட்ட அகழ் மற்றும் குரைளா போர்களிலிருந்து ஓய்வு பெற்றபோது அமைதிக்கும், சமாதானத்திற்கும் பணியாமல் இருந்த கிராம அரபிகளையும் மற்ற அரபுக் குலத்தவர்களையும் கண்டித்து பாடம் கற்பிக்கும் விதமாக பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள். அவற்றின் விவரம் வருமாறு:

முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

இது அகழ் மற்றும் குரைளா போர்களுக்குப் பின் அனுப்பப்பட்ட முதல் படை. இப்படையில் முப்பது வீரர்கள் இருந்தனர்.

நஜ்து மாநிலத்திலுள்ள ‘பகராத்’ என்ற பகுதியில் ‘ழய்யா’ என்ற ஊர் வழியாக ‘கர்தா’ என்ற இடத்தை நோக்கி இப்படை புறப்பட்டது. ழய்யாவுக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள பயண தூரம் ஏழு இரவுகளாகும். இப்படையின் நோக்கம் அங்கு வசித்து வந்த பக்ர் இப்னு கிளாப் கிளையினரைத் தாக்குவதாகும். முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிரிகள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். முஸ்லிம்கள் அங்குள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு முஹர்ரம் பிறை இறுதியில் மதீனா வந்து சேர்ந்தனர்.

தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, சுமாமா இப்னு உஸால் என்பவரை நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து அனுப்பினான். இவர் ஹனீஃபா என்ற கிளையினரின் தலைவர் ஆவார். இவரை இப்படையினர் வழியில் கைது செய்து தங்களுடன் அழைத்து வந்தனர். (ஸீரத்துல் ஹல்பியா)

இவரை மதீனாவின் பள்ளியிலுள்ள ஒரு தூணில் முஸ்லிம்கள் கட்டிவிட்டனர். அவரை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து “சுமாமா நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “முஹம்மதே! என்னிடத்தில் நன்மை இருக்கிறது. நீர் என்னைக் கொலை செய்ய நாடினால் அத்தண்டனைக்குத் தகுதியான ஒருவரைத்தான் கொலை செய்தவராவீர்! நீர் எனக்கு உதவி செய்து என்னை விட்டுவிட்டால் உங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். உங்களுக்கு பொருள் வேண்டும் என்றால் என்னிடம் கேள். நீர் விரும்பிய அளவு நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறினார். நபியவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டார்கள்.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் அவருக்கருகில் சென்ற போது அவரிடம் முன்னர் கேட்டது போல் கேட்கவே அவரும் முன்பு சொன்ன பதிலையே கூறினார். நபியவர்கள் அவரை அப்படியே விட்டுச் சென்று விட்டார்கள். மூன்றாவது முறை நபியவர்கள் அவர் அருகில் சென்று அதேபோன்று கேட்க அவரும் தனது பழைய பதிலையே திரும்பக் கூறினார். அப்போது நபியவர்கள் சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று தனது தோழர்களுக்குக் கூறவே, தோழர்கள் அவரை அவிழ்த்து விட்டார்கள். அவர் பள்ளிக்கு அருகிலிருந்த பேரீச்சம் பழ தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு நபியவர்கள் முன்னிலையில் இஸ்லாமை ஏற்றார்.

பின்பு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முன்போ இப்பூமியில் உங்களது முகத்தைவிட வெறுப்பான ஒரு முகம் எனக்கு இருந்ததில்லை. ஆனால், இன்று உங்களது முகமே முகங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாகி விட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்பூமியில் உங்களது மார்க்கத்தை விட வெறுப்பான மார்க்கம் எனக்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை. ஆனால், இப்போது உங்களது மார்க்கம் மார்க்கங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாக மாறிவிட்டது. உங்களின் படை என்னை கைது செய்த போது நான் உம்ராவிற்காக சென்று கொண்டிருந்தேன். நான் இப்போது என்ன செய்ய? என்று அவர் கேட்க, நபியவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, அவர் நாடி வந்த உம்ராவை முடித்து வருமாறு கூறினார்கள்.

அவர் அங்கிருந்து புறப்பட்டு மக்கா வந்தவுடன் அவரைப் பார்த்த குறைஷிகள் “சுமாமா நீர் என்ன மதம் மாறிவிட்டீரா?” என்று கேட்டனர். அதற்கவர் “இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் முஹம்மதுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக!” கூறுகிறேன். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை யமாமாவிலிருந்து உங்களுக்கு எந்த கோதுமை தானியங்களும் வராது. (யமாமாவிலிருந்துதான் மக்காவிற்கு கோதுமை வந்து கொண்டிருக்கிறது.) உம்ராவை முடித்துக் கொண்டு சுமாமா தனது ஊருக்குச் சென்றவுடன் அங்கிருந்து மக்காவிற்கு தானியங்கள் வருவதைத் தடுத்துவிட்டார். இதனால் குறைஷிகள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி நபியவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, சுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்கு கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை நபியவர்கள் நிறைவேற்றினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)